அருண் கார்த்திக்கின் அபாரமான ஆட்டத்தால் சையத் முஷ்டாக் அலி கோப்பை இறுதிச்சுற்றுக்கு தமிழக அணி மீண்டும் முன்னேறியுள்ளது.
கரோனா சூழலில் உள்நாட்டு போட்டிகளை நடத்துவது தாமதமாகிவிட்ட நிலையில், அவற்றில் முதலாவதாக சையத் முஷ்டாக் அலி கோப்பைக்கான போட்டி நடத்தப்படுகிறது. ஜனவரி 10 முதல் ஜனவரி 19 வரை லீக் சுற்றுகள் நடைபெற்றன.
நாக் அவுட் ஆட்டங்கள் ஆமதாபாத்தில் நடைபெறுகின்றன. அங்கும் கரோனா பாதுகாப்பு வளையம் அமைக்கப்பட்டுள்ளது. காலிறுதி ஆட்டங்கள் ஜனவரி 26, 27 தேதிகளில் நடைபெற்றன. இன்று அரையிறுதி ஆட்டமும் இறுதிச்சுற்று ஜனவரி 31 அன்றும் நடைபெறவுள்ளன.
இன்று நடைபெற்று வரும் அரையிறுதிச் சுற்றில் தமிழகம் - ராஜஸ்தான் அணிகள் மோதின. முதலில் விளையாடிய ராஜஸ்தான் அணி, 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 154 ரன்கள் எடுத்தது. கேப்டன் அசோக் மெனாரியா 32 பந்துகளில் 51 ரன்களும் அர்ஜித் குப்தா 45 ரன்களும் எடுத்தார்கள். தமிழக வேகப்பந்து வீச்சாளர் முகமது 4 விக்கெட்டுகளையும் சாய் கிஷோர் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார்கள்.
இலக்கை விரட்டியபோது 3.2 ஓவருக்குள் இரு விக்கெட்டுகளை இழந்தது தமிழக அணி. இதனால் ரசிகர்கள் பதற்றமானார்கள். எனினும் பிறகு ஜோடி சேர்ந்த ஜெகதீசன் - அருண் கார்த்திக் 9 ஓவர்கள் வரை மேலும் விக்கெட்டுகள் விழாமல் பார்த்துக்கொண்டார்கள். பிஷ்னாய் பந்தில் 28 ரன்களில் ஆட்டமிழந்தார் ஜெகதீசன். அடுத்து வந்த தினேஷ் கார்த்திக் விரைவாக ரன்களை எடுத்தார். அருண் கார்த்திக் 33 பந்துகளில் அரை சதமெடுத்தார்.
தமிழக அணி 18.4 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 154 ரன்கள் எடுத்து சையத் முஷ்டாக் அலி கோப்பை இறுதிச்சுற்றுக்கு மீண்டும் நுழைந்துள்ளது. 34 வயது அருண் கார்த்திக் 54 பந்துகளில் 3 சிக்ஸர்கள், 9 பவுண்டரிகளுடன் 89 ரன்களும் 35 வயது தினேஷ் கார்த்திக் 17 பந்துகளில் 3 பவுண்டரிகளுடன் 26 ரன்களும் எடுத்துக் கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்கள்.
இந்தப் போட்டியில் இதுவரை விளையாடிய ஏழு ஆட்டங்களிலும் தமிழக அணி வென்றுள்ளது. இதனால் சையத் முஷ்டாக் அலி கோப்பையை இந்த முறை தமிழக அணி வெல்லும் என்கிற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த முறை இறுதிச்சுற்றுக்கு நுழைந்த தமிழக அணி, 1 ரன் வித்தியாசத்தில் கர்நாடகத்திடம் தோல்வியடைந்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.