உலகக் கோப்பை அணியில் இடம்பெற எனக்கு வாய்ப்பு அளியுங்கள்: ரஹானே கோரிக்கை!
தொடர்ச்சியான வாய்ப்புகள் கிடைக்க நான் தகுதியுடையவன். குறைந்தபட்சம் அதைத்தான் நான் கேட்கிறேன்...
ரஹானே கடைசியாக பிப்ரவரி 2018-ல் ஒருநாள் கிரிக்கெட்டில் இடம்பெற்றார். அதன்பிறகு அவருக்குத் தகுந்த வாய்ப்புகள் அளிக்கப்படவில்லை. ஆனால், சமீபகாலமாக அவர் இந்திய டெஸ்ட் அணியில் மட்டுமே தொடர்ச்சியாக இடம்பெற்று வருகிறார். இதனால் உலகக் கோப்பை அணியில் ரஹானே இடம்பெறுவது இன்றைய நிலையில் சாத்தியமில்லை.
ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு ரஹானே அளித்த பேட்டியில் இந்த நிலை குறித்து கூறியதாவது:
எனக்கு எப்போதும் அணிதான் முக்கியம். எனவே அணி நிர்வாகம் மற்றும் தேர்வுக்குழுவின் முடிவுகளை மதிக்கிறேன். எனினும் கடைசியில் உங்களுடைய பங்களிப்பு மதிப்பளிக்கப்பட வேண்டும்.
ஒரு வீரராக நான் அணியின் நலனைக் கருத்தில் கொண்டுதான் விளையாடியுள்ளேன். எனவே தொடர்ச்சியான வாய்ப்புகள் கிடைக்க நான் தகுதியுடையவன். குறைந்தபட்சம் அதைத்தான் நான் கேட்கிறேன். கடந்த மூன்று நான்கு தொடர்களாக என்னுடைய பேட்டிங் சராசரி 45 முதல் 50 இருக்கும். என்னை அணியிலிருந்து நீக்கியபிறகு உள்ளூர் போட்டிகளிலும் நன்றாகவே விளையாடினேன். ஒரு பேட்ஸ்மேனாக நான் அதிரடியாக விளையாடக் கூடியவன். ஆனால் தனிப்பட்டமுறையில் நான் கூச்ச சுபாவம் உடையவன். என்னுடைய பேட் தான் பேசவேண்டும் என நினைப்பேன். ஆனால் சில நேரங்களில் உண்மையையும் பேசியாகவேண்டும். உலகக் கோப்பை திட்டங்களில் என் பெயரும் இருப்பதாகத் தேர்வுக்குழுத் தலைவர் கூறியுள்ளார். நல்லது. ஆனால் எனக்கு வாய்ப்புகள் அளிக்கப்படவேண்டும். உலகக்கோப்பை அணியில் இடம்பிடிப்பேன் என நம்பிக்கையாக உள்ளேன் என்று கூறியுள்ளார்.