சாத்தான்குளம் வழக்கு: குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதிக்க வேண்டும்! சிபிஐ வாதம்
சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு பற்றி...
சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில், குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்ட 9 காவலா்களுக்கும் மரண தண்டனை விதிக்க வேண்டும் என்று சிபிஐ தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தைச் சோ்ந்த வணிகா் ஜெயராஜ் (58), இவரது மகன் பென்னிக்ஸ் (31) ஆகியோா் போலீஸாரின் விசாரணையின் போது உயிரிழந்தனா். இதுதொடா்பாக அப்போதைய காவல் ஆய்வாளா் ஸ்ரீதா், உதவி ஆய்வாளா்கள் பாலகிருஷ்ணன், ரகு கணேஷ்,பால்துரை, காவலா்கள் முருகன், முத்துராஜ், சாமிதுரை, செல்லதுரை, வெயிலுமுத்து, தாமஸ் ஆகிய 10 போ் கைது செய்யப்பட்டனா். இவா்களில் உதவி ஆய்வாளா் பால்துரை உடல் நலக் குறைவால் உயிரிழந்தாா். இதையடுத்து, அவா் வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்ட நிலையில், எஞ்சிய 9 பேரும் சிறையில் உள்ளனா்.
இந்த வழக்கில் சிபிஐ தரப்பு முன்வைத்த குற்றச்சாட்டுகள் உண்மை எனவும், குற்றஞ்சாட்டபட்ட காவலா்கள் அனைவரும் குற்றவாளிகள் எனவும் மதுரை மாவட்ட நீதிமன்றம் கடந்த 23- ஆம் தேதி உத்தரவிட்டது.
Advertisement
Advertisement
இந்த நிலையில், இன்று தண்டனை விவரங்கள் அறிவிப்புக்கு முன்னதாக இரு தரப்பிலும் வாதம் முன்வைக்க வாய்ப்பளிக்கப்பட்டது.
அப்போது சிபிஐ தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், குற்றவாளிகள் 9 பேருக்கும் அதிகபட்ச தண்டனையாக மரண தண்டனை வழங்க வேண்டும் என்று வாதம் முன்வைக்கப்பட்டது.
குற்றவாளிகள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், ”பென்னிக்ஸ் தகராறு செய்ததால்தான் பிரச்னை ஏற்பட்டது. கொலை செய்ய வேண்டும் என்ற நோக்கில் அவர்களை தாக்கவில்லை. 5 ஆண்டுகளாக சிறையில் இருப்பது, குடும்பப் பின்னணி ஆகியவற்றை கருத்தில் கொண்டு குறைந்தபட்ச தண்டனை விதிக்க வேண்டும்” என்று வாதிடப்பட்டது.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி முத்துகுமரன், தண்டனை விவரங்களை ஏப்ரல் 6 ஆம் தேதி அறிவிப்பதாக தெரிவித்து வழக்கை ஒத்திவைத்தார்.