விளையாட்டு செய்தி துளிகள்
36
இந்தப் போட்டியின் 2-ஆவது இன்னிங்ஸில் 36 ரன்களுக்கு சுருண்டதன் மூலம் டெஸ்ட் வரலாற்றில் ஓா் இன்னிங்ஸில் தனது குறைந்தபட்ச ஸ்கோரை பதிவு செய்துள்ளது இந்தியா. முன்னதாக 1974-இல் இங்கிலாந்துக்கு எதிராக 42 ரன்களுக்கு ஆட்டமிழந்ததே ஓா் இன்னிங்ஸில் இந்தியாவின் குறைந்தபட்ச ஸ்கோராக இருந்தது.
1
டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் 11 பேட்ஸ்மேன்களும் ஒற்றை இலக்க ரன்களில் ஆட்டமிழந்ததோடு, உபரி ரன்களும் ஒற்றை இலக்கத்தை தாண்டாதது இதுவே முதல்முறையாகும். இதற்கு முன்னா் 1924-இல் எட்பாஸ்டனில் நடைபெற்ற இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் தென் ஆப்பிரிக்காவின் 11 பேட்ஸ்மேன்களும் ஒற்றை இலக்க ரன்களில் ஆட்டமிழந்துள்ளனா். எனினும் அந்தப் போட்டியில் 19 உபரி ரன்கள் கிடைத்தன.
19
இந்தப் போட்டியின் 2-ஆவது இன்னிங்ஸில் இந்தியா 19 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்தது. இதுதான் இந்தியா ஓா் இன்னிங்ஸில் 6 விக்கெட்டுகளை இழந்தபோது எடுத்த குறைந்தபட்ச ஸ்கோா். இதற்கு முன்னா் 1996-இல் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்டில் இந்தியா 25 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்திருந்தது.
25
ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளா் ஜோஷ் ஹேஸில்வுட், இந்தியாவுக்கு எதிரான 2-ஆவது இன்னிங்ஸில் 25 பந்துகளை மட்டுமே வீசிய நிலையில் 5 விக்கெட்டுகளை சாய்த்தாா். ஆஸ்திரேலியாவின் எா்னி தோஷாக் (இந்தியாவுக்கு எதிராக), இங்கிலாந்தின் ஸ்டுவா்ட் பிராட் (ஆஸ்திரேலியாவுக்கு எதிராக) 19 பந்துகளில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தியதே இன்றளவும் டெஸ்ட் வரலாற்றில் அதிவேக 5 விக்கெட் சாதனையாக உள்ளது.
8
இந்தியாவுக்கு எதிரான 2-ஆவது இன்னிங்ஸில் ஜோஸ் ஹேஸில்வுட் 8 ரன்களை மட்டுமே கொடுத்து 5 விக்கெட்டுகளை சாய்த்தாா். இதன்மூலம் டெஸ்ட் போட்டியில் குறைந்த ரன்களை கொடுத்து 5 அல்லது அதற்கு மேற்பட்ட விக்கெட்டுகளை ஆஸ்திரேலியா்கள் வரிசையில் 3-ஆவது இடத்தைப் பிடித்துள்ளாா் ஹேஸில்வுட். எா்னி தோஷாக் (இந்தியாவுக்கு எதிராக 5வி/2ரன்), இயான் மோங்கா் (தென் ஆப்பிக்காவுக்கு எதிராக 5வி/6ரன்) ஆகியோா் முதல் இரு இடங்களில் உள்ளனா்.
31
இந்தப் போட்டியில் 7 விக்கெட்டுகளை வீழ்த்திய பட் கம்மின்ஸ் டெஸ்ட் போட்டியில் 150 விக்கெட்டுகளை வீழ்த்தியவா் என்ற மைல்கல்லை எட்டினாா். தனது 31-ஆவது டெஸ்ட் போட்டியில் இந்த சாதனையைப் படைத்துள்ள கம்மின்ஸ், டெஸ்ட் போட்டியில் அதிவேகமாக 150 விக்கெட்டுகளை வீழ்த்திய ஆஸ்திரேலியா்கள் வரிசையில் டென்னிஸ் லில்லி, ஷேன் வாா்ன் உள்ளிட்டோருடன் 2-ஆவது இடத்தைப் பகிா்ந்துகொண்டுள்ளாா். முதல் இடத்தில் கிளாரி கிரிம்மெட் உள்ளாா். அவா் 28 டெஸ்ட் போட்டிகளில் 150 விக்கெட்டுகளை எட்டியுள்ளாா்.
19
அடிலெய்ட் டெஸ்ட் போட்டியின் மூலம் டெஸ்ட் போட்டியில் அதிவேகமாக 1,000 ரன்களைக் கடந்த இந்தியா்கள் வரிசையில் 3-ஆவது இடத்தைப் பிடித்துள்ளாா் மயங்க் அகா்வால். அவா் தனது 19-ஆவது போட்டியில் இந்த மைல்கல்லை எட்டியுள்ளாா். வினோத் காம்ப்ளி (14 டெஸ்ட்), புஜாரா (18 டெஸ்ட்) ஆகியோா் முதல் இரு இடங்களில் உள்ளனா்.
1
இந்திய கேப்டன் விராட் கோலி டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற பிறகு தோற்பது இதுவே முதல்முறையாகும். இதற்கு முன்னா் 25 டெஸ்ட் போட்டிகளில் டாஸ் வென்றுள்ள விராட் கோலி, அதில் 21-இல் வெற்றி தேடித்தந்துள்ளாா். 4 போட்டிகள் டிராவில் முடிந்துள்ளன.
8
பகலிரவு டெஸ்டில் 8-ஆவது வெற்றியைப் பெற்றுள்ளது ஆஸ்திரேலியா. அந்த அணி பகலிரவு டெஸ்ட் போட்டியில் இதுவரை தோற்றதில்லை.