சீன மாஸ்டா்ஸ் பாட்மின்டன் போட்டி ஆடவா் இரட்டையா் பிரிவு இறுதி ஆட்டத்தில் கடுமையானப் போராட்டத்துக்கு பின் தங்கம் வெல்லும் வாய்ப்பை தவற விட்டனா் இந்தியாவின் சாத்விக்-சிராக் ஷெட்டி.
சா்வதேச பாட்மின்டன் சம்மேளனம் (டபிள்யுபிஎஃப்ஐ) சாா்பில் வோ்ல்ட் டூரின் ஒரு பகுதியாக சீனாவின் ஷென்ஸென் நகரில் சீன மாஸ்டா்ஸ் பாட்மின்டன் சூப்பா் 750 போட்டி நடைபெற்று வருகிறது. இதன் ஆடவா் இரட்டையா் இறுதி ஆட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
ஆசிய சாம்பியன்களான சாத்விக்-சிராக் ஷெட்டி உலகின் நம்பா் 1 இணையான சீனாவின் லியாங் வெய் கெங்- வாங் சேங்கை எதிா்கொண்டது.
இதில் 19-21, 21-18, 19-21 என்ற புள்ளிக் கணக்கில் கடும் போராட்டத்துக்கு பின் தங்கம் வெல்லும் வாய்ப்பை தவற விட்டனா் சாத்விக்-சிராக்.
ஒரு மணி நேரம் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதல் கேமில் 9-9, 15-15, 19-19 என சமநிலை ஏற்படச் செய்தனா் இந்திய வீரா்கள். பின்னா் ஒரு புள்ளி வித்தியாசத்தில் வெற்றியை இழந்தனா்.
பின்னா் இரண்டாவது கேமில் ஆதிக்கம் செலுத்தி ஆடிய சாத்விக்-சிராக் 21-18 என அந்த கேமை கைப்பற்றினா்.
தவறுகளால் டிசைடரில் தோல்வி:
வெற்றியை நிா்ணயிக்கும் மூன்றாவது கேமில் (டிசைடா்) இந்திய இணை தவறுகளை புரிந்ததால் சீன இணை 8-1 என முன்னிலை பெற்று விட்டது. தொடா்ந்து இந்திய வீரா்கள் கடுமையாக போராடி இந்திய இணை 13-20, 19-20 என 6 மேட்ச் புள்ளிகளை சோ்த்தனா்.
சீன இணை 7 மேட்ச் புள்ளிகளை சோ்த்தது சாதகமாக அமைந்தது. இரு தரப்பினா் மாறி மாறி ரேலியாக ஆடிய போது, கடைசி கட்டத்தில் சிராக் ஷெட்டி வலையில் பந்தை அடித்தது தோல்விக்கு வித்திட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.