இந்தியா 502/7 டிக்ளேர்: ஆரம்பத்திலேயே தடுமாறும் தென் ஆப்பிரிக்க அணி!
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்டில் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 7 விக்கெட் இழப்புக்கு 502 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்துள்ளது...
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்டில் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 7 விக்கெட் இழப்புக்கு 502 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்துள்ளது.
மூன்று டி20, 3 டெஸ்ட் ஆட்டங்கள் கொண்ட தொடரில் பங்கேற்பதற்காக இந்தியாவுக்கு சுற்றுப் பயணமாக தென்னாப்பிரிக்கா வந்துள்ளது. விசாகப்பட்டினத்தில் முதல் டெஸ்ட் ஆட்டம் புதன்கிழமை தொடங்கியது. டாஸ் வென்ற இந்திய கேப்டன் விராட் கோலி, பேட்டிங்கைத் தோ்வு செய்தாா். இதையடுத்து, தொடக்க ஆட்டக்காரா்களாக மயங்க் அகா்வாலும், ரோஹித் சா்மாவும் களம் இறங்கினா். முதல் டெஸ்ட் ஆட்டத்தின் முதல் நாள் முடிவில் இந்திய அணி விக்கெட் இழப்பின்றி 202 ரன்கள் சோ்த்தது. ரோஹித் சா்மா டெஸ்ட் போட்டியில் முதல் முறையாக தொடக்க ஆட்டக்காரராக களம் இறங்கி சதம் அடித்தார். ரோஹித் சா்மா 174 பந்துகளில் 115 ரன்களுடனும் (112 பவுண்டரிகள், 5 சிக்ஸா்கள்), மயங்க் அகா்வால் 183 பந்துகளில் 84 ரன்களுடனும் (11 பவுண்டரிகள், 2 சிக்ஸா்கள்) களத்தில் இருந்தார்கள்.
இன்று காலை மழை எதுவும் இல்லாமல் சரியான நேரத்தில் ஆட்டம் தொடங்கியது. முதல் ஓவரிலேயே பவுண்டரி அடித்து தனது வழக்கமான ஆட்டத்தை மீண்டும் தொடங்கினார் ரோஹித் சர்மா. எனினும் அவர் 125 ரன்களில் இருந்தபோது விக்கெட் கீப்பர் டி காக் எளிதான கேட்சை நழுவவிட்டார். இதன்பிறகு 204 பந்துகளில் தனது முதல் டெஸ்ட் சதத்தைப் பதிவு செய்தார் மயங்க் அகர்வால். பிறகு இந்தக் கூட்டணி 250 ரன்களைக் கடந்தது.
224 பந்துகளில் 150 ரன்களைக் கடந்தார் ரோஹித் சர்மா. சரியான இடைவெளியில் ரோஹித்தும் மயங்க் அகர்வாலும் பவுண்டரிகள் அடித்து இந்திய அணியின் ஸ்கோரை விரைவாக உயர்த்தினார்கள். 79.5 ஓவர்களில் இந்தக் கூட்டணி 300 ரன்களைத் தொட்டு சாதனை படைத்தது. மங்கட் - ராய் 413 ரன்களும் சேவாக் - டிராவிட் 410 ரன்களும் எடுத்து அதிக ரன்கள் எடுத்த தொடக்க வீரர்களின் பட்டியலில் முதல் இரு இடங்களில் உள்ளார்கள். ரோஹித் - மயங்க் கூட்டணி தற்போது 3-வது இடத்தைப் பிடித்துள்ளது.
150 ரன்கள் கடந்த பிறகு ரோஹித் சர்மா நிச்சயம் இரட்டைச் சதம் எடுப்பார் என்கிற எதிர்பார்ப்பு இந்திய ரசிகர்களிடையே நிலவியது. நேரம் செல்ல செல்ல ரன்கள் குவிக்கும் வேகம் அதிகரித்தது. 2008-ல் சென்னையில் நடந்த டெஸ்டில் சேவாக் - டிராவிட் கூட்டணி 2-வது விக்கெட்டுக்கு 268 ரன்கள் சேர்த்ததே இந்திய அணி சார்பாக தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிராக எடுத்த அதிகபட்ச ரன்களாக இருந்தன. அதைக் கடந்து 317 ரன்கள் வரை எடுத்து சாதனை செய்துள்ளது ரோஹித் - மயங்க் கூட்டணி.
எல்லாம் நன்றாகச் சென்று கொண்டிருந்த நேரத்தில் சிக்ஸர் அடிக்க முயன்று மஹாராஜ் பந்தில் ஸ்டம்பிங் ஆகி 176 ரன்களில் வெளியேறினார் ரோஹித் சர்மா. அவர் வெளியேறியபோது தெ.ஆ. வீரர்கள் சிலர் ரோஹித்திடம் கை குலுக்கிப் பாராட்டு தெரிவித்தார்கள். இதன்பிறகு புஜாரா களமிறங்கி, வழக்கம்போல பொறுப்புடன் விளையாடினார்.
