கிராவ்லி இரட்டைச் சதம், பட்லர் சதம்: வலுவான நிலையில் இங்கிலாந்து!
பாகிஸ்தானுடனான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் ஆட்டத்தின் முதல் இன்னிங்ஸில் ஸாக் கிராவ்லி மற்றும் ஜோஸ் பட்லரின் சிறப்பான பேட்டிங்கால் வலுவான நிலையில் உள்ளது.
பாகிஸ்தானுடனான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் ஆட்டத்தின் முதல் இன்னிங்ஸில் ஸாக் கிராவ்லி மற்றும் ஜோஸ் பட்லரின் சிறப்பான பேட்டிங்கால் இங்கிலாந்து அணி வலுவான நிலையில் உள்ளது.
இங்கிலாந்து, பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான 3-வது டெஸ்ட் ஆட்டம் சௌதாம்ப்டனில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்தார். கிராவ்லி மற்றும் பட்லரின் சிறப்பான ஆட்டத்தால் முதல் நாள் ஆட்டத்திலேயே இங்கிலாந்து நல்ல நிலையில் இருந்தது. முதல் நாள் ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 332 ரன்கள் எடுத்திருந்தது. கிராவ்லி 171 ரன்களுடனும், பட்லர் 87 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
99 ரன்களில் பட்லருக்கு அவுட் கொடுத்த நடுவர்:
இந்த நிலையில், இருவரும் இன்று (சனிக்கிழமை) இரண்டாவது நாள் ஆட்டத்தைத் தொடர்ந்தனர். பட்லர் 99 ரன்கள் எடுத்திருந்தபோது, அப்பாஸ் பந்தில் ஆட்டமிழந்ததாக நடுவர் அறிவித்தார். எனினும், பட்லர் ரிவியு கேட்க, பந்து பேட்டில் உரசவில்லை என்பது ரீப்ளேவில் தெரியவந்தது. இதற்கு அடுத்த பந்திலேயே 3 ரன்கள் எடுத்த பட்லர் டெஸ்ட் கிரிக்கெட் அரங்கில் தனது 2-வது சதத்தைப் பூர்த்தி செய்தார். இதன்பிறகு, கிராவ்லி டெஸ்ட் கிரிக்கெட் அரங்கில் தனது முதல் இரட்டைச் சதத்தைப் பூர்த்தி செய்தார்.
சதம் மற்றும் இரட்டைச் சதம் அடித்த பிறகும் இந்த இணை விக்கெட்டை பறிகொடுக்காமல் சிறப்பான ஆட்டத்தையே வெளிப்படுத்தியது. இதன்மூலம், 5-வது விக்கெட்டுக்கு இந்த இணை 300 ரன்களைக் கடந்தது. கிராவ்லியும் 250 ரன்கள் என்ற மைல்கல்லைக் கடந்தார்.
முச்சதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பகுதி நேர பந்துவீச்சாளரான ஆசாத் ஷபிக் பந்தில் கிரீஸைவிட்டு வெளியே வந்து அடிக்க முயன்றார் கிராவ்லி. ஆனால், பந்தை தவறவிட, கீப்பர் ரிஸ்வான் ஸ்டம்பிங் செய்தார். கிராவ்லி 393 பந்துகளில் 34 பவுண்டரிகள், 1 சிக்ஸர் உள்பட 267 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.
இதன்பிறகு சிறிது நேரத்திலேயே 2-வது நாள் ஆட்டத்தின் தேநீர் இடைவேளை வந்தது. இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 490 ரன்கள் குவித்துள்ளது. பட்லர் 140 ரன்களுடனும், கிறிஸ் வோக்ஸ் 2 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் உள்ளனர்.