செய்திகள்

"இம்முறையும் பதக்கம் வெல்லுங்கள்': மாரியப்பனுக்கு பிரதமர் மோடி வாழ்த்து

DIN

டோக்கியோ பாராலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் தமிழகத்தைச் சேர்ந்த உயரம் தாண்டுதல் வீரர் மாரியப்பனிடம் காணொலி வழியே பேசிய பிரதமர் நரேந்திர மோடி, இந்த ஒலிம்பிக்கிலும் நாட்டுக்காக பதக்கம் வெல்லுங்கள் என்று கூறி அவருக்கு வாழ்த்து தெரிவித்தார்.
 டோக்கியோ பாராலிம்பிக்கில் பங்கேற்க இருக்கும் மாரியப்பன் உள்ளிட்ட 10 போட்டியாளர்களுடன் பிரதமர் மோடி செவ்வாய்க்கிழமை காணொலி வழியே உரையாடி ஊக்குவித்தார்.
 அனைவருக்கும் அவர்கள் முன்னுதாரணமாக திகழ்வதாக பாராட்டு தெரிவித்த பிரதமர் மோடி, ஒலிம்பிக்கில் எந்தவித அழுத்தத்தையும் உணராமல் விளையாடுமாறு ஆலோசனை வழங்கினார். இந்த முறையும் இந்திய போட்டியாளர்கள் வரலாறு படைப்பார்கள் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
 இந்த உரையாடலின்போது மாரியப்பன் மற்றும் அவரது குடும்பத்தினருடனும் பிரதமர் மோடி பேசினார். மாரியப்பன் பெங்களூரில் இருந்து இணைந்திருக்க, அவரது தாயார் சரோஜா, தம்பிகள் குமார், கோபி ஆகியோர் சேலத்திலிருந்து காணொலியில் இணைந்திருந்தனர்.
 பிரதமரிடம் மாரியப்பன் பேசுகையில், "இளம் வயதில் படிப்பதற்கு பொருளாதார வசதி இல்லை. விளையாட்டில் எனது ஆர்வத்தைக் கண்ட பயிற்சியாளர் சத்யநாராயணா, இந்திய விளையாட்டு ஆணைய விடுதி அதிகாரிகள் எனக்கு முறையாக பயிற்சி அளித்தனர். அதனால் சென்ற பாராலிம்பிக்கில் தங்கம் வெல்ல முடிந்தது' என்றார். அதைத் தொடர்ந்து பேசிய பிரதமர், "மாரியப்பன், இந்த முறையும் பதக்கம் வென்று நாட்டுக்கு நல்ல பெயர் எடுத்துத் தர வேண்டும்' என்றார். அத்துடன், மாரியப்பனின் தாயார் சரோஜாவிடமும் நலம் விசாரித்தார். அப்போது, இந்தியாவுக்கு தனது மகன் மீண்டும் தங்கப் பதக்கம் வென்று தர இறைவனைப் பிரார்த்திப்பதாக மாரியப்பனின் தாயார் பிரதமரிடம் தெரிவித்தார்.
 அதற்கு பிரதமர், "நல்ல பிள்ளையைப் பெற்றெடுத்துள்ளீர்கள், மகிழ்ச்சி அடைகிறேன்' என்று கூறியதுடன், மாரியப்பன் என்ன விரும்பிச் சாப்பிடுவார் என கேட்டறிந்தார். தொடர்ந்து, மாரியப்பனின் சகோதரர்களிடமும் பிரதமர் மோடி பேசினார்.
 அதன்பிறகு மாரியப்பனிடம் பேசியபோது, அவரது சகோதரர்கள் முன்னேற்றமடைய முடிந்த அளவு தான் உதவுவதாகக் கூறினார். பிரதமரிடம் நேரடியாகப் பேசியது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியதாக மாரியப்பனின் குடும்பத்தினர் தெரிவித்தனர்.
 மாரியப்பன், அவருடைய குடும்பத்தினரிடம் பிரதமர் மோடி 7 நிமிடங்கள் பேசினார். முதலில் ஹிந்தியில் பேசிய மாரியப்பன் தொடர்ந்து ஆங்கிலத்தில் பேசினார். மாரியப்பனின் குடும்பத்தினர் தமிழில் பேசினர். அவர்கள் தமிழில் பேசியதை, சேலம் சாய் விடுதி டேக்வாண்டோ பயிற்சியாளர் கார்த்திகேயன் ஹிந்தியில் மொழி பெயர்த்து கூறினார். காணொலிக் காட்சி தொடங்குவதற்கு முன்னதாக அங்கு வந்த சேலம் ஆட்சியர் செ.கார்மேகம் மாரியப்பனின் குடும்பத்தினருக்கு வாழ்த்துத் தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

லண்டனில் பலரை வெட்டிய இளைஞர் கைது!

பறக்கும் முத்தத்தால் வந்த வினை; கேகேஆர் வீரருக்கு ஒரு போட்டியில் விளையாடத் தடை!

ஹமாஸ் அழிக்கப்படும் வரை போர் தொடரும்: நெதன்யாகு சூளுரை!

ஏற்காட்டில் பேருந்து விபத்து : 4 பேர் பலி

கண்ணெதிரே 3 ஐசிசி கோப்பைகள்; பாகிஸ்தான் பயிற்சியாளர் கேரி கிறிஸ்டனின் இலக்கு என்ன?

SCROLL FOR NEXT