முகப்பு
செய்திகள்

சர்ச்சைகளுக்கு முடிவு: டி20 கிரிக்கெட்டிலிருந்து மிதாலி ராஜ் ஓய்வு!

2021 ஒருநாள் கோப்பைப் போட்டிக்காகக் கவனம் செலுத்த வேண்டியுள்ளது. இக்காரணத்துக்காக டி20 கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுகிறேன் என்று...

Updated On : 31 ஜனவரி, 2024 at 9:59 AM
பகிர்:

டி20 கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக மிதாலி ராஜ் அறிவித்துள்ளார்.

இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் மூத்த வீராங்கனையான மிதாலி ராஜ், 2006-ல் இந்திய மகளிர் அணி விளையாடிய முதல் டி20 ஆட்டத்தின் கேப்டனாகச் செயல்பட்டவர். மூன்று டி20 உலகக் கோப்பை உள்பட 32 டி20 ஆட்டங்களில் கேப்டனாக இருந்தவர். 89 ஒருநாள் ஆட்டங்களில் விளையாடி 2364 ரன்களை எடுத்துள்ளார். 

இந்நிலையில் டி20 கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக மிதாலி ராஜ் அறிவித்துள்ளார். 2021 ஒருநாள் கோப்பைப் போட்டிக்காகக் கவனம் செலுத்த வேண்டியுள்ளது. இக்காரணத்துக்காக டி20 கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுகிறேன் என்று கூறியுள்ளார் மிதாலி ராஜ். டி20 கிரிக்கெட்டில் அதிக ரன்கள் எடுத்துள்ள இந்திய வீராங்கனை என்கிற பெருமை அவருக்கு உண்டு. 

கடந்த வருடம், மகளிர் டி20 உலகக் கோப்பை போட்டியின் போது, பயிற்சியாளராக இருந்த ரமேஷ் பவாருடன்- மிதாலி ராஜுக்கு மோதல் ஏற்பட்டது. அரையிறுதியில் விளையாடிய இந்திய அணியில் மிதாலி ராஜ் உள்ளிட்ட மூத்த வீராங்கனைகள் சிலர் பிளேயிங் லெவனில் சேர்க்கப்படாததால் சர்ச்சை எழுந்தது. பயிற்சியாளர் ரமேஷ் பவார் மீது மிதாலி குற்றம் சாட்டினார். போட்டி முடிவடைந்த பிறகு ரமேஷ் பவாரின் பதவிக்காலம் நீட்டிக்கப்படவில்லை. எனினும், மகளிர் அணி வீராங்கனைகள் இரு பிரிவாகப் பிரிந்து ஒரு தரப்பு ரமேஷ் பவார் நீடிக்க வேண்டும் எனவும், மற்றொரு தரப்பு புதிய பயிற்சியாளரை நியமிக்கவும் வலியுறுத்தியது. பிறகு, டபிள்யூ வி ராமன் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார். இந்தச் சர்ச்சைக்குப் பிறகு 4 டி20 ஆட்டங்களில் விளையாடினார் மிதாலி ராஜ். எனினும் அவர் அணியில் தொடர்ந்து நீடிப்பது பெரிய சிக்கலாக இருந்தது. புதிய வீராங்கனைகளுக்கு வாய்ப்பளிக்கவேண்டும் என்கிற கருத்துகள் ஏற்பட்டன. இந்நிலையில் திடீரென டி20 கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றுள்ளார் மிதாலி ராஜ்.

தமிழ்க் குடும்பத்தைச் சேர்ந்த துரைராஜ் - லீலாராஜ் ஆகியோருக்குப் பிறந்த மிதாலி ராஜ் ஆரம்ப காலங்களில் ராஜஸ்தானின் ஜோத்பூரில் வசித்தார். பிறகு மிதாலியின் குடும்பம் பிறகு ஹைதராபாத்துக்கு இடம்மாறியது. முதலில் பரதநாட்டியம் கற்றுவந்த மிதாலி பிறகு தந்தையின் உந்துதலால் கிரிக்கெட்டிலும் ஆர்வம் செலுத்தி பிறகு இந்திய அணியில் இடம்பிடித்தார். வீரராகவும் கேப்டனாகவும் இந்திய மகளிர் கிரிக்கெட்டில் பல சாதனைகளை நிகழ்த்தியுள்ளார் மிதாலி ராஜ். 1999-ம் ஆண்டு தனது முதல் ஒருநாள் கிரிக்கெட்டை விளையாடிய மிதாலி ராஜ் மகளிர் ஒருநாள் கிரிக்கெட்டில் 200 ஒருநாள் ஆட்டங்களை விளையாடிய முதல் வீராங்கனை என்கிற சாதனையைச் சமீபத்தில் நிகழ்த்தினார். 2017-ல் மகளிர் ஒரு நாள் கிரிக்கெட்டில் 6,000 ரன்கள் குவித்த முதல் வீராங்கனை என்ற உலக சாதனையைப் படைத்தார். இதுவரை 10 டெஸ்டுகளிலும் 203 ஒருநாள், 89 டி20 ஆட்டங்களிலும் விளையாடியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.