செய்திகள்

விலகிக்கொண்ட ஒப்போ: இந்திய கிரிக்கெட் அணிக்குப் புதிய சீருடை விளம்பரதாரர்!

பிசிசிஐ உடனான ஒப்பந்தத்தை முன்கூட்டியே முடித்துக்கொண்டது ஒப்போ நிறுவனம்...

எழில்

கடந்த சில வருடங்களாக இந்திய கிரிக்கெட் அணியின் அதிகாரப்பூர்வ சீருடை விளம்பரதாரராக இருந்து வந்த ஒப்போ நிறுவனம், திடீரென ஒப்பந்தத்திலிருந்து விலகியுள்ளது.

2014 முதல் 2017 வரை இந்திய கிரிக்கெட் அணியின் அதிகாரப்பூர்வ சீருடை விளம்பரதாரராக இருந்து வந்தது ஸ்டார் இந்தியா நிறுவனம். இதனால் ஸ்டார் இந்தியா நிறுவனத்தின் சின்னம் இந்திய கிரிக்கெட் அணி வீரர்களின் சீருடைகளில் இடம் பெற்றது. இதன் ஒப்பந்தக் காலம் மார்ச் 2017 வரை மட்டுமே இருந்தது. இதன்பிறகு பிசிசிஐயுடனான ஒப்பந்தத்திலிருந்து விலகியது ஸ்டார் இந்தியா நிறுவனம். அதற்கு முன்பு 12 வருட காலம் சஹாரா நிறுவனம் இந்திய கிரிக்கெட் அணியின் விளம்பரதாரராக இருந்தது. ஸ்டார் இந்தியா நிறுவனம் விலகிய பிறகு புதிய ஏலம் கோரப்பட்டது. இதில் ஒப்போ நிறுவனம் தேர்வானது. இரு தரப்புக்கும் இடையே ரூ. 1079 கோடிக்கு ஐந்து வருட ஒப்பந்தம் போடப்பட்டதாகக் கூறப்பட்டது.

இந்நிலையில் பிசிசிஐ உடனான ஒப்பந்தத்தை முன்கூட்டியே முடித்துக்கொண்டது ஒப்போ நிறுவனம். இதையடுத்து இந்திய கிரிக்கெட் அணியின் அதிகாரபூர்வச் சீருடை விளம்பரதாரராக பைஜு என்கிற பெங்களூரைச் சேர்ந்த தனியார் கல்வி நிறுவனம் தேர்வாகியுள்ளது. இதையடுத்து செப்டம்பர் 15 முதல் தொடங்கவுள்ள உள்ளூர் சீசனில் இந்திய அணி வீரர்களின் சீருடையில் பைஜு நிறுவனத்தின் சின்னம் இடம்பெறும். ஒப்போ பிசிசிஐக்கு அளித்த அதே தொகையை பைஜு நிறுவனம் பிசிசிஐக்கு அளிக்கவுள்ளது. எனினும் தற்போது இந்த ஒப்பந்தம் கைமாறுவது தொடர்பாக ஒப்போ, பைஜு  ஆகிய நிறுவனங்கள் பேசி வருகின்றன. இரு நிறுவனங்களில் ஒரு நிறுவனம் பிசிசிஐக்கு 10 சதவிகிதம் கூடுதல் தொகை அளிக்கவேண்டும். இதன்மூலம் பிசிசிஐக்குக் கூடுதல் வருமானமும் கிடைக்கவுள்ளது. பைஜுவின் ஒப்பந்தம் 2022 மார்ச் வரை இருக்கும். 

இதையடுத்து இந்திய ஆண்கள் கிரிக்கெட் அணி, 19 வயதுக்குட்பட்டவர்களுக்கான இந்திய கிரிக்கெட் அணி, ஆண்கள் ஏ அணி மற்றும் இந்திய மகளிர் கிரிக்கெட் அணி ஆகிய அணி வீரர்களின் சீருடைகளில் பைஜு நிறுவனத்தின் சின்னம் இடம்பெறும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பூலோக சொர்க்கத்தில்... ஸாரா!

மொட்டை அடித்தது ஏன்? இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் விளக்கம்!

இஸ்ரேல் தாக்குதல்: கத்தார் விரைந்தார் அமீரக அதிபர்!

நேபாளத்தில் 13,000க்கும் மேற்பட்ட கைதிகள் தப்பியோட்டம்!

இந்தியாவில் 10 லட்சம் மின்சார வாகனங்கள் அமோக விற்பனை!

SCROLL FOR NEXT