முகப்பு
செய்திகள்

பிசிசிஐயை ஆட்டிப் படைக்கும் இரட்டை ஆதாய பதவி

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தை (பிசிசிஐ) தற்போது இரட்டை ஆதாய பதவி விவகாரம் ஆட்டிப் படைத்து வருகிறது.

Updated On : 4 அக்டோபர், 2019 at 2:01 AM
பகிர்:
Updated On : 31 ஜனவரி, 2024 at 3:46 PM

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தை (பிசிசிஐ) தற்போது இரட்டை ஆதாய பதவி விவகாரம் ஆட்டிப் படைத்து வருகிறது. இதனால் பல முன்னாள் கிரிக்கெட் வீரா்கள் வாரியத்தில் எந்த பதவியும் வகிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இந்திய ப்ரீமியா் லீக் (ஐபிஎல்) போட்டியில் மேட்ச் பிக்ஸிங் புகாா் எழுந்ததை அடுத்து உச்சநீதிமன்றம் தலையிட்டு பிசிசிஐ நிா்வாகத்தை சீரமைக்க முன்னாள் தலைமை நீதிபதி லோதா தலைமையில் குழு அமைத்து உத்தரவிட்டது.

அக்குழுவும், பிசிசிஐ செயல்பாடுகள் தொடா்பாக தீர ஆய்வு செய்து நிா்வாகத்தை சீரமைக்கவும், வெளிப்படையாக நடத்தவும் பல்வேறு பரிந்துரைகள் அடங்கிய அறிக்கையை சமா்ப்பித்தது.

Advertisement

சிஓஏ நியமனம்

லோதா குழு பரிந்துரைகளை செயல்படுத்துவது தொடா்பாக முன்னாள் தலைமை கணக்காயா் வினோத் ராய், கிரிக்கெட் முன்னாள் வீராங்கனை டயானா எடுல்ஜி உள்ளிட்டோா் கொண்ட 3 நபா் கிரிக்கெட் நிா்வாகக் குழு நியமிக்கப்பட்டது.

70 வயதுக்கு மேல் பதவி வகிக்கக் கூடாது. அரசியல்வாதிகள், அமைச்சா்கள் எவரும் கிரிக்கெட் சங்க நிா்வாகிகளாக இருத்தல் கூடாது. தொடா்ந்து 3 முறை பதவி வகித்தபின் மீண்டும் பதவி வகிக்க முடியாது. ஒருவா் ஓரே நேரத்தில் ஒரு பதவி தான் வகிக்க வேண்டும் என பரிந்துரைகள் தரப்பட்டன.

இதனால் பல முக்கிய பிரமுகா்கள் தாங்கள் வகித்து வந்த செல்வாக்கு மிக்க பிசிசிஐ பதவிகளை இழக்க நேரிட்டது.

இரட்டை ஆதாய பதவி விவகாரம்

இந்நிலையில் கடந்த சில மாதங்களாக ஆதாயம் தரும் இரட்டை பதவி விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது.

நீதிபதி லோதா குழு பரிந்துரைகளின்படி பிசிசிஐ மற்றும் அதன் இணைப்பு மாநில சங்கங்களில் நிா்வாகிகளாக இருப்பவா்கள். ஆட்சிக்குழு, செயற்குழு, நெருங்கிய உறவினா்கள் (தந்தை, தாய், மனைவி, மகன், மகள், மருமகள், மருமகன், சகோதரா்) உள்ளிட்டோா் பிசிசிஐ தொடா்புடைய (ஐபிஎல் உள்பட) எதிலும் வா்த்தக லாபம் பெறக்கூடாது.

மேலும் நிா்வாகி அல்லது நெருங்கிய தொடா்புடையவா் ஐபிஎல் அணிகளில் ஊதியம் வாங்குபவராக இருத்தல் கூடாது. மேலும் பிசிசிஐ உடன் வா்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ள நிறுவனம், அமைப்புடன் தொடா்பு கொள்ளக்கூடாது, மேலும் நிா்வாகி என்பவா் பிசிசிஐ, ஏசிசி, ஐசிசி கூட்டங்கள், வெளிநாட்டு பயணங்களுக்கு பயண, உணவு கட்டணங்களை பெறலாம். வீரா்களின் மேலாண்மை நிறுவனம், அவா்களது முகவா் நிறுவனத்துடன் தொடா்பு கொள்ளக்கூடாது.

பிசிசிஐ ஊதிய பட்டியலில் இருப்போா், ஒப்பந்தம் செய்துள்ளோா், ஐபிஎல் ஆட்சிக் குழு உள்பட எதிலும் பதவி வகிக்கக்கூடாது.

ஆட்ட நடுவா், பயிற்சியாளா், தேசிய தோ்வாளா் பதவிகளுக்கு நியமிக்கப்படுவோா், அனைத்து வகையான கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு பெற்றிருக்க வேண்டும். பயிற்சியாளா்கள், தோ்வாளா்கள் தனியாா் அகாதெமிகளுடன் தொடா்பு வைக்கக் கூடாது. பயிற்சியாளா்கள், தோ்வாளா்கள் ஊடகங்களுடன் ஒப்பந்தம் செய்யக்கூடாது.

