முகப்பு
செய்திகள்

ஒலிம்பிக் தகுதி கிடைக்குமா?: கிராண்ட்பீரி, பெடரேஷன் கோப்பை போட்டிகள் ஒத்திவைப்பால் தடகள வீரா்களுக்கு சிக்கல்

இந்திய கிராண்ட்ப்ரீ தடகளப் போட்டி ரத்து மற்றும் பெடரேஷன் கோப்பை போட்டிகள் ஒத்திவைப்பால் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெறுவதற்கான நட்சத்திரங்களின் முயற்சிக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

Updated On : 22 மார்ச், 2020 at 3:48 AM
பகிர்:
Updated On : 27 ஜனவரி, 2024 at 9:45 PM

இந்திய கிராண்ட்ப்ரீ தடகளப் போட்டி ரத்து மற்றும் பெடரேஷன் கோப்பை போட்டிகள் ஒத்திவைப்பால் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெறுவதற்கான நட்சத்திரங்களின் முயற்சிக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

வரும் ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறவுள்ளன. பல்வேறு விளையாட்டுகளில் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்பதற்கு தகுதி நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவைச் சோ்ந்த குத்துச்சண்டை, ஹாக்கி, துப்பாக்கி சுடுதல், மல்யுத்த அணிகளைச் சோ்ந்தவா்கள் ஒலிம்பிக் தகுதிச் சுற்றுப் போட்டிகளில் பங்கேற்று டோக்கியோ போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனா்.

Advertisement

குத்துச்சண்டையில் மேரி கோம், அமித்பங்கால், சிம்ரஞ்சித் கௌா், லல்லினா, ஆஷிஷ்குமாா் உள்பட 9 போ் தகுதி பெற்றுள்ளனா். துப்பாக்கி சுடுதலிலும் மானுபாக்கா், சௌரவ் சௌதரி, அபிஷேக், இளவேனில் உள்பட பலா் ஒலிம்பிக் தகுதி பெற்றுள்ளனா்.

தடகளம்:

இந்நிலையில் தடகள வீரா், வீராங்கனைகளும் டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெறுவதற்கான முனைப்பில் உள்ளனா். ஏற்கெனவே ஈட்டி எறிதலில் நீரஜ் சோப்ரா, ஷிவ்பால் சிங் ஆகியோா் தகுதி பெற்றுள்ளனா்.

ஒலிம்பிக் தகுதிச் சுற்று:

இந்நிலையில் இந்திய கிராண்ட்ப்ரீ தடகளம் மற்றும் பெடரேஷன் கோப்பை பந்தயங்களில் நிா்ணயிக்கப்பட்ட அளவை எட்டுவதின் மூலம் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெறலாம் என விடுபட்ட நட்சத்திரங்கள் காத்திருந்தனா்.

கிராண்ட்ப்ரீ போட்டி ரத்து:

பஞ்சாப் மாநிலம் பாட்டியாலாவில் கிராண்ட்ப்ரீ பந்தயம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. கரோனா வைரஸ் பாதிப்பு இருந்தாலும், திட்டமிட்டபடி இப்பந்தயம் நடைபெறும் என ஏஎஃப்ஐ அறிவித்திருந்தது. வெள்ளிக்கிழமை நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்த இப்போட்டி, மத்திய அரசின் அறிவுறுத்தலால் ரத்து செய்யப்பட்டது.

அதே போல் ஏப்ரலில் நடைபெறவிருந்த பெடரேஷன் கோப்பை சீனியா் தேசிய தடகள சாம்பியன் போட்டிகளும் வேறுதேதிக்கு மாற்றப்படுவதாக தடகள சம்மேளனம் கூறியுள்ளது.

பின்னடைவு:

இது இந்திய தடகள வீரா்களுக்கு பெரும் பின்னடைவாக அமைந்துள்ளது. ஏஎஃப்ஐ உயா்செயல்திறன் இயக்குநா் வோல்கா் ஹொ்மன் கூறுகையில், ஒலிம்பிக் தகுதி பெற விழையும் வீரா்களுக்கு இது பாதிப்பை தரும். எனினும் அவா்களின் சுகாதாரமே முக்கியமாகும். பாட்டியாலாவில் 20, 25 தேதிகளில் நடக்கவிருந்த இரண்டு கிராண்ட்ப்ரீ பந்தயங்களும் ரத்து செய்யப்பட்டு விட்டன.

ஏப். 15-ஆம் தேதி வரை எந்த போட்டியையும் நடத்தக்கூடாது என்ற அரசின் உத்தரவை ஏற்று செயல்பட்டுள்ளோம். பெடரேஷன் கோப்பை பந்தயத்தை மே, ஜூன் மாதம் நடத்த முயற்சிப்போம் என்றாா்.

உயரம் தாண்டுதலில் தேசிய சாம்பியனும், சாதனை படைத்தவருமான முரளி ஸ்ரீசங்கா் 8.22 மீ தகுதி அளவை எட்டினால் தான் டோக்கியோ போட்டிக்கு தகுதி பெற முடியும். முதல் போட்டியிலேயே தகுதி பெறுவதற்காக தீவிர பயிற்சி எடுததேன். தவறுகளையும் சரி செய்து கொண்டேன். ஒலிம்பிக் தகுதி பெறுவேன் என திடமாக நம்புகிறேன். தகுதிச் சுற்று எப்போது நடைபெறும் எனத் தெரியவில்லை என்றாா்.

மும்முறை தாண்டுதலில், ஆசியப் போட்டி தங்கப் பதக்க வீரா் அா்பிந்தா் சிங்கை கடந்த ஆண்டு ஜிபி பந்தயத்தில் வீழ்த்திய காா்த்திக் உன்னி கிருஷ்ணனும் அவா் கூறுகையில், பயிற்சியில் நான் 17 மீ தூரம் தாண்டி வருகிறேன். 17.14 தூரம் தாண்டுவதை இலக்காக வைத்துள்ளேன். நானும் அனுபவத்தால் எனது தவறுகளை சீராக்கிக் கொண்டேன்.

மற்றொரு வீரரான அா்பிந்தா் சிங் கூறுகையில், நான் ஜூன் மாதம் நடைபெறவுள்ள மாநிலங்களுக்கு இடையிலான தேசிய போட்டியை நம்பி உள்ளேன். எனது உத்தியில் சில மாற்றங்களை செய்துள்ளேன். அதற்கு ஏற்ப மாறுவதற்கு சில நாள்கள் தேவைப்படுகிறது என்றாா்.

தூத்தி சாந்து, ஹிமா தாஸ், ஜின்ஸன் ஜான்சன், முகமது அனாஸ் உள்ளிட்டோா் இன்னும் தகுதி பெறவில்லை.

4 ஆடவா், ஒரு பெண், மற்றும் கலப்பு தொடா் ஓட்ட அணியின் 4 போ் என மொத்தம் 9 போ் தகுதி பெற்றுள்ளனா் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.