செய்திகள்

ஆப்கானிஸ்தான் 91 ரன்களில் அபார வெற்றி: வெளியேறியது இலங்கை

DIN


ஆப்கானிஸ்தானிடம் 91 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியுற்று இலங்கை அணி ஆசிய கோப்பை போட்டியில் இருந்தே வெளியேறியது.
முதலில் ஆடிய ஆப்கன் அணி 249 ரன்களை குவித்தது. பின்னர் ஆடிய இலங்கை 158 ரன்களையே எடுத்து தோல்வியைத் தழுவியது.
ஆசிய கோப்பையின் ஒரு பகுதியாக இலங்கை-ஆப்கானிஸ்தான் அணிகள் இடையிலான ஆட்டம் அபுதாபியில் திங்கள்கிழமை நடைபெற்றது.
டாஸ் வென்ற ஆப்கன் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன் தொடக்க வீரர்கள் முகமது ஷஸாத், இஷானுல்லா ஜனத் ஆகியோர் சீரான தொடக்கத்தை தந்தனர். ஷஸாத் 34 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து இஷானுல்லா 45 ரன்களுக்கு வெளியேறினார்.
ரஹ்மத் ஷா 72: பின்னர் வந்த ரஹ்மத் ஷா 5 பவுண்டரிகளுடன் 72 ரன்களை குவித்து அணியின் ரன் எண்ணிக்கை உயர காரணமாக இருந்தார். ஹஸ்மத்துல்லா ஷஹிதி 35 தவிர மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். அஷ்கர் ஆப்கன் 1, முகமது நபி 15, நஜிபுல்லா ஸத்ரன் 12, குல்பதின் நைப் 4, ரஷீத் கான் 13, முஜிப்பூர் ரஹ்மான் 0 ரன்களுக்கு ஆட்டமிழந்தனர். 7 ரன்களுடன் அப்தாப் ஆலம் ஆட்டமிழக்காமல் இருந்தார். இறுதியில் 50 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டையும் இழந்து ஆப்கன் அணி 249 ரன்களை எடுத்திருந்தது.
இலங்கை தரப்பில் திஸாரா பெரைரா அபாரமாக பந்து வீசி 55 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்து 5 விக்கெட்டை வீழ்த்தினார். அகிலா தனஞ்ஜெயா 2-39, மலிங்கா, துஷ்மந்தா, ஷேஹன் ஆகியோர் தலா 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.
250 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய இலங்கைக்கு தொடக்கமே அதிர்ச்சியாக அமைந்தது. தொடக்க வீரர் குஸால் மெண்டீஸ் ரன் ஏதுமின்றி முஜீப் பந்தில் எல்பிடபியுள்யு ஆனார். தனஞ்ஜெய டி சில்வா 23 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். 14 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 56 ரன்களை எடுத்திருந்தது இலங்கை அணி.
சரிந்த இலங்கை விக்கெட்டுகள்: பின்னர் ஆட வந்த இலங்கை வீரர்கள் எவரும் நிலைத்து ஆடவில்லை. உபுல் தரங்கா 36, குஸால் பெரைரா 17, கேப்டன் ஏஞ்சலோ மேத்யூஸ் 22, ஷேஹன் ஜெயசூர்யா 14, அகிலா தனஞ்ஜெயா 2, திஸாரா பெரைரா 28 ரன்களுக்கும், மலிங்கா 1 ரன்னுக்கும், தாசுன் சனகா ரன் ஏதுமின்றியும் ஆட்டமிழந்தனர். ஆப்கன் சுழற்பந்து வீச்சை எதிர்கொள்ள முடியாமல் இலங்கை அணியின் விக்கெட்டுகள் சீரான இடைவெளியில் சரிந்தன.
இறுதியில் 41.2 ஓவர்களிலேயே அனைத்து விக்கெட்டையும் இழந்து இலங்கை 158 ரன்களை எடுத்து தோல்வியடைந்தது. ஆப்கன் தரப்பில் முஜிபூர் ரஹ்மான் 2-32, நைப் 2-29, நபி 2-30, ஷேக் ரஷீத் 2-26 விக்கெட்டை வீழ்த்தினர்.
கோப்பை வெல்லும் அணிகளில் ஒன்றாக கருதப்பட்ட வலிமை வாய்ந்த இலங்கை 91 ரன்களில் தோல்வியுற்று போட்டியில் இருந்தே வெளியேறியது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வணிகா் தினம்: தமிழகத்தில் இன்று கடைகள் இயங்காது

அந்நியச் செலாவணி கையிருப்பு 63,792 கோடி டாலராகக் குறைவு

கோடை வெயில் தாக்கம் அதிகரிப்பு: வேளாங்கண்ணியில் பக்தா்களுக்கு சிறப்பு வசதிகள்

தமிழகத்தில் மூன்று ஆண்டுகளில் 6,115 புத்தாக்கத் தொழில்கள் தொடக்கம்

மக்களவைத் தோ்தல்: லடாக் தொகுதியில் 5 போ் போட்டி

SCROLL FOR NEXT