முகப்பு
செய்திகள்

முதல் ஒருநாள்: இங்கிலாந்தை எளிதாக வீழ்த்திய ஆஸ்திரேலியா

இங்கிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் ஆட்டத்தை 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது ஆஸ்திரேலிய அணி.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:52 AM
பகிர்:

இங்கிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் ஆட்டத்தை 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது ஆஸ்திரேலிய அணி.

டி20 உலகக் கோப்பைப் போட்டியை வென்ற இங்கிலாந்து அணி அடுத்ததாக ஆஸ்திரேலியாவில் 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. அடிலெய்டில் நடைபெற்ற முதல் ஆட்டத்தில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி ஃபீல்டிங்கைத் தேர்வு செய்தது. மொயீன் அலி, அடில் ரஷித், கிறிஸ் வோக்ஸ், சாம் கரண் இங்கிலாந்து அணியில் இடம்பெறவில்லை. லூக் வுட் ஒருநாள் கிரிக்கெட்டுக்கு அறிமுகமானார். டி20 உலகக் கோப்பை இறுதிச்சுற்றில் இங்கிலாந்து அணியில் விளையாடிய பட்லர், சால்ட், ஜோர்டன் ஆகியோர் மட்டும் இந்த ஆட்டத்தில் விளையாடினார்கள். 

யாரும் எதிர்பாராதவகையில் இங்கிலாந்து 14-வது ஓவரின்போது 4 விக்கெட் இழப்புக்கு 66 என்கிற நிலைமையில் இருந்தது. இதன்பிறகு ஜோடி சேர்ந்த பட்லரும் டேவிட் மலானும் சரிவைத் தடுத்து நிறுத்தினார்கள். மலானுடன் 50 ரன்கள் கூட்டணி அமைத்து 29 ரன்களுக்கு ஆட்டமிழந்தார் பட்லர். மலான் 64 பந்துகளில் அரை சதமெடுத்தார். 37-வது ஓவரின் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 199 என்கிற நிலைமையை அடைந்தது இங்கிலாந்து. எனினும் மற்றொரு முனையில் பொறுப்பாக ஆடிய மலான், 107 பந்துகளில் சதமெடுத்தார். கடைசியில் அணிக்கு நல்ல ஸ்கோரை வழங்கிவிட்டு 134 ரன்களுக்கு ஆட்டமிழந்தார் மலான். 

இங்கிலாந்து அணி 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 287 ரன்கள் எடுத்தது. டேவிட் வில்லி ஆட்டமிழக்காமல் 34 ரன்கள் எடுத்தார். கம்மின்ஸ், ஸாம்பா தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்கள். 

இந்த இலக்கை அபாரமாக விரட்டியது ஆஸ்திரேலிய அணி. வார்னர், டிராவிஸ் ஹெட், ஸ்மித் ஆகிய முதல் மூன்று பேட்டர்களும் அரை சதமெடுத்தார்கள். வார்னர் 86 ரன்களும் ஹெட் 69 ரன்களும் ஸ்மித் ஆட்டமிழக்காமல் 80 ரன்களும் எடுத்ததால் 46.5 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 291 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்று ஒருநாள் தொடரில் 1-0 என முன்னிலை பெற்றுள்ளது ஆஸ்திரேலிய அணி. ஆட்ட நாயகன் விருதை இங்கிலாந்து பேட்டர் மலான் வென்றார். 

2-வது ஒருநாள் ஆட்டம் சனியன்று சிட்னியில் நடைபெறவுள்ளது.  

முழு கட்டுரையைப் படிக்க →