முகப்பு
செய்திகள்

இந்திய அணியில் இடம் பெற்றுள்ள இளம் புதுமுக வீரர்கள்

மே,இ,தீவுகள் அணியுடன் நடைபெறவுள்ள டி20 மற்றும் ஒருநாள் தொடரில் ஆடவுள்ள இந்திய அணியில் இளம் புதுமுக வீரர்கள்இடம் பெற்றுள்ளனர்.

Updated On : 31 ஜனவரி, 2024 at 9:42 AM
பகிர்:

மே,இ,தீவுகள் அணியுடன் நடைபெறவுள்ள டி20 மற்றும் ஒருநாள் தொடரில் ஆடவுள்ள இந்திய அணியில் இளம் புதுமுக வீரர்கள்
இடம் பெற்றுள்ளனர். அவர்கள் திறமையாக ஆடி இந்திய அணியில் நிலையான இடத்தை பெறுவர் என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

ஷிரேயஸ் ஐயர்
ஐபிஎல் தொடரில் தில்லி அணியின் கேப்டனாக திறமையாக செயல்பட்டு பிளே ஆஃப் சுற்றுக்கு தனது அணியை தகுதி பெறச் செய்தார். கடந்த 2017-இல் இலங்கைக்கு எதிராக ஒருநாள் ஆட்டத்தில் அறிமுகமான ஷிரேயஸ் 6 ஆட்டங்களில் ஸ்ட்ரைக் ரேட் 96.33 ஆகும்.  ஒருநாள் தொடரில் ஆடி ஓராண்டுக்கு மேலான நிலையிலும், உள்ளூர் ஆட்டங்களில் ஷிரேயஸ்  ஐயர் பேட்டிங் அபாரமாக உள்ளது. ஐபிஎல் 2019-இல் 463 ரன்களை விளாசினார். மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனான ஷிரேயஸ் நான்காம் நிலை பேட்ஸ்மேன் இடத்தை நிரப்ப தகுதியானவர்.

தீபக் சாஹர் 
26 வயதான ஸ்விங் பவுலரான தீபக் சாகர் 2018-இல் ஒருநாள், டி20 ஆட்டத்தில் அறிமுகமானார். எனினும் தொடர்ந்து சர்வதேச அனுபவம் பெறவில்லை. ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முக்கிய வேகப்பந்து வீச்சாளராக உள்ள தீபக், ரஞ்சி போட்டியில் 8-10 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அனைத்து நேரங்களிலும் கட்டுப்பாடாகவும், பந்தை ஸ்விங் செய்வதும் அவரது திறனாகும்.

ராகுல் சாஹர்
தீபக் சாஹரின் உறவினரான ராகுல், 2019 ஐபிஎல் போட்டிக்காக ரூ.1.9 கோடிக்கு மும்பை இந்தியன்ஸ் அணியால் வாங்கப்பட்டார்.
 லெக் ஸ்பின்னரான ராகுல், ஐபிஎல் தொடரில் 13 விக்கெட்டுகளை சாய்த்தார். 
மிடில் ஓவர்களில் சிறப்பாக வீசும் ராகுல், இந்திய ஏ அணியில் இடம் பெற்றார். தற்போது ஒருநாள், டி20 தொடருக்கான அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

க்ருணால் பாண்டியா
ஆல்ரவுண்டர் க்ருணால் பாண்டியா,  பேட்டிங், பவுலிங், பீல்டிங் என மூன்றிலும் திறம்பட செயல்படக் கூடியவர். இந்திய அணியில் நிலையான இடத்தை அவரால் இன்னும் பெற முடியவில்லை. 11 டி20 ஆட்டங்களில் ஆடிய க்ருணால் 11 விக்கெட், 70 ரன்களை எடுத்துள்ளார். ஐபிஎல் தொடரில் மும்பை அணியில் ஆடி வருகிறார். மே.இ.தீவுகள் தொடரில் சிறப்பாக ஆடுவார் எனக் கருதப்படுகிறது.

வாஷிங்டன் சுந்தர்
தமிழக ஆல்ரவுண்டரான வாஷிங்டன் சுந்தர், 19 வயது இளம் வீரராவார். கடந்த 2017 ஐபிஎல்லில் புணே அணியில் சிறப்பாக ஆடியதால், அப்போதே இந்திய ஒருநாள், டி20 அணியில் இடம் பெற்றார். ஓரே ஒருநாள் ஆட்டத்தில் ஆடிய சுந்தர், 7 டி20 ஆட்டங்களில் ஆடி 11 விக்கெட்டுகளை சாய்த்துள்ளார். உள்ளூர் டி20 ஆட்டங்களில் 42 விக்கெட்டுகளை சாய்த்துள்ளார்.
முக்கிய தருணங்களில் விக்கெட் வீழ்த்துவதில் வல்லவர் சுந்தர்.  

நவ்தீப் சைனி
ஐபிஎல் 2019 தொடரில் பெங்களூர் அணியில் ஆடிய நவ்தீப் சைனி 145 கி.மீ வேகத்தில் பந்துவீசக் கூடியவர். 
அவரது துடிப்பான பந்துவீச்சு, உலகக் கோப்பைக்கான இந்திய அணிக்கு வலைப்பயிற்சிக்கான பந்துவீச்சாளராக தேர்வு பெற உதவியது.  தில்லி அணிக்காக 120 முதல் தர விக்கெட்டுகளையும்,  உள்ளூர் டி20 ஆட்டங்களில் 30 விக்கெட்டுகளையும் சாய்த்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.