இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 3-வது டெஸ்ட், தரம்சாலாவில் நடைபெறுவது சந்தேகம் எனத் தெரிகிறது.
ஆஸ்திரேலிய அணி இந்தியாவுக்குச் சுற்றுப்பயணம் செய்து 4 டெஸ்டுகள், 3 ஒருநாள் ஆட்டங்களில் விளையாடுகிறது. டெஸ்ட் தொடர், வியாழன் முதல் தொடங்கியுள்ளது.
3-வது டெஸ்ட், தரம்சாலாவில் மார்ச் 1 முதல் நடைபெறவுள்ளது. இந்நிலையில் தரம்சாலா விளையாட்டுத்திடலில் சீரமைப்புப் பணிகள் நடைபெற்று வருவதால் டெஸ்ட் ஆட்டம் நடைபெறுவதற்கு உரிய தகுதியைக் கொண்டுள்ளதா என பிசிசிஐ ஆய்வு செய்து வருகிறது. கடந்த வருடம் பிப்ரவரி மாதத்தில் இரு சர்வதேச டி20 ஆட்டங்கள் தரம்சாலாவில் நடைபெற்றன. அதற்குப் பிறகு அத்திடலில் சீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. வடிகால் வசதிகளும் மேம்படுத்தப்பட்டுள்ளன. வெளிக்களம் இன்னும் தயாராகவில்லை எனத் தெரிகிறது. இதையடுத்து கடந்த பிப்ரவரி 3 அன்று ஆய்வு மேற்கொண்டது பிசிசிஐ. இந்த வார இறுதியில் இன்னொருமுறை ஆய்வு நடத்தி - டெஸ்ட் ஆட்டம் நடத்துவதற்கான தகுதியைக் கொண்டுள்ளதா, வெளிக்களம் முழுமையாகத் தயாராக உள்ளதா எனப் பரிசோதிக்கப்படும். ஒருவேளை பிசிசிஐக்குத் திருப்தி வராவிட்டால் 3-வது டெஸ்ட், வேறு நகரில் நடைபெறும் எனத் தெரிகிறது. விசாகப்பட்டினம், ராஜ்கோட், புணே, இந்தூர் ஆகிய நகரங்கள் 3-வது டெஸ்டுக்கான பரிசீலனையில் உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.