செய்திகள்

இந்தியாவைப் பந்தாடிய பேட்ஸ்மேன்கள்: 2-வது டி20யில் மே.இ. தீவுகள் அதிரடி வெற்றி!

​இந்தியாவுடனான 2-வது டி20 ஆட்டத்தில் மேற்கிந்தியத் தீவுகள் அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அதிரடி வெற்றியைப் பெற்றது.

DIN


இந்தியாவுடனான 2-வது டி20 ஆட்டத்தில் மேற்கிந்தியத் தீவுகள் அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அதிரடி வெற்றியைப் பெற்றது.

இந்தியா, மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கிடையிலான 2-வது டி20 ஆட்டம் திருவனந்தபுரத்தில் நடைபெற்றது. டாஸ் வென்ற மேற்கிந்தியத் தீவுகள் அணி முதலில் இந்திய அணியை பேட்டிங் செய்ய அழைத்தது. இதன்படி முதலில் பேட் செய்த இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் 7 விக்கெட்டுகளை இழந்து 170 ரன்கள் எடுத்தது.

171 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் மேற்கிந்தியத் தீவுகள் அணி களமிறங்கியது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக லெண்ட்ல் சிம்மன்ஸ் மற்றும் எவின் லீவிஸ் களமிறங்கினர். அந்த அணி தொடக்கத்தில் வழங்கிய 2 கேட்ச் வாய்ப்புகளை இந்திய அணி தவறவிட்டது. இதைப் பயன்படுத்திக்கொண்ட இருவரும் அந்த அணிக்கு நல்ல தொடக்கம் அளித்தனர். இந்த இணை முதல் விக்கெட்டுக்கு 9.5 ஓவர்களில் 73 ரன்கள் சேர்த்தது. எவின் லீவிஸ் 40 ரன்களுக்கு முதல் விக்கெட்டாக ஆட்டமிழந்தார்.

இந்த அடித்தளத்தைப் பயன்படுத்திய ஹெத்மயர் மற்றும் சிம்மன்ஸ் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி வெற்றிக்குத் தேவையான ரன் ரேட்டை குறைத்தனர். அதேசமயம், இந்தியப் பந்துவீச்சாளர்களுக்கு நெருக்கடியும் அளித்தனர். 3 சிக்ஸர்கள் அடித்து மிரட்டிய ஹெத்மயர் விராட் கோலியின் சூப்பர் மேன் கேட்ச்சால் 23 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். இதனிடையே தொடக்க ஆட்டக்காரர் சிம்மன்ஸ் தனது அரைசதத்தை எட்டினார்.

இருந்தபோதிலும், அடுத்து களமிறங்கிய நிகோலஸ் பூரான் அற்புதமாக சிக்ஸரும், பவுண்டரியுமாக அடித்து இந்தியாவுக்கு மேலும் நெருக்கடியை அளித்தார். இதன்மூலம், 18.3 ஓவர்களிலேயே மேற்கிந்தியத் தீவுகள் அணி 2 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 173 ரன்கள் எடுத்து 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. சிம்மன்ஸ் 45 பந்துகளில் 4 பவுண்டரி, 4 சிக்ஸர் உட்பட 67 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். பூரான் 18 பந்துகளில் 4 பவுண்டரி, 2 சிக்ஸர் உட்பட 38 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.

இந்திய அணித் தரப்பில் வாஷிங்டன் சுந்தர் மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோர் தலா 1 விக்கெட்டை வீழ்த்தினர்.

இந்த ஆட்டத்தில் மேற்கிந்தியத் தீவுகள் வெற்றி பெற்றதன் மூலம் 3 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடர் 1-1 என சமனில் உள்ளது. இரு அணிகளுக்கிடையிலான 3-வது மற்றும் கடைசி டி20 ஆட்டம் மும்பை வான்கடே மைதானத்தில் புதன்கிழமை நடைபெறுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இந்தியா எந்த அச்சுறுத்தலுக்கும் அடிபணியாது: வெங்கையா நாயுடு

என்எல்சி நிகர லாபம் ரூ.839.21 கோடி

ரிஷப ராசிக்கு தன்னம்பிக்கை! தினப்பலன்கள்!

ரூ.2,250 கோடியில் விரைவில் ஏற்றுமதி ஊக்குவிப்பு திட்டம்: அதிகாரிகள் தகவல்

பழங்குடியினரின் வாழ்வியலை ஆவணப்படுத்த தொல்குடி மின்னணு களஞ்சியம் இணையம்: அமைச்சா் மதிவேந்தன் தொடங்கி வைத்தாா்

SCROLL FOR NEXT