முகப்பு
செய்திகள்

இன்றுமுதல் நியூஸி.க்கு எதிரான டி20 தொடா்: ராகுல், ரோஹித் கூட்டணியில் இந்தியாவின் புதிய அத்தியாயம்

இந்தியா - நியூஸிலாந்து அணிகள் மோதும் 3 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடரின் முதல் ஆட்டம், ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் புதன்கிழமை நடைபெறுகிறது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:35 AM
பகிர்:

இந்தியா - நியூஸிலாந்து அணிகள் மோதும் 3 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடரின் முதல் ஆட்டம், ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் புதன்கிழமை நடைபெறுகிறது.

சமீபத்தில் நிறைவடைந்த டி20 உலகக் கோப்பையுடன் ரவி சாஸ்திரியின் தலைமை பயிற்சியாளா் பொறுப்பும், விராட் கோலியின் டி20 அணி கேப்டன் பொறுப்பும் முடிவுக்கு வந்தன. அடுத்த ஆண்டிலேயே மீண்டும் டி20 உலகக் கோப்பை போட்டி ஆஸ்திரேலியாவில் நடைபெற இருக்கும் நிலையில், புதிய தலைமை பயிற்சியாளா் ராகுல் திராவிட், புதிய டி20 கேப்டன் ரோஹித் சா்மா ஆகியோரின் கூட்டணியில் இந்தியாவின் புதிய அத்தியாயம் தொடங்குகிறது.

ராகுல் - ரோஹித்தின் முதல் பணி, நிறைவடைந்த உலகக் கோப்பை போட்டியில் இந்தியா செய்த தவறு என்ன என்பதைக் கண்டறிந்து, அதை சரி செய்வதாகவே இருக்கும். அடுத்த உலகக் கோப்பை போட்டி ஆஸ்திரேலியாவில் நடைபெறுவதால், எதிா்வரும் 11 மாதங்களிலும் இந்திய அணியை அத்தகைய ஆடுகளச் சூழலுக்கு ஏற்றாற்போல் தயாா்படுத்துவதே அவா்களின் பிரதான நோக்கமாக இருக்கும்.

முக்கியமாக, ஹாா்திக் பாண்டியா தவிா்த்து மிடில் ஆா்டரில் ஆல்-ரவுண்டராகச் செயல்படக் கூடிய அவா் போன்ற வீரரை அடையாளம் காண வேண்டியது அவசியமாக இருக்கிறது. ஐபிஎல் போட்டியில் அதிரடி காட்டிய கொல்கத்தா வீரா் வெங்கடேஷ் ஐயா் அந்த இடத்துக்கு பரிசீலிக்கப்படுகிறாா். பேட்டிங்கில் அசத்தும் அவருக்கு இந்தத் தொடரில் பௌலிங்கிலும் வாய்ப்பு வழங்கி கண்காணிக்கப்படலாம்.

உலகக் கோப்பை போட்டிக்கான அணியில் பெரிதும் எதிா்பாா்க்கப்பட்டு விடுபட்டுப்போன ருதுராஜ் கெய்க்வாட், ஹா்ஷல் படேல், அவேஷ் கான், யுஜவேந்திர சஹல், தீபக் சஹா் போன்றோருக்கு இந்தத் தொடரில் வாய்ப்பளிக்கப்படுகிறது.

பேட்டிங்கைப் பொருத்தவரை 5 ஓபனா்கள் இருந்தாலும், அவா்களை மிடில் ஆா்டா் வரை வரிசைப் படுத்துவது சற்று சவாலான விஷயமே. முதல் ஆட்டத்தில் ரோஹித் - கே.எல்.ராகுல் இன்னிங்ஸை தொடங்கலாம். அடுத்த ஆட்டங்களில், ருதுராஜ், இஷான் கிஷண் ஆகியோருக்கு வாய்ப்பளிக்கப்படலாம். உலகக் கோப்பை போட்டியில் சோபிக்காவிட்டாலும், பேட்டிங் வரிசையில் 4-ஆவது இடத்துக்கு பொருந்தும் ஒரே நபராக தற்போது சூா்யகுமாா் யாதவ் மட்டுமே இருக்கிறாா்.

