முகப்பு
செய்திகள்

மதிய உணவு இடைவேளை: லயன் சுழலில் நான்கு விக்கெட்டுகளை இழந்த இந்தியா

இந்திய அணி மதிய உணவு இடைவேளையில் 4 விக்கெட் இழப்புக்கு 88 ரன்கள் எடுத்துத் தடுமாறி வருகிறது.

Updated On : 7 பிப்ரவரி, 2024 at 6:32 AM
பகிர்:

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-வது டெஸ்டில் இந்திய அணி மதிய உணவு இடைவேளையில் 4 விக்கெட் இழப்புக்கு 88 ரன்கள் எடுத்துத் தடுமாறி வருகிறது.

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட், தில்லியில் நேற்று தொடங்கியது. 2017-க்குப் பிறகு தில்லியில் டெஸ்ட் ஆட்டம் நடைபெறுகிறது. தில்லியில் தனது 100-வது டெஸ்டை விளையாடுகிறார் புஜாரா.

டாஸ் வென்ற ஆஸி. அணி கேப்டன் கம்மின்ஸ், பேட்டிங்கைத் தேர்வு செய்தார். அந்த அணி ஒரு வேகப்பந்து வீச்சாளர், மூன்று சுழற்பந்து வீச்சாளர்களுடன் களமிறங்கியுள்ளது. இந்திய அணியில் ஷ்ரேயஸ் ஐயர் சேர்க்கப்பட்டுள்ளார். இதனால் சூர்யகுமார் யாதவுக்கு அணியில் இடமில்லை.

Advertisement

ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 78.4 ஓவர்களில் 263 ரன்கள் எடுத்தது. பீட்டர் ஹேண்ட்ஸ்காம்ப் 142 பந்துகளை எதிர்கொண்டு 9 பவுண்டரிகளுடன் 72 ரன்களை எடுத்துக் கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். கவாஜா 81 ரன்கள் எடுத்தார். ஷமி 4 விக்கெட்டுகளையும் அஸ்வின், ஜடேஜா தலா 3 விக்கெட்டுகளையும் எடுத்தார்கள்.

இந்திய அணி முதல் நாள் முடிவில் 9 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 21 ரன்கள் எடுத்தது. ரோஹித் சர்மா 13, ராகுல் 4 ரன்களுடன் களத்தில் இருந்தார்கள். 

இன்று கே.எல். ராகுல் நல்லவிதமாக ஆடுவது போல தெரிந்தாலும் 41 பந்துகளில் 17 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். லயன் அவருடைய விக்கெட்டை எடுத்தார். இன்று, லயன் சுழற்பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் தடுமாறினார்கள் இந்திய பேட்டர்கள். ரோஹித் சர்மா 32, ஷ்ரேயஸ் ஐயர் 4 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்கள். 100-வது டெஸ்டை விளையாடும் புஜாரா டக் அவுட் ஆனார். முதல் டெஸ்டில் சரியாகப் பந்துவீசாத லயன், இந்த டெஸ்டில் இந்திய அணியின் முதல் 4 விக்கெட்டுகளையும் வீழ்த்தி அசத்தியுள்ளார். 2-வது நாளின் முதல் பகுதியில் இந்திய அணி 67 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்துள்ளது. 

மதிய உணவு இடைவேளையில் இந்திய அணி 35 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 88 ரன்கள் எடுத்துள்ளது. கோலி 14, ஜடேஜா 15 ரன்களுடன் களத்தில் உள்ளார்கள். இந்திய அணி 6 விக்கெட்டுகள் மீதமுள்ள நிலையில் 175 ரன்கள் பின்தங்கியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments