விளையாட்டுத் துறை அமைச்சரானார் ரிஜிஜூ!
கடந்த அமைச்சரவையில், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சராக இருந்த ராஜ்யவர்த்தன் சிங் ரத்தோருக்கு
நாட்டின் 16-வது பிரதமராக நரேந்திர மோடி (68) வியாழக்கிழமை பதவியேற்றார். தில்லி குடியரசுத் தலைவர் மாளிகையில் வியாழக்கிழமை நடைபெற்ற பிரம்மாண்ட நிகழ்ச்சியில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அவருக்கு பதவிப் பிரமாணமும், ரகசியக் காப்புப் பிரமாணமும் செய்து வைத்தார். இதன் மூலம் மோடி தொடர்ந்து இரண்டாவது முறையாகப் பிரதமர் பதவியேற்றுள்ளார். பிரதமரைத் தொடர்ந்து 57 பேர் அமைச்சர்களாகப் பதவியேற்றனர். மத்திய அமைச்சரவையில் பிரதமர் மோடி, 24 கேபினட் அமைச்சர்கள் இடம் பெற்றுள்ளனர். 9 பேர் தனிப்பொறுப்புடன் கூடிய இணையமைச்சர்களாகவும், 24 பேர் இணையமைச்சர்களாகவும் பதவியேற்றனர். அவர்களில் அருணாச்சலப் பிரதேசத்தைச் சேர்ந்த கிரண் ரிஜிஜூ, தனிப்பொறுப்புடன் கூடிய இணையமைச்சராகப் பதவியேற்றுக்கொண்டார்.
கடந்த அமைச்சரவையில், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சராக இருந்த ராஜ்யவர்த்தன் சிங் ரத்தோருக்கு இந்தமுறை வாய்ப்பளிக்கப்படவில்லை. இதையடுத்து 47 வயதான கிரண் ரிஜிஜூ, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த ஆட்சியில், மத்திய உள்துறை இணை அமைச்சராக இவர் பணியாற்றினார். மக்களவைத் தேர்தலில் அருணாச்சல மேற்குத் தொகுதியில் அருணாச்சல முன்னாள் முதல்வர் நபம் துகியை 1,74,843 வாக்கு வித்தியாசத்தில் ரிஜிஜூ தோற்கடித்தார்.