முகப்பு
செய்திகள்

முதல் டி20: இந்திய மகளிர் அணி தோல்வி!

23 ரன்கள் வித்தியாசத்தில் முதல் டி20 ஆட்டத்தை வென்றுள்ள நியூஸிலாந்து மகளிர் அணி, டி20 தொடரில் 1-0 என முன்னிலை

Updated On : 31 ஜனவரி, 2024 at 7:04 AM
பகிர்:

நியூஸிலாந்துக்கு எதிரான முதல்  டி20 ஆட்டம் வெல்லிங்டனில் இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற இந்திய மகளிர் அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இந்திய அணியில் மிதாலி ராஜுக்கு மீண்டும் இடமளிக்கப்படவில்லை. இந்திய அணியில் பிரியா புனியா அறிமுகமானார். 

முதலில் விளையாடிய நியூஸிலாந்து மகளிர் அணி, 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 159 ரன்கள் எடுத்தது. தொடக்க வீராங்கனை டெவின், 48 பந்துகளில் 2 சிக்ஸர், 6 பவுண்டரிகளுடன் 62 ரன்கள் எடுத்தார். 

இந்திய மகளிர் அணிக்குச் சிறப்பான தொடக்க அமைந்தது. அறிமுக வீராங்கனை புனியா 4 ரன்களில் ஆட்டமிழந்தாலும் மந்தனாவும் ஜெமிமா ரோட்ரிக்ஸும் சிறப்பாக விளையாடினார்கள். வழக்கம்போல அதிரடியாக விளையாடிய மந்தனா 34 பந்துகளில் 3 சிக்ஸர், 7 பவுண்டரிகளுடன் 58 ரன்களும் ஜெமிமா 39 ரன்களும் எடுத்தார்கள். ஒருகட்டத்தில் 11.2 ஓவரின் போது இந்திய அணி 1 விக்கெட் இழப்புக்கு 102 ரன்கள் என்கிற வலுவான நிலையில் இருந்தது. ஆனால் அந்த ஓவரில் மந்தனா ஆட்டமிழந்தபிறகு நிலைமை தலைகீழாக மாறிப்போனது. அடுத்த ஓவரில் ஜெமிமாவும் ஆட்டமிழந்ததால் நிலைமை கைமீறிப்போனது. 15-வது ஓவரில் ஹேமலதாவும் படீலும் ஆட்டமிழந்தபோது இந்திய அணியின் தோல்வி உறுதியானது. இறுதியில் 19.1 ஓவர்களில் 136 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது இந்திய மகளிர் அணி.

23 ரன்கள் வித்தியாசத்தில் முதல் டி20 ஆட்டத்தை வென்றுள்ள நியூஸிலாந்து மகளிர் அணி, டி20 தொடரில் 1-0 என முன்னிலை பெற்றுள்ளது. 2-வது டி20 ஆட்டம் வெள்ளியன்று நடைபெறவுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.