ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டி தொடங்குவதற்கு முன்னதாக சச்சின் டெண்டுல்கர் போல பேட் செய்வேன் எனக் கூறியதாக ஆப்கானிஸ்தான் வீரர் இப்ராஹிம் ஸத்ரான் தெரிவித்துள்ளார்.
உலகக் கோப்பையில் மும்பை வான்கடே மைதானத்தில் இன்று நடைபெற்று வரும் போட்டியில் ஆஸ்திரேலியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் விளையாடி வருகின்றன. இந்தப் போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த ஆப்கானிஸ்தான் 5 விக்கெட்டுகளை இழந்து 291 ரன்கள் குவித்தது. அந்த அணியில் இப்ராஹிம் ஸத்ரான் அதிகபட்சமாக 129 ரன்கள் குவித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். ஆப்கானிஸ்தான் அணிக்காக உலகக் கோப்பையில் சதம் விளாசிய முதல் வீரர் என்ற சாதனையையும் அவர் படைத்தார்.
இதையும் படிக்க: உலகக் கோப்பையில் மிட்செல் ஸ்டார்க் புதிய சாதனை!
இந்த நிலையில், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டி தொடங்குவதற்கு முன்னதாக சச்சின் டெண்டுல்கர் போல பேட் செய்வேன் எனக் கூறியதாக இப்ராஹிம் ஸத்ரான் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறியதாவது: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டிக்கு முன்னதாக சச்சின் டெண்டுல்கரிடம் பேசினேன். அவர் அவரது அனுபவங்களை என்னுடன் பகிர்ந்து கொண்டார். போட்டி தொடங்குவதற்கு முன்னதாக நான் சச்சின் டெண்டுல்கர் போல விளையாடுவேன் எனக் கூறினேன். சச்சினிடம் பேசியது எனக்கு அதிக ஆற்றலையும், நம்பிக்கையையும் கொடுத்தது. ஆப்கானிஸ்தான் அணிக்காக உலகக் கோப்பையில் முதல் வீரராக சதம் விளாசியது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது.
இதையும் படிக்க: உலகக் கோப்பையில் சதம் விளாசிய முதல் ஆப்கானிஸ்தான் வீரர்!
இந்த உலகக் கோப்பைத் தொடருக்காக எனது கடின உழைப்பை வழங்கியுள்ளேன். பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் சதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டேன். அப்போது எனது பயிற்சியாளரிடம் அடுத்த மூன்று போட்டிகளுக்குள் நான் சதமடிப்பேன் எனக் கூறினேன். நாங்கள் விக்கெட்டுகளை இழக்காமல் பார்ட்னர்ஷிப் அமைத்திருந்தால் 300 ரன்களைக் கடந்திருப்போம். போட்டியின் இறுதிக் கட்டத்தில் ரஷித் கான் சிறப்பாக விளையாடினார் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.