"இந்தியாவில் பல நூற்றாண்டுகளாக பல்வேறு கலாசாரங்களும் மதங்களும் இருந்து வருகின்றன. நாட்டில் உள்ள மதக் குழுக்களில் பெருமைக்குரிய இடத்தில் இஸ்லாம் உள்ளது' என்று தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் அஜீத் தோவல் தெரிவித்தார்.
தில்லியில் இந்திய இஸ்லாமிய கலாசார மையம் சார்பில் செவ்வாய்க்கிழமை நிகழ்ச்சி ஒன்றுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்த நிகழ்ச்சியில் முஸ்லிம் உலக லீக் அமைப்பின் பொதுச் செயலாளரான சவூதி அரேபியாவைச் சேர்ந்த முகமது பின் அப்துல்கரீம் அல்-இஸ்ஸா உரை நிகழ்த்தினார்.
நிகழ்ச்சியில் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் அஜீத் தோவல் பேசியதாவது:
மிதவாத இஸ்லாமின் குரலாக முகமது பின் அப்துல்கரீம் அல்-இஸ்ஸா திகழ்கிறார். சிறந்த பண்டிதரான அவர் இஸ்லாமைக் குறித்த ஆழமான புரிதலைக் கொண்டுள்ளார்.
இந்தியாவுக்கும் சவூதி அரேபியாவுக்கும் இடையே சிறப்பான உறவுகள் இருக்கின்றன.
இரு நாட்டு உறவுகளும் பகிர்ந்து கொள்ளப்பட்ட கலாசாரப் பாரம்பரியம், பொருளதார உறவுகள் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டுள்ளன.
நமது தலைவர்கள் எதிர்காலம் குறித்த பொதுவான கண்ணோட்டத்தைக் கொண்டுள்ளனர்.
அவர்கள் நெருக்கமாகக் கலந்துரையாடி வருகின்றனர்.
உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியா, பன்முகத்தன்மையைக் கொண்டுள்ளது.
உங்களது (முகமது பின் அப்துல்கரீம் அல்-இஸ்ஸா) உரையில், பன்முகத்தன்மையின் அவசியம் குறித்து விரிவாகக் குறிப்பிட்டீர்கள்.
இந்தியாவில் பல நூற்றாண்டுகளாக பல்வேறு கலாசாரங்களும் மதங்களும் மொழிகளும் இருந்து வருகின்றன.
அனைவரையும் உள்ளடக்கிய ஜனநாயகம் என்ற முறையில் இந்தியா மத, இன, கலாசார வேறுபாடின்றி அனைத்து குடிமக்களுக்கும் வாய்ப்பளித்து வருகிறது.
நாட்டில் உள்ள மதக் குழுக்களில் இஸ்லாம் பெருமிதமான இடத்தில் உள்ளது.
உலகிலேயே முஸ்லிம்கள் அதிகமாக வசிக்கும் இரண்டாவது நாடாக இந்தியா உள்ளது.
இந்தியாவில் உள்ள முஸ்லிம் மக்கள்தொகையானது, இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பில் இடம்பெற்றுள்ள 33 நாடுகளின் மக்கள்தொகைக்கு சமமானதாகும் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.