பரபரப்பான கட்டத்தில் டெஸ்ட்: கடைசி நாளில் இலக்கை அடையுமா மே.இ. தீவுகள் அணி?
பாகிஸ்தானுக்கு எதிரான 2-வது டெஸ்டில் மேற்கிந்தியத் தீவுகள் அணி வெற்றி பெற 329 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்ட...
பாகிஸ்தானுக்கு எதிரான 2-வது டெஸ்டில் மேற்கிந்தியத் தீவுகள் அணி வெற்றி பெற 329 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்ட நிலையில் 4-ம் நாள் முடிவில் அந்த அணி 1 விக்கெட் இழப்புக்கு 49 ரன்கள் எடுத்துள்ளது.
கிங்ஸ்டனில் நடைபெற்று வரும் டெஸ்டில் முதலில் விளையாடிய பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்ஸில் 9 விக்கெட் இழப்புக்கு 302 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. ஃபவாத் அலாம் 124 ரன்கள் எடுத்தார். மே.இ. தீவுகள் அணி முதல் இன்னிங்ஸில் 150 ரன்களுக்குச் சுருண்டது. ஷாஹீன் ஷா அப்ரிடி 6 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். பாகிஸ்தான் அணி 2-வது இன்னிங்ஸில் விரைவாக ரன்கள் எடுத்தது. 27.2 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 176 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. இதனால் 2-வது டெஸ்டை வெற்றி பெற மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு 329 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.
கடினமான சவாலை எதிர்கொண்டுள்ள மே.இ. தீவுகள் அணி 4-ம் நாள் முடிவில் 19 ஓவர்களில் 1 விக்கெட் இழப்புக்கு 49 ரன்கள் எடுத்துள்ளது. கிரைக் பிராத்வெயிட் 17, அல்ஸாரி ஜோசப் 8 ரன்களுடன் களத்தில் உள்ளார்கள். 9 விக்கெட்டுகள் மீதமுள்ள நிலையில் மே.இ. தீவுகள் அணி வெற்றி பெற 280 ரன்கள் தேவைப்படுகிறது. இதனால் கடைசி நாள் மிகவும் பரபரப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
2 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரில் மே.இ. தீவுகள் அணி 1-0 என முன்னிலை வகிக்கிறது.