இரானி கோப்பை போட்டியில் மீண்டும் சதமடித்து சாதனை செய்துள்ள விஹாரி!
இந்தச் சதத்தின் மூலம் இரானி கோப்பை போட்டியில் தொடர்ச்சியாக மூன்று இன்னிங்ஸிலும் சதமடித்தவர் என்கிற பெருமையைப் பெற்றுள்ளார் விஹாரி.
விதர்பா அணிக்கு எதிரான இரானி கோப்பை போட்டியில் ரெஸ்ட் ஆஃப் இந்தியாவின் விஹாரி மீண்டும் சதமடித்து சாதனை செய்துள்ளார்.
நாக்பூரில் நடைபெற்றும் வரும் இந்த ஆட்டத்தில் முதலில் விளையாடிய ரெஸ்ட் ஆஃப் இந்தியா அணி 89.4 ஓவர்களில் 330 ரன்களை எடுத்தது. விஹாரி 114 ரன்களும் மயங்க் அகர்வால் 95 ரன்களும் எடுத்தார்கள். விதர்பா அணி, முதல் இன்னிங்ஸில் 142.1 ஓவர்கள் விளையாடி 425 ரன்கள் எடுத்தது. கர்னேவார் 102 ரன்களும் விக்கெட் கீப்பர் வாட்கர் 73 ரன்களும் எடுத்தார்கள். 5 விக்கெட் இழப்புக்கு 168 ரன்கள் என்கிற நிலையிலிருந்து முதல் இன்னிங்ஸில் 425 ரன்கள் எடுத்து 95 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது விதர்பா அணி. தனது 2-வது இன்னிங்ஸைத் தொடர்ந்த ரெஸ்ட் ஆஃப் இந்தியா அணி 3-ம் நாளின் முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 102 ரன்கள் எடுத்தது. மயங்க் அகர்வால் 27 ரன்களில் ஆட்டமிழந்தார். விஹாரி 40, ரஹானே 25 ரன்களுடன் களத்தில் இருந்தார்கள்.
இந்நிலையில் இன்றும் விஹாரியும் ரஹானேவும் சிறப்பாக விளையாடி விதர்பா அணியின் பந்துவீச்சை நோகடித்தார்கள். இருவரையும் ஆட்டமிழக்க பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டபோதும் பலனளிக்காமல் போனது. 4-ம் நாள் உணவு இடைவேளையின்போது ரெஸ்ட் ஆஃப் இந்தியா அணி, 74 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 212 ரன்கள் எடுத்தது. முதல் இன்னிங்ஸில் சதமடித்த விஹாரி இரண்டாவது இன்னிங்ஸிலும் சதமடித்தார். உணவு இடைவேளையின்போது விஹாரி 101, ரஹானே 74 ரன்களுடன் களத்தில் உள்ளார்கள். ரெஸ்ட் ஆஃப் இந்தியா அணி 8 விக்கெட்டுகள் மீதமுள்ள நிலையில் 117 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.
இந்தச் சதத்தின் மூலம் இரானி கோப்பை போட்டியில் தொடர்ச்சியாக மூன்று இன்னிங்ஸிலும் சதமடித்தவர் என்கிற பெருமையைப் பெற்றுள்ளார் விஹாரி. அதேபோல இரானி கோப்பைப் போட்டியில் இரண்டு இன்னிங்ஸிலும் சதமடித்த இரண்டாவது வீரர் என்கிற பெருமையையும் அவர் அடைந்துள்ளார்.
இரானி கோப்பை போட்டியில் விஹாரி
183 vs விதர்பா, 2018
114 vs விதர்பா, 2019
101* vs விதர்பா, 2019
இரானி கோப்பை போட்டியின் இரு இன்னிங்ஸிலும் சதமடித்த வீரர்கள்
ஷிகர் தவன் vs ராஜஸ்தான், 2011
விஹாரி vs விதர்பா, 2019