செய்திகள்

கோலி, ராகுல் அரை சதம்: வங்கதேசத்துக்கு 185 ரன்கள் இலக்கு!

DIN

வங்கதேசத்துக்கு எதிரான டி20 உலகக் கோப்பை ஆட்டத்தில் இந்திய அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 184 ரன்கள் எடுத்துள்ளது.

டி20 உலகக் கோப்பைப் போட்டியில் அடிலெய்டில் இந்தியா - வங்கதேசம் அணிகள் விளையாடி வருகின்றன. டாஸ் வென்ற வங்கதேச கேப்டன் ஷகிப் அல் ஹசன் ஃபீல்டிங்கைத் தேர்வு செய்தார். இந்திய அணியில் தீபக் ஹூடாவுக்குப் பதிலாக அக்‌ஷர் படேல் இடம்பெற்றுள்ளார். இதனால் தினேஷ் கார்த்திக் இந்த ஆட்டத்தில் விளையாடுவது உறுதி செய்யப்பட்டுள்ளது.

ரோஹித் சர்மா 2 ரன்களில் ஆட்டமிழந்ததால் ஆரம்பத்தில் இந்திய அணியால் வேகமாக ரன்கள் எடுக்க முடியவில்லை. டஸ்கின் அஹமது சிறப்பாகப் பந்துவீசினார். 6 ஓவர்களில் 1 விக்கெட் இழப்புக்கு 37 ரன்கள் எடுத்தது இந்தியா. 16 ரன்கள் எடுத்தபோது புதிய சாதனை நிகழ்த்தினார் விராட் கோலி. டி20 உலகக் கோப்பைப் போட்டியில் அதிக ரன்கள் எடுத்த வீரர் என்கிற பெருமையை கோலி பெற்றார். இதற்கு முன்பு இலங்கையின் ஜெயவர்தனே 1016 ரன்கள் எடுத்த நிலையில் தற்போது அதைத் தாண்டியுள்ளார் கோலி.

சமீபகாலமாக அதிக ரன்கள் எடுக்காத ராகுல் இந்த ஆட்டத்தில் சுறுசுறுப்பாக விளையாடினார். 9-வது ஓவரில் இரு சிக்ஸர்களும் ஒரு பவுண்டரியும் அடித்தார். அந்த ஓவரில் இந்திய அணி 24 ரன்கள் எடுத்தது. 31 பந்துகளில் 4 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகளுடன் 50 ரன்கள் எடுத்த ராகுல் அடுத்தப் பந்தில் ஷகிப் அல் ஹசன் பந்தில் ஆட்டமிழந்தார். ஆரம்பத்திலிருந்து வேகமாக ரன்கள் எடுக்க ஆரம்பித்த சூர்யகுமார் யாதவ், 16 பந்துகளில் 4 பவுண்டரிகளுடன் 30 ரன்கள் எடுத்து ஷகிப் பந்தில் ஆட்டமிழந்தார். அடுத்து பாண்டியா 5 ரன்களில் ஆட்டமிழந்து வந்த வேகத்தில் திரும்பினார். இதன்பிறகு இந்திய அணி அதிக ரன்களுடன் இன்னிங்ஸை முடிக்க வேண்டிய பொறுப்பு கோலி வசம் வந்தது. 37 பந்துகளில் அரை சதமெடுத்தார் கோலி. இந்த டி20 உலகக் கோப்பை அவருக்கு அற்புதமாக அமைந்துள்ளது. இந்த ஆட்டத்தில் நன்கு விளையாடுவார் என எதிர்பார்க்கப்பட்ட தினேஷ் கார்த்திக் 7 ரன்களில் ரன் அவுட் ஆகி வெளியேறினார். அவருடைய ரன் அவுட் தீர்ப்பு சரியானதா என்கிற விவாதங்கள் சமூகவலைத்தளத்தில் ஏற்பட்டுள்ளன. அக்‌ஷர் படேல் 7 ரன்களில் ஆட்டமிழந்தார். கடைசி ஓவரில் ஒரு சிக்ஸர், ஒரு பவுண்டரி அடித்தார் அஸ்வின். 

இந்திய அணி  20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 184 ரன்கள் எடுத்துள்ளது. கோலி 44 பந்துகளில் 64 ரன்களும் அஸ்வின் 6 பந்துகளில் 13 ரன்களும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்கள். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குடிநீா் தொடா்பான புகாா்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்: அரியலூா் மாவட்ட கண்காணிப்பு அலுவலா்

ஜெயேந்திரா மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப்பள்ளி 100% தோ்ச்சி

வாழையூா் கரும்பாயிரம் கோயிலில் வெள்ளி ரத புறப்பாடு

திருவாங்கூா் தேவசம் போா்டு அறிவிப்பை திரும்பப் பெற வலியுறுத்தல்

அரியலூா் சிறுமி கொலை வழக்கில் மூவா் விடுவிக்கப்பட்டதை எதிா்த்து மேல்முறையீடு: உ. வாசுகி பேட்டி

SCROLL FOR NEXT