செய்திகள்

3-வது ஒருநாள்: சதம் விளாசிய மார்கரம்; ஆஸ்திரேலியாவுக்கு 339 ரன்கள் இலக்கு!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-வது ஒருநாள் போட்டியில் தென்னாப்பிரிக்க அணி 6 விக்கெட்டுகளை இழந்து 338 ரன்கள் குவித்துள்ளது.

DIN

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-வது ஒருநாள் போட்டியில் தென்னாப்பிரிக்க அணி 6 விக்கெட்டுகளை இழந்து 338 ரன்கள் குவித்துள்ளது.

ஆஸ்திரேலியா தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான மூன்றாவது ஒருநாள் போட்டி இன்று (செப்டம்பர் 12) நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இதனையடுத்து, தென்னாப்பிரிக்கா முதலில் பேட் செய்தது.

அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக டி-காக் மற்றும் கேப்டன் டெம்பா பவுமா களமிறங்கினர். இந்த இணை தென்னாப்பிரிக்க அணிக்கு சிறப்பான தொடக்கத்தைத் தந்தது. சிறப்பாக விளையாடிய இருவரும் அரைசதம் கடந்து அசத்தினர். அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய டி-காக் 77  பந்துகளில் 82 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். அதில் 10 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்கள் அடங்கும். தென்னாப்பிரிக்க அணி 146 ரன்களுக்கு தனது முதல் விக்கெட்டை இழந்தது. டி-காக்கைத் தொடர்ந்து கேப்டன் டெம்பா பவுமா 57 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். அதில் 6 பவுண்டரிகள் அடங்கும்.

அதன்பின் ரீஸா ஹென்ரிக்ஸ் மற்றும் மார்கரம் ஜோடி சேர்ந்தனர். இந்த இணை சிறப்பாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தியது. இருப்பினும், ஹென்ரிக்ஸ் 39 ரன்களில் ரன் அவுட் ஆனார். அவரைத் தொடர்ந்து களமிறங்கிய க்ளாசன் ரன் ஏதும் எடுக்காமலும், டேவிட் மில்லர் 8 ரன்களிலும் ஆட்டமிழந்து வெளியேறினர். பின்னர் மார்கரம் மற்றும் மார்கோ ஜேன்சன் ஜோடி சேர்ந்தனர். தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடிய மார்கரம் சதம் விளாசி அசத்தினார். 74 பந்துகளில் 102 ரன்கள் எடுத்து இறுதி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். அதில் 9 பவுண்டரிகள் மற்றும் 4  சிக்ஸர்கள் அடங்கும். 

இறுதியில் தென்னாப்பிரிக்க அணி 50 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 338 ரன்கள் குவித்தது.

ஆஸ்திரேலியா தரப்பில் டிராவிஸ் ஹெட் 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். மார்கஸ் ஸ்டொய்னிஷ், நாதன் எல்லிஸ் மற்றும் தன்வீர் சங்கா தலா ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றினர். 

339 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி ஆஸ்திரேலிய அணி களமிறங்குகிறது. 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் ஆஸ்திரேலிய அணி 2-0 என்ற கணக்கில் முன்னிலையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மோடியின் கைப்பாவையாக மாறிய தேர்தல் ஆணையம்: கார்கே குற்றச்சாட்டு!

டிஐஜி வருண் குமாருக்கு எதிராக அவதூறு கருத்து தெரிவிக்க சீமானுக்கு இடைக் காலத் தடை!

அமர்நாத் யாத்திரை செல்ல நாளைமுதல் அனுமதியில்லை! காஷ்மீர் நிர்வாகம் அறிவிப்பு

ஏ சான்றிதழ் பெற்ற ரஜினி திரைப்படங்கள்!

எங்கள் கூட்டணியிலிருந்து எந்த கட்சியும் வெளியேறாது: அமைச்சர் கே.என்.நேரு

SCROLL FOR NEXT