12 ஆண்டுகளில் கோலி சதமடிக்காத ஒரே ஆண்டு '2020'
இந்தியக் கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி 12 ஆண்டுகளில் அனைத்து ரக கிரிக்கெட்டிலும் ஒரு சதம்கூட அடிக்காத ஆண்டாக 2020 அமைந்துள்ளது.
இந்தியக் கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி 12 ஆண்டுகளில் அனைத்து ரக கிரிக்கெட்டிலும் ஒரு சதம்கூட அடிக்காத ஆண்டாக 2020 அமைந்துள்ளது.
இந்தியக் கிரிக்கெட் அணியில் முதன்முதலாக 2008-இல் கால் பதித்தார் விராட் கோலி. அந்த ஆண்டில் 5 ஆட்டங்களில் மட்டுமே விளையாடிய கோலி சதமடிக்கவில்லை. அதன்பிறகு ஒவ்வொரு ஆண்டும் சதங்களை அடித்து வந்துள்ளார்.
ஆனால், 2020-இல் 22 சர்வதேச ஆட்டங்களில் விளையாடியும் அவர் ஒரு சதம்கூட அடிக்கவில்லை. அரைசதங்கள் மட்டுமே 7 அடித்துள்ளார். கரோனா பொது முடக்கம் காரணமாக 2020-இல் சுமார் 9 மாதங்கள் இந்தியக் கிரிக்கெட் அணி எவ்வித போட்டியிலும் பங்கேற்கவில்லை. இதனால், மற்ற ஆண்டுகளைக் காட்டிலும் 2020-இல் குறைவான ஆட்டங்களிலேயே அவர் விளையாடியுள்ளார்.
2020-இல் 7 அரைசதங்கள் அடித்திருந்தாலும், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடர்களில் 3 முறை சதத்தை நெருங்கினார் கோலி. முதலில் 2-வது ஒருநாள் ஆட்டத்தில் 89 ரன்கள் எடுத்தார். அடுத்து, கடைசி டி20 ஆட்டத்தில் 85 ரன்கள். கடைசியாக அடிலெய்ட் டெஸ்ட்டின் முதல் இன்னிங்ஸில் 74 ரன்கள் எடுத்தார். அடிலெய்ட் டெஸ்ட்டில் அஜின்க்யா ரஹானேவின் தவறான அழைப்பால் கோலி துரதிருஷ்டவசமாக ரன் அவுட் ஆனார். இதனால், ஒரு சதம்கூட அடிக்க முடியாமல்போனது.
ஆஸ்திரேலியாவுடனான 2-வது டெஸ்ட் டிசம்பர் 26-இல் தொடங்குகிறது. ஆனால், முதல் டெஸ்ட் ஆட்டத்துடன் கோலி நாடு திரும்புகிறார்.
கோலியின் கடந்த 3 ஆண்டு சாதனை:
2017 - 11 சதங்கள், 10 அரைசதங்கள்
2018 - 11 சதங்கள், 9 அரைசதங்கள்
2019 - 7 சதங்கள், 14 அரைசதங்கள்