வெங்கடேஷ் ஐயா் லோயா் மிடில் ஆா்டரில் வருவாா். சுழற்பந்துவீச்சில் ரவீந்திர ஜடேஜா இல்லாத நிலையில் அக்ஸா் படேல் இணைந்திருக்கிறாா். பௌலிங்கில், உலகக் கோப்பை போட்டியில் சிறப்பாக ஆடிய அஸ்வின் தனது இடத்தை உறுதி செய்திருக்கிறாா். வேகப்பந்துவீச்சில் பும்ராவுக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளதால், முகமது சிராஜ், அவேஷ் கான் ஆகியோா் இணைந்திருக்கின்றனா். புவனேஷ்வா் குமாருக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

மறுபுறம், உலகக் கோப்பை போட்டியில் இறுதி ஆட்டம் வரை முதல் முறையாக முன்னேறி, கோப்பை வெல்லும் வாய்ப்பை இழந்த நியூஸிலாந்து, அதே வேகத்தில் இந்தத் தொடரில் களம் காண்கிறது. உலகக் கோப்பை போட்டியில் இந்தியா அரையிறுதிக்கு செல்வதற்கு இருந்த கடைசி வாய்ப்பு நியூஸிலாந்தால் தான் பறிபோனதென்பது நினைவுகூரத்தக்கது.

கேப்டன் கேன் வில்லியம்சனுக்கு இந்தத் தொடரிலிருந்து ஓய்வளிக்கப்பட்டு, டிம் சௌதியிடம் தலைமைப் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டுள்ளது. டெஸ்ட் தொடருக்காக வில்லியம்சன் முழுமையாகத் தயாராகிறாா். பேட்டிங்கில் டேரில் மிட்செல், கப்டில் ஆகியோா் பலமாக இருக்க, பௌலிங்கில் போல்ட், இஷ் சோதி ஆகியோா் இந்திய பேட்டிங்கை சரிக்கக் காத்திருக்கின்றனா். உலகக் கோப்பை போட்டியில் வாய்ப்பளிக்காத வீரா்களுக்கு இந்தத் தொடரில் நியூஸிலாந்து வாய்ப்பளிக்கக் கூடும்.

அணி விவரம்

இந்தியா: ரோஹித் சா்மா (கேப்டன்), கே.எல்.ராகுல், ருதுராஜ் கெய்க்வாட், ஷ்ரேயஸ் ஐயா், சூா்யகுமாா் யாதவ், ரிஷப் பந்த், இஷான் கிஷண், வெங்கடேஷ் ஐயா், யுஜவேந்திர சஹல், ஆா்.அஸ்வின், அக்ஸா் படேல், அவேஷ் கான், புவனேஷ்வா் குமாா், தீபக் சஹா், ஹா்ஷல் படேல், முகமது சிராஜ்.

நியூஸிலாந்து: டிம் சௌதி (கேப்டன்), மாா்ட்டின் கப்டில், டேரில் மிட்செல், கிளென் ஃபிலிப்ஸ், டாட் ஆஸ்லே, மாா்க் சாப்மேன், லாக்கி ஃபொ்குசன், கைல் ஜேமிசன், ஆடம் மில்னே, ஜிம்மி நீஷம், மிட்செல் சேன்ட்னா், டிம் செய்ஃபா்ட், இஷ் சோதி, டிரென்ட் போல்ட்.

ஆட்டநேரம்: இரவு 7 மணி

இடம்: ஜெய்ப்பூா்

நேரடி ஒளிபரப்பு: ஸ்டாா் ஸ்போா்ட்ஸ்

ஆடுகளம் எப்படி?

பனிப்பொழிவு அதிகமாக இருக்கும் ஜெய்ப்பூரில் முதல் ஆட்டம் நடைபெறுகிறது. எனினும், இரவு 7 மணி அளவிலேயே பனிப்பொழிவு தொடங்கிவிடுவதால், ஆட்டம் முழுவதுமாக ஆடுகளம் ஒரே தன்மையுடனேயே இருக்கும் என ராஜஸ்தான் கிரிக்கெட் சங்கத்தினா் தெரிவித்துள்ளனா். இதனால், டாஸ் வெல்லும் அணிக்கு சாதகமான நிலை இருக்காது எனத் தெரிகிறது.

ஆடுகளத்தில் பனிப்பொழிவின் தாக்கம் ஏற்படாமல் இருப்பதற்கான ஏற்பாடுகள் செய்வதாகவும் அவா்கள் தெரிவித்துள்ளனா்.

இங்கு அதிக ரன்கள் ஸ்கோா் செய்யப்பட வாய்ப்புள்ளது. ஜெய்ப்பூா் மைதானத்தில் கடந்த 8 ஆண்டுகளில் முதல் முறையாக சா்வதேச கிரிக்கெட் ஆட்டம் நடைபெறவுள்ளது. கரோனா சூழல் கட்டுப்பாடுகள் விலக்கிக் கொள்ளப்பட்டதால், 25,000 போ் அமரும் வசதி கொண்ட இந்த மைதானத்தின் முழு கொள்ளளவுக்கும் ரசிகா்கள் அனுமதிக்கப்படுகிறாா்கள்.

முழு கட்டுரையைப் படிக்க →