முகப்பு
செய்திகள்

54 ரன்கள் மட்டும் கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்திய இந்தியா: இங்கிலாந்து உணவு இடைவேளையில் 131/2

8 விக்கெட்டுகள் மீதமுள்ள நிலையில் இங்கிலாந்து அணி வெற்றி பெற 237 ரன்கள் எடுக்கவேண்டும்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:05 AM
பகிர்:

இந்தியாவுக்கு எதிரான 4-வது டெஸ்டில், 5-வது நாளின் உணவு இடைவேளையின்போது இங்கிலாந்து அணி 2 விக்கெட் இழப்புக்கு 131 ரன்கள் எடுத்துள்ளது.

இங்கிலாந்துக்கு எதிரான 5 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி விளையாடி வருகிறது. 3 டெஸ்டுகள் முடிந்த நிலையில் இரு அணிகளும் 1-1 என சமநிலையில் உள்ளன. நான்காவது டெஸ்ட் லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. 

டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட், பந்துவீச்சைத் தேர்வு செய்தார். இந்தியா தனது முதல் இன்னிங்ஸில் தடுமாற்றமாக விளையாடி 61.3 ஓவர்களில் 191 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. ஷர்துல் 57, கோலி 50 ரன்கள் எடுத்தார்கள். இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்ஸில் 84 ஓவர்களில் 290 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. போப் 81 ரன்களும் வோக்ஸ் 50 ரன்களும் எடுத்தார்கள். உமேஷ் யாதவ் 3 விக்கெட்டுகளை எடுத்தார்.

இந்திய அணி 2-வது இன்னிங்ஸில் 466 ரன்கள் குவித்தது. ரோஹித் சர்மா 127, புஜாரா 61, ஷர்துல் தாக்குர் 60, ரிஷப் பந்த் 50 ரன்கள் எடுத்தார்கள். வோக்ஸ் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

4-வது டெஸ்டை வெற்றி பெற இங்கிலாந்து அணிக்கு 368 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. அந்த அணி 4-ம் நாள் முடிவில் 32 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 77 ரன்கள் எடுத்தது. பர்ன்ஸ் 31, ஹசீப் ஹமீத் 43 ரன்களுடன் களத்தில் இருந்தார்கள். கடைசி நாளில் 10 விக்கெட் மீதமுள்ள நிலையில் இங்கிலாந்து அணி வெல்ல 291 ரன்கள் தேவை. 

இன்றும் ஆடுகளம் பேட்டிங்குக்குச் சாதகமாக இருந்தாலும் இந்திய அணி பந்துவீச்சாளர்கள் சிறப்பாகச் செயல்பட்டார்கள். 125 பந்துகளை எதிர்கொண்டு 50 ரன்கள் எடுத்த பர்ன்ஸ், ஷர்துல் தாக்குர் பந்துவீச்சில் ரிஷப் பந்திடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து வந்த மலான், அவசரப்பட்டு ஓடி ரன் ஆவுட் ஆனார். அவர் 5 ரன்கள் மட்டுமே எடுத்தார். ஹசீப் ஹமீது 123 பந்துகளில் 6 பவுண்டரிகளுடன் அரை சதமெடுத்தார். ஜடேஜா பந்துவீச்சில் அவர் கொடுத்த கேட்சை நழுவவிட்டார் சிராஜ். 

5-ம் நாள் மதிய உணவு இடைவேளையின்போது இங்கிலாந்து அணி, 59 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 131 ரன்கள் எடுத்துள்ளது. இன்றைய நாளின் முதல் பகுதியில் 54 ரன்கள் மட்டும் கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளது இந்திய அணி. இதனால் 8 விக்கெட்டுகள் மீதமுள்ள நிலையில் இங்கிலாந்து அணி வெற்றி பெற 237 ரன்கள் எடுக்கவேண்டும். கடைசி இரு பகுதிகளிலும் இந்திய அணி மேலும் அழுத்தம் கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.