முகப்பு
செய்திகள்

இஷான் கிஷன் மீது ஐசிசி நடவடிக்கை எடுக்காதது ஏன்?: வெளியான தகவல்

தவறான முறையில் அப்பீல் செய்த இஷான் கிஷன் மீது ஐசிசி நடவடிக்கை எடுக்காதது குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

Updated On : 23 ஜனவரி, 2023 at 5:51 PM
பகிர்:
Updated On : 6 பிப்ரவரி, 2024 at 6:22 PM

தவறான முறையில் அப்பீல் செய்த இஷான் கிஷன் மீது ஐசிசி நடவடிக்கை எடுக்காதது குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

நியூசிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் ஆட்டத்தில் இந்திய அணியின் இன்னிங்ஸில் பாண்டியா துரதிர்ஷ்டவசமாக 28 ரன்களில் ஆட்டமிழந்தார். விக்கெட் கீப்பரின் கிளவுஸ் உரசியதால் ஸ்டம்புகளின் பைல்ஸ் விழுந்ததாகப் பலரும் கருதிய நிலையில் பந்து உரசி விழுந்ததாக 3-வது நடுவர் கருதி அவுட் என அறிவித்தார். நியூசிலாந்தின் இன்னிங்ஸில் பாண்டியா சம்பவத்தைக் கிண்டல் செய்வது போல ஒரு காரியம் செய்தார் விக்கெட் கீப்பர் இஷான் கிஷன். 16-வது ஓவரில் குல்தீப் யாதவ் வீசிய பந்தைத் தடுப்பாட்டம் ஆடினார் டாம் லதம். அப்போது ஸ்டம்பின் பைல்ஸ் கீழே விழுந்தது. தடுப்பாட்டம் ஆடியபோது ஸ்டம்புகளின் மீது லதமின் கால் உரசியதாக அனைவரும் கருதினார்கள். இதனால் இஷான் கிஷன், ரோஹித் சர்மா ஆகியோர் நடுவரிடம் அப்பீல் செய்தார்கள். உடனே 3-வது நடுவரிடம் இவ்விஷயத்தைக் கொண்டு சென்றார்கள் கள நடுவர்கள். அப்போதுதான் இஷான் கிஷன் வேண்டுமென்றே பைல்ஸைக் கீழே தள்ளியது தெரிய வந்தது. இதனால் பேட்டருக்குச் சாதகமான தீர்ப்பை அளித்தார் 3-வது நடுவர். இஷான் கிஷனின் இந்தச் செயலை வர்ணனையில் கண்டித்தார் முன்னாள் வீரர் கவாஸ்கர்.

இந்நிலையில் இஷான் கிஷன் மீது கள நடுவர்கள் எந்தப் புகாரையும் அளிக்கவில்லை. இதனால் அவர் மீது ஐசிசி நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை எனத் தகவல் வெளியாகியுள்ளது.  ஒருவேளை இஷான் கிஷன் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தால், நான்கு ஒருநாள் ஆட்டங்களுக்குத் தடை விதிக்கப்பட்டிருக்கவும் வாய்ப்புள்ளது. 

Advertisement

ஆட்டம் முடிந்த பிறகு போட்டியின் நடுவர் ஜவகல் ஸ்ரீநாத், இஷான் கிஷனை அழைத்து இதுகுறித்துப் பேசியுள்ளார். மேலும் அணியின் கேப்டன் ரோஹித் சர்மா, பயிற்சியாளர் ராகுல் டிராவிடமும் இதுகுறித்து தனது கருத்தை வெளிப்படுத்தியுள்ளார். கள நடுவர்கள் புகார் எதுவும் அளிக்காததால் இஷான் கிஷன் மீது ஸ்ரீநாத் நடவடிக்கை எடுக்கவில்லை எனத் தெரிகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.