முகப்பு
செய்திகள்

ஐசிசி தலைவராகிறாரா கங்குலி?: பெருகும் ஆதரவு!

முன்னாள் வீரர் டேவிட் கோவரும் கங்குலிக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 4:40 PM
பகிர்:

ஐசிசி அமைப்பின் தலைவர் பதவியில் கங்குலி அமரவேண்டும் என தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியத்தின் இயக்குநரும் முன்னாள் வீரருமான கிரீம் ஸ்மித் ஆதரவு தெரிவித்துள்ளார்.

சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐசிசி) வாரியம் சாரா முதல் தலைவராக இந்தியாவைச் சேர்ந்த சஷாங்க் மனோகர் போட்டியின்றி 2016-ம் வருடம் மே மாதம் தேர்வு செய்யப்பட்டார். இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பிசிசிஐ) தலைவர் பதவியிலிருந்து விலகிய அடுத்த இரு நாள்களில் அவர் இந்தப் பொறுப்புக்குத் தேர்வு செய்யப்பட்டார். அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு சஷாங்க் மனோகர் ஐசிசி தலைவராக நீடிப்பார் என அறிவிக்கப்பட்டது.

எனினும் 2018 மார்ச் மாதம், தனிப்பட்ட காரணங்களுக்காகத் தனது பதவியை ராஜிநாமா செய்வதாக அறிவித்தார். அதே வருடம் ஜூனில் நடைபெற்ற ஐசிசி கூட்டம் வரை சேர்மன் பதவியில் நீடிக்க விரும்புவதாகவும் தெரிவித்தார். ஆனால், நிர்வாகம் மற்றும் வருவாய் பகிர்வு முறைகளில் மாற்றம் கொண்டுவருவது தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட வாக்கெடுப்பில் ஐசிசிக்கு வெற்றி கிடைத்ததால் மனோகரே ஐசிசி தலைவராக நீடிக்கவேண்டும் என்று உறுப்பினர்கள் விரும்பினார்கள். ஐசிசியின் இயக்குநர்கள், ஐசிசியில் உறுப்பினராக இருக்கும் கிரிக்கெட் வாரியங்களின் ஆதரவு சஷாங்க் மனோகருக்குக் கிடைத்ததைத் தொடர்ந்து அவர் தனது முடிவை மாற்றிக் கொண்டார். தனது பதவிக்காலம் (2018 ஜூன் வரை) முடியும் வரை அந்தப் பதவியில் நீடிக்க முடிவெடுத்தார்.

Advertisement

2018 மே மாதம், ஐசிசி தலைவராக சஷாங்கர் மனோகர் மீண்டும் தேர்வானார். அவர் போட்டியின்றித் தேர்வு செய்யப்பட்டதாக ஐசிசி தெரிவித்தது.

மனோகரின் பதவிக்காலம் ஜூலை மாதத்துடன் முடிவடைகிறது. இந்தமுறை தலைவர் பதவிக்கு மீண்டும் போட்டியிட மாட்டேன் என மனோகர் அறிவித்துவிட்டார். இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்தின் தலைவர் கோலின் கிரேவ்ஸ், ஐசிசியின் அடுத்த தலைவராகப் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் பிசிசிஐ தலைவர் கங்குலி, ஐசிசி தலைவராக வேண்டும் எனக் கோரிக்கைகள் எழுந்துள்ளன. வரும் ஜூலை மாதம் நடைபெறவுள்ள ஐசிசி வருடாந்திரக் கூட்டத்தில் புதிய தலைவர் தேர்ந்தெடுக்கப்படவுள்ளார்.

ஐசிசி தலைவராக கங்குலி தேர்வு செய்யப்படுவதற்கு தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியத்தின் இயக்குநரும் முன்னாள் வீரருமான கிரீம் ஸ்மித் ஆதரவு தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது: தற்போதைய கடினமான சூழலில் ஐசிசி தலைவர் பதவி என்பது மிகவும் முக்கியமானது. கங்குலி போன்ற தலைமைப்பண்பு உள்ள ஒருவர் அப்பதவியில் அமரவேண்டும் என்றார். இங்கிலாந்து முன்னாள் வீரர் டேவிட் கோவரும் கங்குலிக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். இதையடுத்து ஐசிசி தலைவர் பதவிக்கு கங்குலி தேர்வு செய்யப்படுவார் என்கிற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments