முகப்பு
செய்திகள்

மிதாலி ராஜும் ஐசிசி தரவரிசையின் முதலிடமும்..

ஐசிசி மகளிர் ஒருநாள் கிரிக்கெட் வீராங்கனைகளுக்கான தரவரிசையில் இந்திய கேப்டன் மிதாலி ராஜ் முதலிடத்துக்கு முன்னேறியுள்ளார்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:34 AM
பகிர்:


ஐசிசி மகளிர் ஒருநாள் கிரிக்கெட் வீராங்கனைகளுக்கான தரவரிசையில் இந்திய கேப்டன் மிதாலி ராஜ் முதலிடத்துக்கு முன்னேறியுள்ளார்.

இங்கிலாந்து மகளிருடன் சமீபத்தில் நடைபெற்ற ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இந்திய கேப்டன் மிதாலி ராஜ் 3 ஆட்டங்களிலும் அரைசதம் அடித்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். கடைசி ஆட்டத்தில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் 75 ரன்கள் சேர்த்து இந்திய அணியை வெற்றி பெறச் செய்தார்.

இதன்மூலம், ஐசிசி தரவரிசையில் அவர் முதலிடத்துக்கு முன்னேறியுள்ளார்.

கடைசி இரண்டு ஆட்டங்களில் முறையே 44 மற்றும் 19 ரன்கள் எடுத்த ஷெபாலி வர்மா 49 இடங்கள் முன்னேறி 71-வது இடத்தைப் பிடித்துள்ளார். ஜுலான் கோஸ்வாமி பந்துவீச்சில் 4 இடங்கள் முன்னேறி 53-வது இடத்தைப் பிடித்துள்ளார். தீப்தி சர்மா ஒரு இடம் முன்னேறி 12-வது இடத்தைப் பிடித்திருக்கிறார்.

மிதாலி ராஜும் முதலிடமும்:

22 ஆண்டுகால கிரிக்கெட் வாழ்க்கையில் ஐசிசி தரவரிசையில் அவர் முதலிடத்தைப் பிடிப்பது இது 8-வது முறை.

கடைசியாக 2018-ம் ஆண்டு பிப்ரவரியில் அவர் முதலிடத்தைப் பிடித்தார். முதன்முதலாக 2005-ம் ஆண்டு ஏப்ரலில் அவர் முதலிடத்தைப் பிடித்தார்.

மிதாலி ராஜ் முதன்முறையாக முதலிடம் பிடித்ததற்கும், தற்போது முதலிடம் பிடித்திருப்பதற்குமான இடைவெளி 16 வருடங்கள். சர்வதேச கிரிக்கெட்டில் இதுவே அதிகபட்ச இடைவெளி.

இங்கிலாந்து முன்னாள் வீராங்கனை ஜானெட் பிரிட்டின் 1984-ம் ஆண்டில் முதன்முறையாக முதலிடம் பிடித்தார். கடைசியாக 1995-ம் ஆண்டு முதலிடம் பிடித்தார். இதையடுத்து, நியூசிலாந்து வீராங்கனை டெப்பி ஹாக்லி 1987-இல் முதன்முறையாகவும், 1997-இல் கடைசியாகவும் முதலிடம் பிடித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.