2019 உலகக் கோப்பைத் தொடரோடு சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக வங்கதேச கேப்டன் மஷ்ரஃபி மோர்டாஸா அறிவித்திருந்தார். இந்நிலையில், அவர் தனது ஓய்வு முடிவில் இருந்து தற்போது பின்வாங்கியுள்ளார். இதனால் கடும் விமர்சனங்களுக்கு தள்ளப்பட்டுள்ளார்.
மேலும் சில காலம் கிரிக்கெட் விளையாட விரும்புவதாக தெரிவித்துள்ளது மஷ்ரஃபி, இதுகுறித்து அணியின் மூத்த வீரர்களான ஷகிப் அல் ஹசன், தமிம் இக்பால், முஷ்ஃபிகுர் ரஹீம், முஹமதுல்லா ஆகியோருடன் இணைந்து ஆலோசனையில் ஈடுபட்ட பின்பு அவ்வாறு தெரிவித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதுகுறித்து வங்கதேச அணியின் தலைமைப் பயிற்சியாளர் ஸ்டீவ் ரோட்ஸ் கூறுகையில்,
மஷ்ரஃபி மோர்டாஸா வங்கதேச அணியின் தலைசிறந்த வீரர்களில் ஒருவர். அவரை நான் போராளி என்று தான் அழைப்பேன். ஏனென்றால் ஒவ்வொரு போட்டியின்போதும் தனது அணிக்கா போராட தயாராவார். இதனால் சக அணி வீரர்களும் ஈர்க்கப்பட்டனர். ஒட்டுமொத்த அணியின் மரியாதையையும் பெற்றவர்.
இதுதான் அவரின் கடைசி உலகக் கோப்பை, இதனால் அவருக்கு இது கடினமான காலகட்டம். ஒவ்வொரு கிரிக்கெட் அணியைப் போன்று வங்கதேச கிரிக்கெட் அணியும் அடுத்தகட்டத்துக்கு பயணிக்க வேண்டியுள்ளது. இதனால் எந்த ஒரு காலகட்டத்திலும் மஷ்ரஃபி போன்ற ஒரு வீரர் இன்றி வங்கதேச கிரிக்கெட் அடுத்தகட்டத்துக்கு கடந்துசெல்ல வேண்டியது அவசியம். ஏனென்றால் மஷ்ரஃபி மோர்டாஸா விட்டுச் செல்லும் வெற்றிடம் மிகப்பெரியது.
ஓய்வு பெறுவது குறித்து ஒரு தனிப்பட்ட வீரர் தான் தீர்மானிக்க வேண்டும். அதில் எந்த நிர்பந்தமும், அழுத்தமும் ஏற்படக் கூடாது. எனவே கிரிக்கெட் வாரியத்துடன் பேசி மஷ்ரஃபி தான் தனது ஓய்வு அறிவிப்பை வெளியிட வேண்டும். ஏற்கனவே பல விமர்சனங்களை சந்தித்துள்ளதால் அவருடைய இந்த முடிவு அணியை எந்த வகையிலும் பாதிக்காது என்று தெரிவித்தார்.
நடப்பு உலகக் கோப்பைத் தொடரில் வங்கதேச அணியை வழிநடத்தும் மஷ்ரஃபி மோர்டாஸா, அந்த அணியின் முன்னணி வேகப்பந்துவீச்சாளராக இருந்தாலும், இதுவரை ஒரு விக்கெட் மட்டுமே வீழ்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.