சென்னைக்கு எதிரான ஆட்டத்தில் கொல்கத்தா வெற்றி
சென்னை சூப்பர் சிங்க்ஸ்க்கு எதிரான ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வெற்றிப்பெற்றது.
சென்னை சேப்பாக்கம் திடலில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கு இடையிலான 61வது ஐபிஎல் ஆட்டம் இன்று நடைபெற்றது.
இந்த ஆட்டத்தின் தொடக்கத்தில் சென்னை அணி டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்தது.
இதனைத் தொடர்ந்து முதலில் ஆடிய சென்னை அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான ருதுராஜ் கெய்க்வாட், கான்வே ஆகியோர் நிதானமான ஆட்டத்தையே வெளிப்படுத்தினர்.
கெய்க்வாட் 17 ரன்களில் ஆட்டமிழக்க அடுத்து களமிறங்கிய ரஹானே 16 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். ஆரம்பம் முதல் நிதானமாக ஆடிய கான்வே தாக்குர் வீசிய பந்தில் 30வது ரன்னில் ஆட்டமிழந்தார்.
அதற்கடுத்து வந்த வீரர்களில் ஷிவம் தூபே மட்டுமே நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ராயுடு (4), மொயின் அலி (1), ஜடேஜா (20) ஆகியோர் சொற்ப ரன்களிலேயே வெளியேறினர்.
அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய தூபே 34 பந்துகளில் 48 ரன்களை எடுத்தார். தோனி ஆட்டமிழக்காமல் 2 ரன்களுடன் களத்தில் இருந்தார்.
20 முடிவில் ஓவர்கள் முடிவில் சென்னை அணி 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 144 ரன்களை எடுத்தது. இதனைத் தொடர்ந்து 145 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் கொல்கத்தா அணி களமிறங்கியது.
துவக்க ஆட்டக்காரர்களான ஜேசன் ராய் மற்றும் ரஹ்மதுல்லா குர்பாஸ் ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.
அதன்பின், களமிறங்கி நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்திய அணியின் கேப்டன் நித்திஷ் ராணா(57) மற்றும் ரிங்கு சிங்(54) ரன்கள் எடுத்தனர். இறுதியில் 18.3 ஓவர்களில் 147 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் கொல்கத்தா அணி வெற்றிப்பெற்றது.