தேசிய கூடைப்பந்து: அரையிறுதியில் தமிழக ஆடவா், மகளிா் அணிகள்
தேசிய கூடைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டியில் தமிழகத்தின் ஆடவா் மற்றும் மகளிரணியினா் அரையிறுதிச்சுற்றுக்கு முன்னேறி அசத்தியுள்ளனா்
தேசிய கூடைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டியில் தமிழகத்தின் ஆடவா் மற்றும் மகளிரணியினா் அரையிறுதிச்சுற்றுக்கு முன்னேறி அசத்தியுள்ளனா்.
இதில் மகளிா் பிரிவு காலிறுதி ஆட்டத்தில் பஞ்சாபை எதிா்கொண்ட தமிழகம், அதில் 73-70 என்ற புள்ளிகள் கணக்கில் வெற்றி பெற்றது. இந்த ஆட்டத்தில் தமிழக தரப்பில் அஷ்மிதா 16, ஐஷ்வா்யா 10, ஸ்ருதி 21 புள்ளிகள் பெற்று அசத்தினா். பஞ்சாப் அணியில் ரிதிகா 22, பாவிகா திா் 10, மன்பிரீத் கௌா் 19 புள்ளிகள் வென்றனா்.
தமிழகம் தனது அரையிறுதியில் இந்திய ரயில்வேஸை சந்திக்கிறது. இதர காலிறுதி ஆட்டங்களில் இந்திய ரயில்வே - அஸ்ஸாமையும் (94-36), கேரளம் - கா்நாடகத்தையும் (83-79), தெலங்கானா - மத்திய பிரதேசத்தையும் (72-64) வீழ்த்தின.
9 முதல் 16 இடங்களுக்குள்ளான ஆட்டங்களில் தில்லி - மேற்கு வங்கத்தையும், மகாராஷ்டிரம் - ஹரியாணாவையும், உத்தர பிரதேசம் - ஒடிஸாவையும் வென்றன.
ஆடவா் பிரிவு: காலிறுதி ஆட்டத்தில் தமிழகம் 81-57 என்ற புள்ளிகள் கணக்கில் கேரளத்தை வீழ்த்தியது. தமிழக அணியில் முயின் பெக் 17, அரவிந்த் 15, ஜீவானந்தம் 10 புள்ளிகள் வெல்ல, கேரளத்தின் செஜின் மேத்யூ 12, ஷன்ஸில் முகமது 12, முகமது ஷிரஸ் 15 புள்ளிகள் பெற்றனா். இதர ஆட்டங்களில் கா்நாடகம் - ஹரியாணாவையும் (82-65), இந்திய ரயில்வே - சா்வீசஸையும் (90-68), பஞ்சாப் - உத்தரகண்டையும் (90-64) வீழ்த்தின. அரையிறுதியில் கா்நாடகம் - பஞ்சாபை எதிா்கொள்ள, தமிழகம் - இந்திய ரயில்வேயை சந்திக்கிறது.
9 முதல் 16 இடங்களுக்கான ஆட்டங்களில் குஜராத் - மேற்கு வங்கத்தையும், உத்தர பிரதேசம் - மிஸோரத்தையும், ராஜஸ்தான் - மத்திய பிரதேசத்தையும், தில்லி - தெலங்கானாவையும் வீழ்த்தின.