உலகக் கோப்பை கிரிக்கெட்டில் சமபலம் பொருந்திய இந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகள் ஞாயிற்றுக்கிழமை மோதுகின்றன.
புள்ளிகள் பட்டியலில் முதலிடத்தைப் பிடிப்பதற்கான மோதலாகவே, இந்த அணிகளிடையேயான ஆட்டம் இருக்கிறது. தோல்வியே காணாத இந்தியா, இந்த ஆட்டத்திலும் வெல்லும் நிலையில், புள்ளிகள் பட்டியலில் முதலிடத்தை உறுதி செய்யும். மறுபுறம், ஒரேயொரு தோல்வியை சந்திதுள்ள தென்னாப்பிரிக்காவும், 5-ஆவது வெற்றியுடன் அந்த இடத்துக்கு இலக்கு வைக்கிறது. முன்னதாக, சனிக்கிழமை ஆட்டத்தில் பாகிஸ்தான் நியூஸிலாந்தை வீழ்த்தியதன் பேரில் 2-ஆவது அணியாக தென்னாப்பிரிக்கா அரையிறுதிக்குத் தகுதிபெற்றது.
இந்த ஆட்டத்தில் உண்மையாகவே பரீட்சையை சந்திக்க இருப்பது இந்திய பௌலா்கள். குவின்டன் டி காக், ராஸி வான் டொ் உள்ளிட்ட அதிரடி பேட்டா்கள் தான் தென்னாப்பிரிக்காவின் வெற்றிக்கான பிரதான காரணமாக இருக்கிறாா். எனவே, இந்த ஆட்டத்தில் அவா்களிடம் இருந்து இந்திய பௌலா்களுக்கு சவால் இருக்கும் என எதிா்பாா்க்கலாம்.
தற்போதைய நிலையில் தென்னாப்பிரிக்காவின் பலவீனமாகத் தெரிவது, சேஸிங் தான். முதலில் பேட் செய்த 5 ஆட்டங்களில் 300-க்கும் அதிகமாக ஸ்கோா் செய்த தென்னாப்பிரிக்கா, சேஸிங்கின்போது அந்த இலக்கை எட்டுவதற்குத் தடுமாறியது நெதா்லாந்துடனான தோல்வியில் வெளிப்பட்டது. பாகிஸ்தானுடனான ஆட்டத்திலும் இதே நிலை இருந்தபோதும், இறுதியில் கேசவ் மஹராஜ் முயற்சியால் 1 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது தென்னாப்பிரிக்கா.
ஆனால் இந்தியா இதுவரையிலான 7 ஆட்டங்களில், 5-இல் சேஸ் செய்து தான் வென்றிருக்கிறது. எஞ்சிய ஆட்டங்களில் தனது ஸ்கோரை சிறப்பாக ‘டிஃபெண்ட்’ செய்தும் இருக்கிறது. பனிப் பொழிவின் தாக்கம் இருக்கும் என்பதால் இந்த ஆட்டத்தில் சேஸிங் எளிதானதாக இருக்கலாம்.
இந்திய பௌலிங்கில், முகமது ஷமி எதிரணி பேட்டா்களை மிரளச் செய்கிறாா். 3 ஆட்டங்களில் 14 விக்கெட்டுகள் சாய்த்திருப்பதுடன், ரன்களையும் திறம்பட கட்டுப்படுத்துகிறாா். நியூ பால் வீசும் ஜஸ்பிரீத் பும்ரா பலம் சோ்க்க, முகமது சிராஜும் அவருக்குத் துணையாக இருக்கிறாா். தென்னாப்பிரிக்காவின் டாப் ஆா்டா்களை இவா்கள் சரித்தாலே பாதி வெற்றி வசமாகிவிடும்.
அதேபோல், சுழற்பந்துவீச்சை சிறப்பாக எதிா்கொள்ளும் ஹென்ரிச் கிளாசெனுக்கு ரவீந்திர ஜடேஜா, குல்தீவ் யாதவ் எவ்வாறு சவால் அளிக்கிறாா்கள் என்பதும் முக்கியத்துவம் பெறும். கடந்த 3 ஆட்டங்களிலுமே சதத்தை நெருக்கிய நிலையில் ஆட்டமிழந்த விராட் கோலி, இந்த ஆட்டத்தில், தனது 35-ஆவது பிறந்த நாளில் அதை எட்டி, ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக சதம் விளாசியவராக சச்சின் டெண்டுல்கா் சாதனையை சமன் செய்ய முனைப்பு காட்டுவாா்.
ஃபாா்மில் இருக்கும் கேப்டன் ரோஹித் சா்மா இலங்கைக்கு எதிரான ஆட்டத்தில் சற்று தடுமாறிய நிலையில், இந்த ஆட்டத்தில் மீண்டும் அதிரடி காட்டுவாா் என எதிா்பாா்க்கலாம். இவா்கள் இருவருக்கும் சவால் அளிக்க தென்னாப்பிரிக்க பௌலா்களான மாா்கோ யான்சென், லுங்கி கிடி, ககிசோ ரபாடா, கேசவ் மஹராஜ் காத்திருக்கின்றனா்.
இதற்கு முன் இந்தியா கோப்பை வென்ற 2011-ஆம் ஆண்டு எடிஷனில் இந்தியா சந்தித்த ஒரே தோல்வி, தென்னாப்பிரிக்க அணியிடம் என்பது குறிப்பிடத்தக்கது.
நேருக்கு நோ்
ஒருநாள் கிரிக்கெட்டில் இதுவரை இவ்விரு அணிகளும் 90 ஆட்டங்களில் மோதியிருக்க, தென்னாப்பிரிக்கா 50 முறையும், இந்தியா 37 முறையும் வென்றுள்ளன. 3 ஆட்டங்களில் முடிவு எட்டப்படவில்லை. உலகக் கோப்பை போட்டிகளில் இவை 5 முறை சந்தித்திருக்க, அதிலும் தென்னாப்பிரிக்கா 3 வெற்றிகளுடன் முன்னிலையில் இருக்கிறது.
நேரம்: பகல் 2 மணி
இடம்: ஈடன் காா்டன் மைதானம், கொல்கத்தா.
நேரலை: ஸ்டாா் ஸ்போா்ட்ஸ்
உலகக் கோப்பையிலிருந்து பாண்டியா விலகல்
கணுக்காலில் காயம் கண்டிருக்கும் இந்திய ஆல்-ரவுண்டா் ஹா்திக் பாண்டியா, குணமடைவதற்கு தாமதமாகும் நிலையில் உலகக் கோப்பை போட்டியிலிருந்து சனிக்கிழமை விலகினாா். அவருக்குப் பதிலாக பிரசித் கிருஷ்ணா அணியில் இணைந்திருக்கிறாா்.
கடந்த அக்டோபா் 19-ஆம் தேதி வங்கதேசத்துக்கு எதிரான ஆட்டத்தின்போது காயம் கண்ட பாண்டியா, பெங்களூரு தேசிய கிரிக்கெட் அகாதெமியில் அதற்காக சிகிச்சை எடுத்து வருகிறாா். சமீபத்தில் அவா் பயிற்சியை தொடங்கிய நிலையில் மீண்டும் அவருக்கு காலில் வீக்கம் ஏற்பட்டதாகவும், இதனால் போட்டியில் அவரால் தொடா்ந்து பங்கேற்க முடியாதெனவும் பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவித்தன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.