முகப்பு
செய்திகள்

விளையாட்டை நீங்கள் மதித்தால், அது பதில் மரியாதை அளிக்கும்: பாண்டியா குறித்து விராட் கோலி!

அவர் பந்துவீசியதைப் பார்க்கும்போது இந்தியாவுக்குச் சென்று சரியான பயிற்சிகள் எடுத்துள்ளார் என...

Updated On : 31 ஜனவரி, 2024 at 7:00 AM
பகிர்:

தனியார் டிவி நிகழ்ச்சியில் பெண்கள் குறித்து சர்ச்சைக்குரிய கருத்து கூறியதாக கிரிக்கெட் வீரர்கள் ஹார்திக் பாண்டியா, லோகேஷ் ராகுல் மீது விதிக்கப்பட்ட இடைநீக்க நடவடிக்கையை பிசிசிஐ சமீபத்தில் ரத்து செய்தது. இதையடுத்து நியூஸிலாந்துக்கு எதிரான 3-வது ஒருநாள் கிரிக்கெட் ஆட்டத்தில் பங்கேற்றார் பாண்டியா. 

காபி வித் கரண் என்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற இந்திய வீரர்கள் பாண்டியா, ராகுல் ஆகியோர் பெண்கள் தொடர்பாக கூறிய கருத்துகள் கடும் சர்ச்சையை ஏற்படுத்தின. இந்நிலையில் பல்வேறு தரப்பினர் இதற்கு கண்டனம் தெரிவித்தனர். ஆஸ்திரேலியாவில் இருந்த இருவரும் உடனே நாடு திரும்ப பிசிசிஐ உத்தரவிட்டது. இருவர் மீதான விசாரணை முடியும் வரை சஸ்பெண்ட் செய்வதாக கடந்த 11-ஆம் தேதி பிசிசிஐ அறிவித்தது. மேலும் இதுதொடர்பாக விசாரணை நடத்த தீர்ப்பாயத்தை அமைக்க வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் பிசிசிஐ சிஓஏ மனு செய்தது. பிப்ரவரி 5-ஆம் தேதி தான் இதுதொடர்பாக விசாரணை நடத்த இருப்பதாக உச்சநீதிமன்றம் தெரிவித்து விட்டது. அணியின் செயல்பாட்டில் பாதிப்பு ஏற்படுவதால், இதற்கிடையே விசாரணை நடைபெறும் வரை இருவர் மீதான இடைநீக்கத்தை ரத்து செய்யலாம் என பிசிசிஐ தற்காலிக தலைவர் சிகே.கன்னா கருத்து தெரிவித்திருந்தார். மேலும் இதுதொடர்பாக சட்ட ஆலோசகர் பிஎஸ்.நரசிம்மாவுடன் சிஓஏ ஆலோசனை மேற்கொண்டனர். இந்நிலையில் தீர்ப்பாயம் நியமிக்கப்படும் வரை இருவர் மீதான இடைநீக்க நடவடிக்கையை பிசிசிஐ ரத்து செய்தது.

நேற்று நடைபெற்ற 3-வது ஒருநாள் ஆட்டத்தில் சிறப்பாகப் பந்துவீசியதோடு ஃபீல்டிங்கிலும் அசத்திய பாண்டியா குறித்து இந்திய அணி கேப்டன் விராட் கோலி கூறியதாவது:

வாழ்க்கையில் ஒரு சூழலை எதிர்கொள்ள இரு வழிகள் மட்டுமே உண்டு. ஒன்று, நீங்கள் அடிமட்டத்துக்குச் சென்றுவிடுவீர்கள், அல்லது அந்தச் சூழலில் இருந்து நீங்கள் கற்றுக்கொள்வீர்கள், அதை ஊக்கமாக மாற்றி தவறுகளைச் சரிசெய்வீர்கள். ஒரு கிரிக்கெட் வீரருக்கு விளையாட்டை விடவும் வேறு எதுவும் நெருக்கமானது அல்ல. அந்த விளையாட்டில், உங்கள் முழு சக்தியையும் செலவிடுவீர்கள், நீங்கள் விளையாட்டை மதித்தால் அது உங்களுக்குப் பதில் மரியாதை அளிக்கும். இதில் பெரிய ரகசியம் எதுவும் இல்லை. பாண்டியா மீண்டுவந்துள்ளார். ஒரு பிரச்னையிலிருந்து நல்லவிதமாக மீண்டுவருபவர்கள், தன்னுடைய துறையில் உயரத்தைத் தொடுவார்கள். பல கிரிக்கெட் வீரர்கள் இதுபோல புதிய வாழ்க்கை பெற்றதை நாம் பார்த்துள்ளோம். பாண்டியாவும் சரியான வழியில் சென்று, திறமையான கிரிக்கெட் வீரராக மாறுவார் என நம்புகிறேன். அதை அவரால் செய்துகாட்ட முடியும். 

பாண்டியா அணியில் சேர்ந்தது நல்ல விஷயம். வெவ்வேறு திறமைகளை உள்ளடக்கிய அணிக்கு அவர் மிகவும் பொருந்துகிறார். அவர் பந்துவீசியதைப் பார்க்கும்போது இந்தியாவுக்குச் சென்று சரியான பயிற்சிகள் எடுத்துள்ளார் எனத் தெரிகிறது. பேட்டிங், பந்துவீச்சு, ஃபீல்டிங் என மூன்றிலும் அவரால் தன்னுடைய பங்களிப்பை அளிக்கமுடியும் என்று கோலி கூறியுள்ளார்.

நியூஸிலாந்துக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரின் 3-ஆவது ஆட்டத்தில் இந்தியா 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி கண்டது. இதையடுத்து, மொத்தம் 5 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடரில் இந்தியா 3-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்று தொடரை வென்றுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →