முகப்பு
செய்திகள்

பேட்டிங் பிடித்த அனைவரும் அதிரடி: 224 ரன்கள் குவித்தது இந்தியா

இங்கிலாந்துக்கு எதிரான 5-வது டி20 ஆட்டத்தில் முதலில் பேட் செய்த இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 224 ரன்கள் எடுத்துள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:48 PM
பகிர்:


இங்கிலாந்துக்கு எதிரான 5-வது டி20 ஆட்டத்தில் முதலில் பேட் செய்த இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 224 ரன்கள் எடுத்துள்ளது.

இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான 5-வது டி20 ஆட்டம் ஆமதாபாத்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் இயான் மார்கன் முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். இங்கிலாந்து அணியில் மாற்றம் எதுவுமில்லை.

இந்திய அணியில் கேஎல் ராகுலுக்குப் பதில் தமிழக வீரர் நடராஜன் சேர்க்கப்பட்டார்.

ராகுல் இல்லாததால் தொடக்க ஆட்டக்காரராக ரோஹித் சர்மாவுடன் கேப்டன் விராட் கோலி களமிறங்கினார்.

இந்த இணையில் ரோஹித் அதிரடி காட்டத் தொடங்க கோலி ஒத்துழைப்பு தந்தார். இதனால் பவர் பிளே முடிவில் இந்திய அணி விக்கெட் இழப்பின்றி 60 ரன்கள் எடுத்தது.

தொடர்ந்து சிக்ஸர்களாக மிரட்டத் தொடங்கிய ரோஹித், சாம் கரன் பந்தில் சிக்ஸர் அடித்ததன்மூலம் 30-வது பந்தில் அரைசதத்தை எட்டினார்.

ஸ்டோக்ஸ் வீசிய அடுத்த ஓவரிலும் சிக்ஸரும், பவுண்டரியும் அடித்து அசத்தினார் ரோஹித்.

ஆனால், அதே ஓவரில் அவர் போல்ட் ஆகி ஆட்டமிழந்தார். ரோஹித் 34 பந்துகளில் 4 பவுண்டரி, 5 சிக்ஸர்கள் உள்பட 64 ரன்கள் எடுத்தார்.

அடுத்து களமிறங்கிய சூர்யகுமார் வந்த வேகத்தில் அடில் ரஷித் சுழலில் அடுத்தடுத்து 2 சிக்ஸர்கள் அடித்து ரோஹித் விட்டுச்சென்ற அதிரடியைக் கையிலெடுத்தார்.

இதையடுத்து, கிறிஸ் ஜோர்டன் வீசிய 12-வது ஓவரில் சூர்யகுமார் ஹாட்ரிக் பவுண்டரி அடித்து அசத்தினார். இதனால், இந்திய அணியின் ரன் ரேட் ஓவருக்கு 11 ரன்களைத் தாண்டியது.

ஆனால், பெரிய இன்னிங்ஸாக மாற்ற வேண்டிய நேரத்தில் ரஷித் பந்தில் ஜோர்டனின் அட்டகாசமான முயற்சியால் சூர்யகுமார் (17 பந்துகள் 32 ரன்கள்) ஆட்டமிழந்தார்.

இதையடுத்து, ரிஷப் பந்த்-க்கு பதில் ஹார்திக் பாண்டியா முன்கூட்டியே களமிறக்கப்பட்டார்.

அவரும் பவுண்டரிகளாக அடிக்கத் தொடங்கினார். இதனிடையே பாட்னர்ஷிப்புகளுக்கு ஒத்துழைப்பு தந்து விளையாடி வந்த கோலி 36-வது பந்தில் அரைசதத்தை எட்டினார்.

இதையடுத்து, இந்த தொடரில் சிறப்பாக பந்துவீசி வந்த வுட் பந்தில் கோலி அடுத்தடுத்து 2 பவுண்டரிகள் அடித்தார்.

ஜோர்டன் வீசிய 19-வது ஓவரின் முதலிரண்டு பந்துகளில் பாண்டியா அடுத்தடுத்து 2 சிக்ஸர்கள் அடித்தார். இதனால், இந்திய அணியின் ஸ்கோர் 200 ரன்களைத் தாண்டியது.

கடைசி ஓவரை ஆர்ச்சர் வீசினார். அதில் கோலி 2 பவுண்டரிகள் விளாச அந்த ஓவரும் பெரிய ஓவராக மாறியது.

இதன்மூலம், நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 224 ரன்கள் எடுத்தது.

இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த கோலி 52 பந்துகளில் 7 பவுண்டரிகள், 2 சிக்ஸர்கள் உள்பட மொத்தம் 80 ரன்கள் எடுத்தார். பாண்டியா 17 பந்துகளில் 4 பவுண்டரிகள், 2 சிக்ஸர்கள் 39 எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

முழு கட்டுரையைப் படிக்க →