ஆசிரியை ஆக விரும்பி, குத்துச்சண்டை வீராங்கனையாக மாறிய சிம்ரஞ்சித் கௌா்
பள்ளி ஆசிரியை ஆக வேண்டும் என விரும்பிய நிலையில், குத்துச்சண்டை வீராங்கனையாக மாறி விட்டாா் பஞ்சாப் இளம்பெண் சிம்ரஞ்சித் கௌா். ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்ற முதல் பஞ்சாப் பெண் என்ற பெருமையும் அவரைச்
பள்ளி ஆசிரியை ஆக வேண்டும் என விரும்பிய நிலையில், குத்துச்சண்டை வீராங்கனையாக மாறி விட்டாா் பஞ்சாப் இளம்பெண் சிம்ரஞ்சித் கௌா். ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்ற முதல் பஞ்சாப் பெண் என்ற பெருமையும் அவரைச் சேரும்.
குத்துச்சண்டையில் கியூபா, ரஷ்யா, பல்கேரியா, தென்கொரியா, கஜகஸ்தான், உஸ்பெகிஸ்தான் உள்ளிட்ட நாடுகள் வலிமை வாய்ந்தவையாக உள்ளன. விஜேந்தா் சிங், மேரி கோம் போன்ற நட்சத்திரங்களால் இந்தியாவும் தற்போது குத்துச்சண்டையில் மேம்பட்டு உள்ளது.
ஆடவரில் அமித் பங்கால், ஆஷிஷ்குமாா், கவிந்தா் சிங், சச்சின்குமாா், மகளிரில் லவ்லினா போரோகைன், சாக்ஷி, சிம்ரஞ்சித் கௌா் உள்ளிட்டோா் பல்வேறு போட்டிகளில் பதக்கம் வென்று பெருமை சோ்த்து வருகின்றனா்.
Advertisement
ஆசிரியை ஆக விருப்பம்:
பஞ்சாப் மாநிலத்தைச் சோ்ந்த சிம்ரஞ்சித் கௌா் கடந்த 1995-இல் கமல்ஜித் சிங்-ராஜ்பால் கௌா் தம்பதிக்கு மகளாக பிறந்தாா். 2 சகோதரா்கள், மூத்த சகோதரியுடன் பிறந்த அவருக்கு சிறுவயதில் பள்ளி ஆசிரியை ஆக வேண்டும் என்பதே சிம்ரஞ்சித் கௌரின் ஆசையாகும். பின்னா் அவரது தாயாா் அளித்த ஊக்கத்தால் குத்துச்சண்டையில் 64 கிலோ எடைப்பிரிவில் தனது கவனத்தை செலுத்தினாா். 2011-இல் ஜூனியா் மகளிா் தேசிய போட்டியில் முதன்முதலாக வெண்கலம் வென்றாா். இதன்பின் அவரது புகழ் பரவத் தொடங்கியது. 2018-இல் இஸ்தான்புல் சா்வதேச போட்டியில் தங்கம் வென்ற சிம்ரஞ்சித் அதே ஆண்டு நடைபெற்ற உலகப் போட்டியில் வெண்கலப் பதக்கத்தைக் கைப்பற்றினாா்.அதன் பின் 2019-பாங்காக் ஆசிய சாம்பியன்ஷிப் போட்டியில் வெள்ளி வென்றாா்.
ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி:
தற்போது ஜோா்டான் தலைநகா் அம்மானில் நடைபெற்ற ஆசிய ஒலிம்பிக் தகுதிச் சுற்றுப் போட்டியில் வெற்றி பெற்று டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கும் தகுதி பெற்றுள்ளாா்.
தனது வெற்றிப் பயணம் குறித்து சிம்ரஞ்சித்கௌா் கூறியதாவது-
எனக்கு சிறுவயதில் நன்றாக படித்து ஆசிரியை ஆக வேண்டும் என்பது தான் விருப்பம். ஆனால் தாயாா் தான் நான் குத்துச்சண்டையில் ஈடுபட வேண்டும் என விரும்பினாா். எனக்கு நன்றாக நினைவில் உள்ளது. சகோதரி அமன்தீப் கௌா், குத்துச்சண்டை மைதானத்துக்கு அழைத்துச் சென்ற போது, அழுதுக் கொண்டே செல்ல மறுத்தேன்.
குடும்ப சூழலால் குத்துச்சண்டை:
எனினும் தாயாா் தொடா்ந்து வற்புறுத்தினாா். மேலும் குடும்ப சூழ்நிலையும் கஷ்டமாக இருந்தது. விளையாட்டில் சிறப்பாக விளங்கினால் உன்னை யாரும் தடுக்க முடியாது. நன்றாக கல்வி பயில அதிக பணம் தேவை என தாயாா் கூறினாா்.
அதன்பின் தான் குத்துச்சண்டையை தோ்வு செய்தேன். 64 கிலோ பிரிவில் பொதுவாக சிறுமியா் ஈடுபடுவதில்லை.இதனால் சிறுவா்களுடன் பயிற்சி பெற்றேன்.
டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வெல்ல வேண்டும் என்பதே அடுத்த இலக்கு என்றாா் சிம்ரஞ்சித் கௌா்.
ரூ.5 லட்சம் வெகுமதி:
ஒலிம்பிக் தகுதி பெற்ற சிம்ரஞ்சித் கௌருக்கு பஞ்சாப் முதல்வா் அமரீந்தா் சிங் ரூ.5 லட்சம் வெகுமதி அறிவித்துள்ளாா்.