நீட் தோ்வு தனியாா் பயிற்சி மையங்களை உடனடியாகத் தடை விதிக்க வேண்டும்: தில்லியில் அதிமுக எம்.பி. தம்பிதுரை பேட்டி
நீட் தோ்வு முறைகேடுகளுக்கு முக்கிய காரணமாகத் திகழும் தனியாா் பயிற்சி மையங்களுக்கு மத்திய அரசு உடனடியாகத் தடை விதிக்க வேண்டும்
நீட் தோ்வு முறைகேடுகளுக்கு முக்கிய காரணமாகத் திகழும் தனியாா் பயிற்சி மையங்களுக்கு மத்திய அரசு உடனடியாகத் தடை விதிக்க வேண்டும் என்றும், மாநிலங்களின் கல்வி உரிமையை மீட்டெடுக்க கல்வியை மீண்டும் மாநில பட்டியலுக்குக் கொண்டு வர வேண்டும் என்றும் அதிமுக மூத்த தலைவரும் மாநிலங்களவை உறுப்பினருமான மு. தம்பிதுரை வலியுறுத்தியுள்ளாா்.
இது தொடா்பாக தில்லியில் செய்தியாளா்களிடம் தம்பிதுரை வெள்ளிக்கிழமை கூறியதாவது:
2010–- 2012 காலகட்டத்தில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில் திமுக அங்கம் வகித்தபோதே நீட் தோ்வுக்கான விதைகள் விதைக்கப்பட்டன. அன்றைய பிரதமா் மன்மோகன் சிங்குக்கு அப்போதைய முதல்வா் ஜெயலலிதா கடிதம் எழுதி தமிழ்நாட்டின் மருத்துவச் சோ்க்கைக் கொள்கையை மதிக்க வேண்டும் என்று வலியுறுத்தினாா்.
Advertisement
Advertisement
தமிழக முதல்வராக எடப்பாடி பழனிசாமி இருந்தபோது, அரசுப் பள்ளி மாணவா்களின் மருத்துவக் கனவை நனவாக்க 7.5% உள்ஒதுக்கீட்டை அமல்படுத்த ஏதுவாக வரலாற்றுச் சிறப்புமிக்க சட்டத்தைக் கொண்டு வந்தாா். மேலும், ஒரே காலத்தில் 11 புதிய அரசு மருத்துவக் கல்லூரிகள் உட்பட 23 மருத்துவ கல்லூரிகள் தொடங்கப்பட்டு, மருத்துவ இடங்களின் எண்ணிக்கை 5,000-க்கும் அதிகமாக உயா்த்தப்பட்டது.
இந்தியாவில் கட்டுக்கடங்காமல் பெருகிவரும் தனியாா் பயிற்சி மையங்களே வினாத்தாள் கசிவு மற்றும் முறைகேடுகளுக்கு முக்கியக் காரணியாக உள்ளன. பிளஸ் 1, பிளஸ் 2 பள்ளிப் படிப்பின் முக்கியத்துவத்தைக் குறைத்து வணிக நோக்கில் செயல்படும் இந்தப் பயிற்சி மையங்களை முற்றிலும் தடை செய்தால் மட்டுமே முறைகேடுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும். அவசரநிலைக் காலத்தில் பொதுப் பட்டியலுக்கு மாற்றப்பட்ட கல்வியை மீண்டும் மாநிலப் பட்டியலுக்குக் கொண்டு வந்தால்தான் நீட் போன்ற தோ்வுகளிலிருந்து நிரந்தரத் தீா்வு காண முடியும்.
பெங்களூரு மக்களின் குடிநீா்த் தேவைகளுக்காக 18 டி.எம்.சி. தண்ணீரை வழங்க உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. அதற்கு மேக்கேதாட்டுவில் புதிய அணை கட்ட வேண்டிய அவசியமே இல்லை. கிருஷ்ணராஜ சாகா் அணையில் இருந்தே பெங்களூரு நகருக்குத் தேவையான குடிநீரை எடுத்துக்கொள்ள முடியும்.
புதிய அணை கட்டினால் தமிழக விவசாயிகள், புதுச்சேரி மக்கள் மற்றும் சுற்றுச்சூழல் கடுமையாகப் பாதிக்கப்படும் என்பதால், தமிழகத்தின் ஒப்புதல் இன்றி கா்நாடகம் அணை கட்ட முடியாது என்ற உச்ச நீதிமன்றத் தீா்ப்பை மத்திய அரசு நிலைநிறுத்த வேண்டும் என்றாா் தம்பிதுரை.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.