அடிலெய்டில் செய்ததை சேப்பாக்கத்தில் செய்யத் தவறும் கோலி: விளைவு டக் அவுட்!
இந்தியக் கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி டெஸ்ட் கிரிக்கெட்டில் ஸ்வீப் ஷாட் ஆடாதது அவரது பலவீனமா என்ற கேள்வியை எழுப்புகிறது.
இந்தியக் கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி டெஸ்ட் கிரிக்கெட்டில் ஸ்வீப் ஷாட் ஆடாதது அவரது பலவீனமா என்ற கேள்வியை எழுப்புகிறது.
இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான 2-வது டெஸ்ட் ஆட்டம் சென்னை சேப்பாக்கத்தில் சனிக்கிழமை தொடங்கியது. டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட் செய்தது. இதில் களமிறங்கிய விராட் கோலி ரன் ஏதும் எடுக்காத நிலையில் மொயீன் அலி சுழலில் போல்டாகி டக் அவுட் ஆனார்.
பொதுவாக சுழற்பந்துவீச்சுக்கு சாதகமாக இருக்கும் ஆடுகளங்களில் பந்து நன்றாக திரும்பும்போது, பந்து திரும்புவதைத் தடுக்க பேட்ஸ்மேன்கள் ஸ்வீப் ஷாட் அல்லது கிரீஸிருந்து இறங்கி வந்து ஆடுவது வழக்கம். பிட்ச்சிலிருந்து பந்து திரும்பினால் அதை எதிர்கொள்வது கடினம் என்பதால் ஸ்வீப் அல்லது இறங்கு ஆடுவது பேட்ஸ்மேன்களின் வியூகமாக இருக்கும்.
சேப்பாக்கத்தில் இன்றைய ஆட்டமும் அப்படித்தான் இருந்தது. ஆடுகளம் சுழற்பந்துவீச்சுக்கு சாதகமாக இருந்து 4-வது நாள், 5-வது நாள் ஆட்டம்போல் பந்து நன்றாகத் திரும்பியது. இந்தச் சூழலில் மொயீன் அலியின் சுழலில் கோலி கவர் டிரைவ் ஷாட் ஆட முயற்சித்து போல்டானார்.
இதே ஆடுகளத்தில் ரோஹித் சர்மா ஸ்வீப் ஷாட்களை ஆடியும் அவ்வப்போது இறங்கி வந்து ஆடியும் சதமடித்து 161 ரன்கள் குவித்தார்.
அரைசதம் அடித்த அஜின்க்யா ரஹானேவும் அவ்வப்போது இறங்கி வந்து விளையாடி பந்து திரும்புவதைத் தவிர்த்தார்.
கோலி ஸ்வீப் ஷாட் ஆடுவதில் வல்லவர் இல்லை, பொதுவாக ஸ்வீப் ஷாட்களை ஆடவும் மாட்டார். ஆனால், தரமான வீரர் என்பதால் சூழலுக்கேற்ப அவ்வப்போது தனது ஆட்டத்திறனை மாற்றிக்கொள்வார். உதாரணம், 2014 அடிலெய்ட் டெஸ்ட்.
2014-இல் ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தின்போது முதல் டெஸ்ட் ஆட்டம் அடிலெய்டில் நடைபெற்றது. தோனி இல்லாமல் கோலி முதன்முதலாக டெஸ்ட் அணியை வழிநடத்தினார். இரண்டாவது இன்னிங்ஸில் வெற்றி இலக்கை நோக்கி களமிறங்கிய கோலி 141 ரன்கள் குவித்து ஆஸ்திரேலிய அணியை மிரளவைத்தார். கோலியின் இந்த ஆட்டத்தால் ஒரு கட்டத்தில் இந்திய அணி 364 என்ற வெற்றி இலக்கை அடைந்துவிடும் என்றே எதிர்பார்க்கப்பட்டது.
இன்றளவும் உலக கிரிக்கெட்டில் எவராலும் மறக்க முடியாத இன்னிங்ஸ் அது.
அதேசமயம், அந்த ஆட்டத்தில் நாதன் லயான் சுழலையும் எவராலும் எளிதில் மறக்க முடியாது. இன்றைய ஆட்டத்தில் கோலியை ஆட்டமிழக்கச் செய்த மொயீன் அலியின் அதே அளவில் பந்தை வீசி இந்திய விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஆனால், ஸ்வீப் ஷாட் ஆடாத கோலி அன்றைய ஆட்டத்தில் ஸ்வீப் ஷாட்களை ஆடினார். லயானின் சுழலைத் தவிர்ப்பதற்காகவே கோலி ஸ்வீப் ஷாட்களை ஆடினார். அதுவே அவர் 141 ரன்களைக் குவிப்பதற்குப் பெரிதும் உதவியது.
அப்போது ஸ்வீப் ஷாட்களை ஆடிய கோலி அதன்பிறகு அதைத் தவிர்ப்பது ஏன் என்ற கேள்விக்குப் பதில் இல்லை. 2018-இல் சௌதாம்ப்டனில் நடைபெற்ற டெஸ்டிலும் இதேபோல் மொயீன் அலி சுழலில் எல்பிடபிள்யு முறையில் ஆட்டமிழந்தார்.
முதல் டெஸ்ட் ஆட்டத்தின் முதல் இன்னிங்ஸிலும் டோம் பெஸ் சுழலில் திரும்பும் பந்தை நோக்கி ஆட முயற்சித்தே கேட்ச் ஆனார் கோலி.
சுழற்பந்துவீச்சாளர்களிடம் கோலி இப்படி ஆட்டமிழப்பது அவருக்கு பலவீனமாக அமைந்துவிடுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. கோலியை இன்று வீழ்த்திய மொயீன் அலி டெஸ்ட் தொடர் தொடங்குவதற்கு முன்பு கோலிக்கு எவ்வித பலவீனமும் இல்லை என்று கூறியது குறிப்பிடத்தக்கது.
உலகத் தரம் வாய்ந்த வீரர்கள் தங்களிடம் எத்தனை பலவீனங்கள் இருந்தாலும் அவற்றை விரைவில் சரி செய்து, பலவீனங்களே இல்லை என்ற நிலையையே மீண்டும் உருவாக்கி விடுவார்கள்.
கோலியும் உலகத் தரம் வாய்ந்த வீரர் என்பதால் சுழற்பந்துவீச்சில் ஆட்டமிழப்பதைத் தவிர்க்க அவர் விரைவில் புதிய வியூகத்துடன் களமிறங்குவார் என்பதில் எவருக்கும் சந்தேகம் இருக்காது.
அந்த வியூகம் அடுத்த இன்னிங்ஸிலேயே வருகிறதா, அடுத்த ஆட்டத்தில் வருகிறதா? காத்திருப்போம்!