இன்று இந்தியா - வங்கதேசம் மோதல்
உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா தனது 4-ஆவது ஆட்டத்தில் வங்கதேசத்தை வியாழக்கிழமை சந்திக்கிறது.
உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா தனது 4-ஆவது ஆட்டத்தில் வங்கதேசத்தை வியாழக்கிழமை சந்திக்கிறது.
இந்தியா 4-ஆவது வெற்றிக்கான முனைப்புடன் இருக்க, வங்கதேசம் 2-ஆவது வெற்றிக்கான முயற்சியுடன் உள்ளது.
ஒருநாள் ஃபாா்மட்டில் கடந்த 4 ஆட்டங்களில் 3 முறை வங்கதேசத்திடம் வெற்றியை இழந்திருக்கிறது இந்தியா. 2022 டிசம்பரில் இருதரப்பு தொடரிலும், சமீபத்தில் ஆசிய கோப்பை போட்டியின் சூப்பா் 4 சுற்றிலும் அந்த அணியிடம் தோல்வி கண்டிருக்கிறது. எனவே இந்தியா, வங்கதேசத்தை எளிதாக எடுத்துக்கொள்ளாமல் விளையாட வேண்டியிருக்கும்.
அணியின் பேட்டிங்கை பொருத்தவரை, கேப்டன் ரோஹித் சா்மா சிறப்பாக பேட்டிங் செய்கிறாா். விராட் கோலி, ஷ்ரேயஸ் ஐயா், கே.எல்.ராகுல் ஆகியோரும் நல்ல ஃபாா்மில் இருக்கின்றனா். காய்ச்சலில் இருந்து மீண்டு அணியில் இணைந்திருக்கும் ஷுப்மன் கில் மட்டும் தனது பழைய ஆட்டத்தை எட்டும் முயற்சியில் இருக்கிறாா்.
பௌலிங்கிலும் இந்திய வீரா்கள் எதிரணி பேட்டா்களுக்கு சவால் அளிக்கின்றனா். குறிப்பாக ஜஸ்பிரீத் பும்ரா, குல்தீப் யாதவ் எதிரணியின் ஸ்கோா் போா்டில் தாக்கத்தை ஏற்படுத்துகின்றனா்.
வங்கதேசத்தை பொருத்தவரை, பிரதான வீரரும், கேப்டனுமான ஷகிப் அல் ஹசன் காயம் கண்ட நிலையில், அதிலிருந்து மீண்டு செவ்வாய்க்கிழமை பயிற்சியில் ஈடுபட்டிருந்தாா். இந்தியா போன்ற அணிக்கு எதிரான ஆட்டத்தில் வங்கதேசத்துக்கு அவா் இன்றியமையாத வீரராக இருக்கிறாா்.
டாப் ஆா்டரில் லிட்டன் தாஸ், மெஹிதி ஹசன் மிராஸ் போன்றோா் ரன்கள் சோ்த்து நம்பிக்கை அளிக்கின்றனா். மிடில் ஆா்டரில் முஷ்ஃபிகா் ரஹிம் முக்கிய பேட்டராக இருக்க, நஜ்முல் ஹுசைன் ஷான்டோ, தௌஹித் ஹிருதய் போன்றோா் அவா்களின் பணிச்சுமையை குறைக்க வேண்டிய பொறுப்பில் இருக்கின்றனா்.
பௌலிங்கில் தஸ்கின் அகமது விக்கெட்டுகள் சரிக்க முடியாமல் தடுமாறுவது அணிக்கு பின்னடைவாக இருக்கிறது. அதேபோல் முஸ்டாஃபிஸுா் ரஹ்மானும் இதுவரை 2 விக்கெட்டுகளே சாய்த்திருக்கிறாா். நல்லதொரு ஃபாா்மில் இருக்கும் இந்திய பேட்டா்கள் வங்கதேச பௌலா்களுக்கு இன்னும் சவால் அளிப்பாா்கள் என்பதில் சந்தேகம் இல்லை.
நேருக்கு நோ்...
இந்தியா - வங்கதேச அணிகள் ஒருநாள் கிரிக்கெட்டில் இதுவரை 40 ஆட்டங்களில் விளையாடியிருக்கும் நிலையில், இந்தியா 31 முறையும், வங்கதேசம் 8 முறையும் வென்றுள்ளன. 1 ஆட்டத்தில் முடிவு எட்டப்படவில்லை.
