சிறந்த நியூஸிலாந்து குடிமகனுக்கான விருதுக்கு இங்கிலாந்து வீரர் பென் ஸ்டோக்ஸ் பரிந்துரை!
ஆமாம், நீங்கள் படிப்பது சரியான செய்திதான். சிறந்த நியூஸிலாந்து குடிமகனுக்கான விருதுக்கு...
ஆமாம், நீங்கள் படிப்பது சரியான செய்திதான். சிறந்த நியூஸிலாந்து குடிமகனுக்கான விருதுக்கு இங்கிலாந்து வீரர் பென் ஸ்டோக்ஸ் பரிந்துரைக்கப்பட்டுள்ளார்.
அதெப்படி, இங்கிலாந்து வீரரை இந்த விருதுக்குப் பரிந்துரைக்கப்பட முடியும் எனக் கேட்பீர்கள்.
இங்கிலாந்து அணியில் இடம்பெற்ற பல வீரர்கள் வெவ்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்கள். பல நாட்டு வீரர்கள் ஒன்றிணைந்துதான் தற்போது இங்கிலாந்து அணிக்குப் பெருமை தேடித்தந்துள்ளார்கள். இங்கிலாந்து கேப்டன் இயன் மார்கன், அயர்லாந்தில் பிறந்தவர். தனது சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கையை அயர்லாந்துடன் தொடங்கினார். பார்படாஸில் (மேற்கிந்தியத் தீவுகள்) பிறந்து அங்கு கிரிக்கெட் விளையாடி வந்த ஜோஃப்ரா ஆர்ச்சர், சமீபத்தில்தான் இங்கிலாந்து அணியில் விளையாடத் தகுதி பெற்றார். இங்கிலாந்தின் அதிரடித் தொடக்க வீரர் ஜேசன் ராய், தென் ஆப்பிரிக்காவில் பிறந்தவர். அவருக்கு 10 வயதாகும்போது ஜேசன் ராயின் குடும்பம் இங்கிலாந்துக்குக் குடிபெயர்ந்தது. மொயீன் அலி, அடில் ரஷித் என பாகிஸ்தான் வம்சாவழியைச் சேர்ந்த இரு வீரர்களும் இங்கிலாந்து அணியில் உள்ளார்கள். இதுபோலத்தான் பென் ஸ்டோக்ஸும்.
நியூஸிலாந்தில் பிறந்த பென் ஸ்டோக்ஸ், 12 வயதாகும்போது குடும்பத்துடன் இங்கிலாந்துக்குக் குடிபெயர்ந்தார். தற்போது, இங்கிலாந்து அணி உலகக் கோப்பை வென்ற போட்டியில், இறுதிச்சுற்றில் ஆட்ட நாயகன் விருதை அவர் பெற்றுள்ளார்.
எனினும் நியூஸிலாந்து மக்கள் இன்னமும் பென் ஸ்டோக்ஸைத் தங்களுக்கானவராக எண்ணுகிறார்கள் என்று விருதுக் குழுவின் தலைவர் கேம்ரூன் பென்னட் கூறியுள்ளார். இந்த விருதுக்கு நியூஸிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சனும் பரிந்துரைக்கப்பட்டுள்ளார்கள்.
இந்த விருதுக்கு 15 வயதுக்கு மேற்பட்ட நியூஸிலாந்து குடிமகனைப் பரிந்துரைக்கலாம். சிறந்த நியூஸிலாந்து குடிமகனுக்கான விருதுக்கான பரிந்திரைப் பட்டியல் அதிகாரபூர்வமாக விரைவில் வெளியிடப்படவுள்ளது.