மகளிர் ஹாக்கி உலகக் கோப்பைப் போட்டியில் இந்திய அணி 9-ம் இடம் பிடித்துள்ளது.
டோக்கியோ ஒலிம்பிக்ஸில் சிறப்பாக விளையாடிய இந்திய மகளிர் ஹாக்கி அணி, நூலிழையில் வெண்கலப் பதக்கத்தைத் தவறவிட்டது. தற்போது ஸ்பெயினில் நடைபெற்று வரும் மகளிர் ஹாக்கி உலகக் கோப்பைப் போட்டியில் காலிறுதிக்குத் தகுதி பெறும் வாய்ப்பை இழந்தது. இந்திய மகளிர் அணியை 1-0 என வீழ்த்தி காலிறுதிக்குத் தகுதியடைந்தது ஸ்பெயின் அணி. 9-16 இடங்களுக்கான போட்டியில் கனடாவுக்கு எதிராக இந்திய மகளிர் அணி மோதியது. ஷூட் அவுட் முறையில் இந்தியா 3-2 என கனடாவை வீழ்த்தியது.
9-12 இடங்களுக்கான ஆட்டத்தில் ஜப்பானுடன் மோதியது இந்திய அணி. 3-1 என ஜப்பானை வீழ்த்தி 9-ம் இடத்தைப் பிடித்து உலகக் கோப்பைப் போட்டியில் தனது பயணத்தை நிறைவு செய்துள்ளது.
இந்திய அணி உலகக் கோப்பைப் போட்டியில் விளையாடியது பற்றி நவ்னீத் கெளர் தெரிவித்ததாவது:
ஸ்பெயினுடன் தோற்றபோது மிகவும் வேதனையடைந்தோம். அடுத்த ஆட்டங்களில் உடனடியாகக் கவனம் செலுத்த ஆரம்பித்தோம். அடுத்த ஆட்டங்களில் வெற்றி பெற்று நல்லவிதமாகப் போட்டியை நிறைவு செய்ய நினைத்தோம். கனடாவுக்கு எதிராக நன்றாக விளையாடியிருக்க வேண்டும். ஷூட் அவுட் வரை சென்றிருக்கக் கூடாது. நிறைய வாய்ப்புகளைத் தவறவிட்டோம். ஜப்பானுக்கு எதிராக ஆரம்பத்திலிருந்து நன்றாக விளையாடினோம். காமன்வெல்த் போட்டியில் இன்னும் நன்றாக விளையாடுவோம் என்றார்.
ஒலிம்பிக்ஸில் வெண்கலத்துக்கு அருகில் சென்ற இந்திய அணியால் உலகக் கோப்பைப் போட்டியில் 9-வது இடத்தையே அடைய முடிந்தது. 2018 காமன்வெல்த் கேம்ஸில் இந்திய மகளிர் ஹாக்கி 4-வது இடத்தைப் பிடித்தது. ஆனால் இதற்கு முன்பு இங்கிலாந்தில் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி 2002-ல் மான்செஸ்டரில் நடைபெற்றபோது தங்கம் வென்றது இந்திய மகளிர் ஹாக்கி அணி. இதனால் இங்கிலாந்தில் இம்முறை நடைபெறும் போட்டியிலும் தங்கம் வெல்லவேண்டும் என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.