முதல் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி (1975): சாம்பியன் மே.இ.தீவுகள்
கால்பந்து, டென்னிஸ், கூடைப்பந்து, ஹாக்கி போன்ற விளையாட்டுக்களின் வரிசையில் உலகளவில் வரவேற்பை பெற்றுள்ளது கிரிக்கெட்.
கால்பந்து, டென்னிஸ், கூடைப்பந்து, ஹாக்கி போன்ற விளையாட்டுக்களின் வரிசையில் உலகளவில் வரவேற்பை பெற்றுள்ளது கிரிக்கெட்.
டெஸ்ட், ஒருநாள், டி20 என பல்வேறு வடிவங்களில் ஆடப்பட்டு வரும் கிரிக்கெட்டின் முதல் உலகக் கோப்பை (புருடென்ஷியல் கோப்பை) 1975 ஜூன் 7 முதல் 21-ஆம் தேதி வரை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் சார்பில் நடைபெற்றது.
6 டெஸ்ட் ஆடும் நாடுகளான ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, இந்தியா, நியூஸிலாந்து, பாகிஸ்தான், மே.இ.தீவுகள், இணை உறுப்பினர்களான இலங்கை, கிழக்கு ஆப்பிரிக்க அணிகள் என 8 அணிகள் பங்கேற்றன. ரவுண்ட் ராபின் மறறும் நாக் அவுட் அடிப்படையில் 2 குழுக்களாக பிரிக்கப்பட்டு ஒவ்வொரு குழுவிலும் முதலிரண்டு இடங்களை பெற்ற அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெற்றன.
60 ஓவர்கள் அடிப்படையில் நடைபெற்ற ஆட்டத்தில் முற்றிலும் வெள்ளை நிற உடைகளை வீரர்கள் அணிந்தனர். அரையிறுதியில் ஆஸ்திரேலியா-இங்கிலாந்தையும், மே.இ.தீவுகள்-நியூஸிலாந்தையும் வீழ்த்தி இறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றன.
முதல் சாம்பியன் மே.இ.தீவுகள்: லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவை 17 ரன்கள் வித்தியாசத்தில் வென்று முதல் சாம்பியன் பட்டத்தை வென்றது மே.இ.தீவுகள். முதலில் ஆடிய மே.இ.தீவுகள் 291/8 ரன்களை குவித்தது. கேப்டன் கிளைவ் லாயிட் சதமடித்தார் (102). பின்னர் ஆடிய ஆஸ்திரேலியா 274 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அந்த அணியின் கேப்டன் இயான் சேப்பல் 62. ஆட்டநாயகனாக கிளைவ் லாயிட் தேர்வு செய்யப்பட்டார்.
1.58 லட்சம் பார்வையாளர்கள்: முதல் உலகக் கோப்பை போட்டியில் ஒரு ஆட்டத்துக்கு 10,533 வீதம் மொத்தம் 1.58 லட்சம் பார்வையாளர்கள் கண்டு களித்தனர்.
60 ஓவர்கள் ஆடி 36 ரன்களையே எடுத்த கவாஸ்கர்: இந்தியாவும்-இங்கிலாந்தும் மோதிய தொடக்க ஆட்டத்தில் முதலில் ஆடிய இங்கிலாந்து 334/4 ரன்களை குவித்தது. பின்னர் ஆடிய இந்தியா 132/3 ரன்களை மட்டுமே எடுத்தது. சுனில் கவாஸ்கர் 60 ஓவர்கள் முழுமையாக ஆடி 32 ரன்களை மட்டுமே எடுத்தார். இதனால் ரசிகர்கள் பலமுறை மைதானத்தில் நுழைந்து இடையூறு செய்தனர்.
இந்திய அணி முதல் ஆட்டத்தில் இங்கிலாந்திடம் 202 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது. கிழக்கு ஆப்பிரிக்க அணியை 10 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. நியூஸிலாந்திடம் 4 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியுற்றது.
நியூஸிலாந்து வீரர் கிளென் டர்னர் 333 ரன்களும், கேரி கில்மர் 11 விக்கெட்டுகளையும் வீழ்த்தி சாதனை படைத்தனர்.