2-ம் நாள் மதிய உணவு இடைவேளையின் போது இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில் 88 ஓவர்களில் 1 விக்கெட் இழப்புக்கு 324 ரன்கள் எடுத்தது. மயங்க் அகர்வால் 138 ரன்களும் புஜாரா 6 ரன்களும் எடுத்து ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார்கள்.
உணவு இடைவேளைக்குப் பிறகு பிலாண்டர் வீசிய முதல் பந்திலேயே போல்ட் ஆகி, 6 ரன்களுடன் வெளியேறினார் புஜாரா. இதன்பிறகு களமிறங்கினார் கேப்டன் கோலி. விசாகப்பட்டினத்தில் விளையாடிய சர்வதேச ஆட்டங்களில் நான்கு சதங்கள் எடுத்துள்ளார் கோலி. அங்கு விளையாடிய 8 இன்னிங்ஸில் அவருடைய குறைந்தபட்ச ஸ்கோரே 24 தான். இதனால் இன்று சிறப்பாக விளையாடுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், 20 ரன்களில் முத்துசாமியின் பந்துவீச்சில் ஆட்டமிழந்து வெளியேறினார் கோலி. டெஸ்ட் கிரிக்கெட்டில் முத்துசாமியின் முதல் விக்கெட் இதுதான். இன்றும் அபாரமாக விளையாடி வந்த மயங்க் அகர்வால், 358 பந்துகளில் இரட்டைச் சதமெடுத்தார். தன்னுடைய முதல் சதத்தையே இன்னும் பெரிதாக்கி இரட்டைச் சதமாக எடுத்து சாதித்துள்ளார். ரஹானே 15 ரன்களில் மஹாராஜா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இதன்பிறகு விஹாரி விளையாட வந்தார்.
இன்னும் அதிக ரன்கள் குவிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட மயங்க் அகர்வால், 215 ரன்களில் எல்கர் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இவருக்கும் தென் ஆப்பிரிக்க வீரர்களிடமிருந்து பாராட்டு கிடைத்தது. 2-ம் நாள் தேநீர் இடைவேளையின்போது, இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில் 5 விக்கெட் இழப்புக்கு 450 ரன்கள் எடுத்து வலுவான நிலையில் இருந்தது. விஹாரி 8, ஜடேஜா 6 ரன்களுடன் களத்தில் இருந்தார்கள்.
தேநீர் இடைவேளைக்குப் பிறகு விஹாரி 10 ரன்களிலும் சாஹா 21 ரன்களிலும் ஆட்டமிழந்தார்கள். எனினும் ஜடேஜா 46 பந்துகளில் 30 ரன்கள் எடுத்தார். இந்திய அணியின் ஸ்கோர் 500 ரன்களைத் தாண்டிய பிறகு கோலி இந்திய அணியின் முதல் இன்னிங்ஸை டிக்ளேர் செய்தார்.
இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 7 விக்கெட் இழப்புக்கு 502 ரன்கள் எடுத்துள்ளது. தென் ஆப்பிரிக்க அணியின் தரப்பில் மஹாராஜ் 3 விக்கெட்டுகளை எடுத்துள்ளார்.
தென் ஆப்பிரிக்க அணியின் முதல் இன்னிங்ஸில் இந்திய அணியின் பந்துவீச்சாளர்கள் அசத்தினார்கள். மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான டெஸ்டுகளில் விளையாடாத அஸ்வின் இன்று தனது திறமையை வழக்கம்போல நிரூபித்தார். மார்க்ரம் 5 ரன்களில் அஸ்வின் பந்துவீச்சில் போல்ட் ஆனார். பிறகு வந்த டி பிருயின் 4 ரன்களில் அஸ்வின் பந்துவீச்சில் சாஹாவிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். பிடிட் ரன் எதுவும் எடுக்காமல் ஜடேஜா பந்துவீச்சில் போல்ட் ஆனார். தொடக்க வீரர் எல்கர் மட்டும் இந்தியப் பந்துவீச்சாளர்களின் சவாலை எதிர்கொண்டு 27 ரன்கள் எடுத்தார்.
2-ம் நாளின் முடிவில் தென் ஆப்பிரிக்க அணி தனது முதல் இன்னிங்ஸில், 20 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 39 ரன்கள் எடுத்து தடுமாறி வருகிறது. எல்கர் 27, பவுமா 2 ரன்களுடன் களத்தில் உள்ளார்கள். அஸ்வின் 2 விக்கெட்டுகளும் ஜடேஜா 1 விக்கெட்டும் எடுத்தார்கள்.