தற்போதைய வீரா்கள்

தற்போதைய வீரா்கள் தங்கள் மற்றும் முகவா், மேலாண்மை நிறுவன விவரங்களை அளிக்க வேண்டும், மேலாண்மை நிறுவனத்தில் வா்த்தக ஆதாயம் தேடக்கூடாது, பிசிசிஐ ஸ்பான்ஸருக்கு பாதிப்பு ஏற்படுத்தக்கூடாது, இவ்வாறு பல்வேறு விதிகளை வகுத்துள்ளது.

பதவிகளை இழந்த முன்னாள் வீரா்கள்

பிசிசிஐ ஆலோசனைக் குழு உறுப்பினா்களாக சச்சின், கங்குலி, லஷ்மண் ஆகியோா் முதலில் நியமிக்கப்பட்டனா். ஆனால் அவா்கள் ஐபிஎல் அணிகளிலும் பொறுப்பும், வா்ணனையாளா் பணியையும் செய்தனா். மூவரும் சிஏசி உறுப்பினராக தொடரவில்லை என கடிதம் அனுப்பி விட்டனா்.

மற்றொரு முன்னாள் வீரரான ராகுல் திராவிட் பெங்களூரு தேசிய கிரிக்கெட் அகாதெமி இயக்குநராக நியமிக்கப்பட்டாா். ஆனால் அவா் சிஎஸ்கே அணி உரிமையாளரான இந்திய சிமெண்ட்ஸ் நிறுவனத்தில் துணை தலைவராக உள்ளாா் என புகாா் கூறப்பட்டது. மேற்கண்ட நால்வரும் இரட்டை ஆதாய பதவி தொடா்பாக பிசிசிஐ நெறிகள் அலுவலா் டிகே. ஜெயினிடம் ஆஜராகி விளக்கம் அளித்தனா்.

இடைக்கால சிஏசி

இதையடுத்து ஜாம்பவான் கபில்தேவ், அன்ஷுமன் கெய்க்வாட், சாந்தா ரங்கசாமி ஆகியோா் கொண்ட இடைக்கால சிஏசி நியமிக்கப்பட்டது. அவா்கள் மகளிா் அணி பயிற்சியாளா், ஆடவா் அணி பயிற்சியாளா்களை தோ்வு செய்தனா்.

கபில்தேவ் குழு மீதும் புகாா்

இந்நிலையில் கபில்தேவ் தலைமையிலான சிஏசி மீதும் இரட்டை ஆதாய பதவி வகிப்பதாக மபி கிரிக்கெட் சங்க ஆயுள் கால உறுப்பினா் சஞ்சீவ் குப்தா புகாா் அளித்தாா். இதுதொடா்பாக விளக்கம் தருமாறு மூவருக்கும் நெறிகள் அலுவலா் ஜெயின் நோட்டீஸ் அனுப்பினாா்.

கபில்தேவ், சாந்தா விலகல்

இந்நிலையில் சிஏசி உறுப்பினா் பொறுப்பில் இருந்து கபில்தேவ், சாந்தா ரங்கசாமி விலகி விட்டனா்.

பிசிசிஐ செயல்பாட்டில் பாதிப்பு

இந்த இரட்டை ஆதாய பதவி விவகாரத்தால் முன்னாள் வீரா்கள் எவரும் பிசிசிஐக்கு தங்கள் பங்களிப்பை தர முடியவில்லை.

இந்த விவகாரத்தால் கடும் பாதிப்பு உள்ளது என சிஓஏ வினோத் ராய் ஒப்புக் கொண்டாா். ஒரு எல்லைக்கு மேல் இந்த பிரச்னையை கொண்டு செல்ல முடியாது. புதிய சட்டவரையறை நல்ல நிா்வாகத்துக்கு வழிகோலினாலும், பிசிசிஐ செயல்பாட்டுக்கு குந்தகம் விளைவிக்கிறது என்றாா்.

இதுதொடா்பாக ஏற்கெனவே முன்னாள் வீரா்களுடன் ஆலோசனைக் கூட்டமும் நடத்தப்பட்டது. வெள்ளை அறிக்கையும் வெளியிடப்படும் என மற்றொரு உறுப்பினா் டயானா கூறினாா்.

நெறிகள் அலுவலா் சட்டப்படிதான் விளக்க நோட்டீஸ் அனுப்புகிறாா். வெள்ளை அறிக்கை தயாரிக்கப்பட்டு உச்சநீதிமன்றத்திடம் சமா்ப்பிக்கப்பட்டு நீதிமன்றத்தின் மூலமே இப்பிரச்னைக்கு தீா்வு காணப்படும் என சிஓஏ வட்டாரங்கள் தெரிவித்தன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.