செய்திகள்

டெஸ்ட் கிரிக்கெட்டுக்குக் கூட்டம் வர வேண்டுமா?: ராகுல் டிராவிட் சொல்லும் யோசனைகள்

எழில்

பிசிசிஐ தலைவா் சௌரவ் கங்குலியின் தீவிர முயற்சியால் முதல்முறையாக வங்கதேசத்துக்கு எதிராக கொல்கத்தாவில் நடைபெறவுள்ள பகலிரவு டெஸ்ட் ஆட்டத்தில் இந்திய கிரிக்கெட் அணி பங்கேற்கிறது. நவம்பா் 22-ம் தேதி கொல்கத்தா ஈடன் காா்டன்ஸ் மைதானத்தில் நடைபெறவிருந்த வங்கதேச அணியுடனான இரண்டாவது டெஸ்ட் ஆட்டம் பகலிரவு ஆட்டமாக நடைபெறவுள்ளது. இதன்மூலம் இந்திய கிரிக்கெட் அணி முதல்முறையாகப் பகலிரவு டெஸ்ட் ஆட்டத்தில் பங்கேற்கிறது. கொல்கத்தா பகலிரவு டெஸ்டில் எஸ்.ஜி. இளஞ்சிவப்பு பந்து பயன்படுத்தப்படுகிறது. மதியம் 1 மணிக்கு ஆட்டம் ஆரம்பமாகி, இரவு 8 மணிக்கு நிறைவுபெறும். இந்த டெஸ்ட் குறித்து கங்குலி கூறியதாவது: முதல் மூன்று நாள்களுக்கான அனைத்து டிக்கெட்டுகளும் விற்பனையாகியுள்ளன. ஆன்லைன் வழியாக அனைத்து டிக்கெட்டுகளும் வாங்கப்பட்டுள்ளன. விராட் கோலி மகத்தான கிரிக்கெட் வீரர். ரசிகர்களால் நிறைந்த மைதானத்தில்தான் அவர் விளையாடவேண்டும். பேட்டிங் செய்ய அவர் களமிறங்கும்போது மைதானம் முழுக்க ரசிகர்கள் இருந்தால் அவருக்கு உற்சாகமாக இருக்கும். இந்தியாவின் சிறந்த கிரிக்கெட் வீரர்கள் காலி மைதானங்களில் விளையாடக்கூடாது. கொல்கத்தாவில் முதல் மூன்று நாள்களுக்கு முழு கூட்டமும் இருக்கும் என்று கூறியுள்ளார். 

இந்நிலையில் பகலிரவு டெஸ்ட் மட்டுமே போதாது, டெஸ்ட் கிரிக்கெட் ஆட்டங்களுக்குக் கூட்டம் வரவேண்டும் என்றால் ரசிகர்களுக்கு வசதிகளைச் செய்து தரவேண்டும் என்று முன்னாள் வீரர் ராகுல் டிராவிட் கூறியுள்ளார். அவர் மேலும் கூறியதாவது:

2001 கொல்கத்தா டெஸ்டில் ஒரு லட்சம் பேர் இருந்தார்கள் என்றால் ஒரு விஷயத்தை நாம் தவறவிடுகிறோம். அப்போது வீட்டிலேயே கிரிக்கெட் ஒளிபரப்பை அருமையாகக் காண ஹெச்.டி. தொலைக்காட்சி கிடையாது. செல்பேசியில் கிரிக்கெட் பார்க்க முடியாது. ஆட்டத்தைப் பார்க்கவேண்டும் என்றால் மைதானத்துக்குத்தான் செல்லவேண்டும். 

இப்போது எல்லாம் மாறிவிட்டது. இதை நாம் ஒப்புக்கொள்ளவேண்டும். ஆஷஸ் தொடரில் மைதானம் முழுக்க ரசிகர்கள் இருக்கிறார்கள், ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்தில் டெஸ்ட் கிரிக்கெட் ஆரோக்கியமாக உள்ளது என நீங்கள் சொல்லலாம். அவர்களிடம் முறையான டெஸ்ட் கிரிக்கெட் அட்டவணை உள்ளது. நம்மிடம் இல்லை. 

டிசம்பர் மாதம் பாக்ஸிங் டே டெஸ்டுக்காகவும் ஜூலை மாதம் லார்ட்ஸ் டெஸ்டுக்காகவும் ரசிகர்கள் முன்பே தயாராகலாம். இதுபோல இந்திய கிரிக்கெட்டிலும் நடைபெறும்படி நாம் செய்யவேண்டும். மைதானத்தில் ரசிகர்களுக்கு நல்ல வசதிகள் செய்துத் தரப்படவேண்டும். ரசிகர்கள் மீண்டும் டெஸ்ட் கிரிக்கெட் பார்க்க இவற்றை நாம் செய்யவேண்டும். நல்ல கழிப்பறை, நல்ல இருக்கை, கார் பார்க்கிங் என வசதிகள் செய்து கொடுத்தால் ரசிகர்கள் வருவார்கள் என்று கூறியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

எவரெஸ்ட் பயணத்தில் ஜோதிகா!

ஜூன் 1-ல் விக்கிரவாண்டி இடைத்தேர்தல்?

தமிழில் வெல்ல காத்திருக்கும் ஸ்ரீலீலா!

ஆவடி அருகே படுகொலை: வட மாநில இளைஞரின் அதிர்ச்சியூட்டும் வாக்குமூலம்

பதஞ்சலியின் 14 மருந்துகளுக்கு தடை!

SCROLL FOR NEXT