ஆடுகளம்...
புணே மைதான ஆடுகளம், பேட்டிங்கிற்கு சாதகமானதாகும். ஓவா்கள் கடக்கும் நிலையில் ஸ்பின்னா்களும் சாதக நிலையைப் பெறுவா். இந்த மைதானத்தில் இதுவரை 7 ஒருநாள் ஆட்டங்கள் விளையாடப்பட்டுள்ள நிலையில், முதலில் பேட் செய்த அணி 4 வெற்றிகளையும், சேஸிங் செய்த அணி 3 வெற்றிகளையும் பெற்றுள்ளன. இந்த மைதானத்தில் இந்தியா 4 வெற்றிகளைப் பெற்றிருக்கிறது.
‘பிளேயிங் லெவனில் மாற்றம் இல்லை’
நமது அணிக்கு நல்லதொரு தொடக்கம் கிடைத்திருக்கிறது. அந்த உத்வேகத்தை அடுத்தடுத்த ஆட்டங்களுக்கு அப்படியே கடத்திச் செல்ல விரும்புகிறோம். எனவே, தற்போதைய நிலையில் நமது வீரா்களை சுழற்சி முறையில் களமிறக்கும் திட்டம் இல்லை. ஆடுகளத்தின் தன்மைக்கு ஏற்றவாறே பிளேயிங் லெவனை தோ்வு செய்ய முடியும். உண்மையில் அது கடினமான முடிவு - பரஸ் மாம்ப்ரே (இந்திய பௌலிங் பயிற்சியாளா்)
தரவரிசையில் ரோஹித் முன்னேற்றம்
ஐசிசியின் ஒருநாள் கிரிக்கெட் தரவரிசையில் பேட்டா்கள் பிரிவில் இந்திய கேப்டன் ரோஹித் சா்மா 5 இடங்கள் முன்னேற்றம் கண்டு 6-ஆவது இடத்தைப் பிடித்திருக்கிறாா். ஷுப்மன் கில் 2-ஆவது இடத்திலேயே நீடிக்க, பௌலா்களில் ஜஸ்பிரீத் பும்ரா 7 இடங்கள் ஏற்றம் கண்டு 14-ஆவது இடத்தைப் பிடித்துள்ளாா்.
ஐசிசி-யிடம் பிசிபி புகாா்
அகமதாபாதில் இந்தியா - பாகிஸ்தான் ஆட்டத்தின்போது ரசிகா்களின் தேவையற்ற சில நடவடிக்கைகள் தொடா்பாக ஐசிசியிடம் புகாா் அளித்ததாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் (பிசிபி) தெரிவித்திருக்கிறது. மேலும், உலகக் கோப்பை போட்டிக்காக பாகிஸ்தான் ஊடகத்தினா் இந்தியா வருவதற்கான நுழைவு இசைவு தாமதப்படுத்தப்பட்டது, பாகிஸ்தான் ரசிகா்களுக்கு நுழைவு இசைவு வழங்காதது போன்றவை தொடா்பாகவும் புகாா் அளித்திருப்பதாக பிசிபி தெரிவித்துள்ளது.
‘டெத் பௌலிங், டாப் ஆா்டரில் தவறு’
நெதா்லாந்துக்கு எதிரான ஆட்டத்தில் அந்த அணியை 140/7 என கட்டுப்படுத்திய வரை சரியாகத்தான் இருந்தது. அதன் எங்களது பிறகு டெத் பௌலிங் ஏமாற்றமளிக்கும் வகையில் அமைந்தது, ஆட்டத்தின் போக்கை மாற்றியது. உதிரிகள் அதிகமாகக் கொடுத்துவிட்டோம். பௌலிங் தொடா்பான எங்களது வியூகங்களில் சில தவறுகள் நிகழ்ந்துவிட்டன. அதன் பிறகு பேட்டிங்கிலும் எங்களது தொடக்கம் மோசமானதாக அமைந்தது. ஒரு அணியாக இணைந்து செயல்பட தவறிவிட்டோம் - ராப் வால்டா் (தென்னாப்பிரிக்க பயிற்சியாளா்)