இந்தியாவுக்கு எதிரான 2-வது ஒருநாள் ஆட்டத்தில் இலங்கை அணி 215 ரன்களுக்கு ஆட்டமிழந்துள்ளது.
குவாஹாட்டியில் நடைபெற்ற இலங்கைக்கு எதிரான ஒருநாள் ஆட்டத்தை இந்தியா வென்றது. கொல்கத்தாவில் 2-வது ஒருநாள் ஆட்டம் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது. இலங்கை அணியில் காயம் காரணமாக நிசங்காவும் மதுஷங்காவும் இடம்பெறவில்லை. இந்திய அணியில் காயமடைந்த சஹாலுக்குப் பதிலாக குல்தீப் யாதவ் இடம்பெற்றுள்ளார்.
தொடக்க வீரர் அவிஷ்கா ஃபெர்னாண்டோவை 20 ரன்களில் போல்ட் செய்தார் சிராஜ். இதன்பிறகு 100 ரன்கள் வரை அடுத்த விக்கெட் விழாமல் குசால் மெண்டிஸும் நுவானிடு ஃபெர்னாண்டோவும் பார்த்துக் கொண்டார்கள். குசால் மெண்டிஸ் 34 ரன்களில் குல்தீப் யாதவ் பந்தில் ஆட்டமிழந்தார். அடுத்த ஓவரில் முதல் பந்திலேயே அக்ஷர் படேல் பந்தில் டக் அவுட் ஆனார் தனஞ்ஜெய டி சில்வா. இதனால் 2-வது விக்கெட்டுக்கு 100 ரன்கள் வரை பொறுமை காத்து விளையாடியது வீணானது. முதல் ஒருநாள் ஆட்டத்தில் அரை சதமெடுத்த நுவானிடு, ரன் அவுட் ஆகி வெளியேறினார். அடுத்த ஓவரில் கேப்டன் ஷனகாவை 2 ரன்களில் வீழ்த்தினார் குல்தீப் யாதவ். பிறகு அசலங்காவை 15 ரன்களில் வெளியேற்றினார். இன்று அவருடைய பந்துவீச்சு அற்புதமாக இருந்தது.
இலங்கை அணி 27 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 149 ரன்கள் எடுத்துத் தடுமாறியது.
ஹசரங்காவை 21 ரன்களில் வீழ்த்தினார் உம்ரான் மாலிக். இதன்பிறகு கருணாரத்னே 17, துனித் 32 ரன்களுக்கு ஆட்டமிழக்க, கடைசியாக லஹிரு குமாரா டக் அவுட் ஆனார். இதனால் இலங்கை அணி, 39.4 ஓவர்களில் 215 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. 2-வது விக்கெட்டுக்கு 73 ரன்களும் 9-வது விக்கெட்டுக்கு 38 ரன்களும் எடுத்தது தவிர இலங்கை அணிக்கு நல்ல கூட்டணி அமையாததால் அதிக ரன்களை எடுக்க முடியாமல் போனது. இந்தியத் தரப்பில் சிராஜ், குல்தீப் யாதவ் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளையும் உம்ரான் மாலிக் 2 விக்கெட்டுகளையும் அக்ஷர் படேல் 1 விக்கெட்டையும் எடுத்தார்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.