நியூஸிலாந்துக்கு எதிரான டி20: இந்திய அணியில் மிதாலி ராஜுக்கு மீண்டும் இடமில்லை!
இந்திய அணியில் மிதாலி ராஜுக்கு மீண்டும் இடமளிக்கப்படவில்லை. இந்திய அணியில் பிரியா புனியா அறிமுகமாகியுள்ளார்.
நியூஸிலாந்துக்கு எதிரான முதல் டி20 ஆட்டம் வெல்லிங்டனில் இன்று நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இந்திய மகளிர் அணி பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது.
இந்திய அணியில் மிதாலி ராஜுக்கு மீண்டும் இடமளிக்கப்படவில்லை. இந்திய அணியில் பிரியா புனியா அறிமுகமாகியுள்ளார்.
முதலில் விளையாடிய நியூஸிலாந்து மகளிர் அணி, 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 159 ரன்கள் எடுத்துள்ளது. இந்திய அணி 11 ஓவர்களில் 1 விக்கெட் இழப்புக்கு 98 ரன்கள் எடுத்து விளையாடிவருகிறது.
சமீபத்தில் நடைபெற்ற மகளிர் டி20 உலகக் கோப்பை போட்டியில் அரையிறுதி ஆட்டத்தில் இங்கிலாந்திடம் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா படுதோல்வி அடைந்தது. அதில் விளையாடிய இந்திய அணியில் மிதாலி ராஜ் இடம்பெறவில்லை. மூத்த வீராங்கனை மிதாலி ராஜை சேர்க்காததே தோல்விக்கு காரணம் என பல தரப்பினர் விமர்சித்தனர். தொடக்க சுற்று ஆட்டங்களில் மிதாலி அபாரமாக ஆடியிருந்தார். ஆஸி. அணியுடன் அபார வெற்றி பெற்ற அணியையே அரையிறுதியில் பங்கேற்கச் செய்தேன். மிதாலி ராஜை சேர்க்காததால் எனக்கு வேதனை இல்லை. அணி நலனே முக்கியம் என கேப்டன் ஹர்மன்ப்ரீத் கெளர் கூறியிருந்தார். இதுதொடர்பாக பிசிசிஐ சிஓஏ நிர்வாகிகள் குழு விசாரணைக்கு கேப்டன் ஹர்மன்ப்ரீத் கெளர், பயிற்சியாளர் பவார் ஆகியோரை அழைத்திருந்தது. இறுதியில், மகளிர் அணியின் இடைக்கால பயிற்சியாளராக இருந்த ரமேஷ் பவாரின் பதவிக் காலம் கடந்த நவம்பர் மாதத்துடன் நிறைவடைந்த நிலையில் அவருக்குப் பதவி நீட்டிப்பு வழங்கப்படவில்லை. டபிள்யூ.வி. ராமன் இந்திய மகளிர் அணியின் புதிய பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார்.
மார்ச் 4 முதல் இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடரை உள்ளூரில் விளையாடவுள்ளது இந்திய அணி. அந்தத் தொடரில் கடைசியாக விளையாடி, டி20 கிரிக்கெட்டுக்கு மிதாலி ராஜ் முற்றுப்புள்ளி வைப்பார் என்று அறியப்படுகிறது. இந்நிலையில் நியூஸிலாந்துக்கு எதிரான முதல் டி20 ஆட்டத்தில் மிதாலி ராஜுக்கு மீண்டும் இடமளிக்கப்படவில்லை.