செய்திகள்

இரண்டு சதங்கள், இரண்டு அரைசதங்கள்: ஆஸ்திரேலியாவுக்கு 400 ரன்கள் இலக்கு!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-வது ஒருநாள் போட்டியில் முதலில் பேட் செய்த இந்திய அணி 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 399 ரன்கள் குவித்துள்ளது.

DIN

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-வது ஒருநாள் போட்டியில் முதலில் பேட் செய்த இந்திய அணி 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 399 ரன்கள் குவித்துள்ளது.

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி இந்தூரில் உள்ள ஹோல்கர் மைதானத்தில் இன்று (செப்டம்பர் 24) நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இதனையடுத்து, இந்தியா முதலில் பேட் செய்தது. 

இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஷுப்மன் கில் மற்றும் ருதுராஜ் கெய்க்வாட் களமிறங்கினர். முதல் ஒருநாள் போட்டியில் சிறப்பாக விளையாடிய ருதுராஜ் இன்றையப் போட்டியில் 8 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். இதனையடுத்து, ஷுப்மன் கில்லுடன் ஜோடி சேர்ந்தார் ஸ்ரேயாஸ் ஐயர். இந்த இணை அதிரயாக விளையாடி ரன் குவிப்பில் ஈடுபட்டது. தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடிய இருவரும் சதம் விளாசி அசத்தினர். ஸ்ரேயாஸ் ஐயர் 90 பந்துகளில் 105 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். அதில் 11 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்கள் அடங்கும். ஷுப்மன் கில் 97 பந்துகளில் 104 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். அதில் 6 பவுண்டரிகள் மற்றும் 4  சிக்ஸர்கள் அடங்கும்.

அவர்களைத் தொடர்ந்து களமிறங்கிய கே.எல்.ராகுல் மற்றும் இஷான் கிஷன் தங்களது பங்குக்கு அதிரடி காட்டினர். இருப்பினும், இஷான் கிஷன் 31 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். களமிறங்கியது முதலே அதிரடி காட்டிய கேப்டன் கே.எல்.ராகுல் அரைசதம் அடித்து அசத்தினார். அவர் 38 பந்துகளில் 52 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் 3 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்கள் அடங்கும். அதன்பின் களமிறங்கிய சூர்யகுமார் யாதவ் ருத்ரதாண்டவம் ஆடினார். அதிரடியாக விளையாடிய அவர் 37 பந்துகளில் 72 ரன்கள் குவித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். அதில் 6 பவுண்டரிகள் மற்றும் 6 சிக்ஸர்கள் அடங்கும். ஜடேஜா 13 ரன்களுடன் களத்தில் இருந்தார். 

இறுதியில் இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களின் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 399 ரன்கள் எடுத்தது.

ஆஸ்திரேலிய தரப்பில் கேமரூன் கிரீன் 2  விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். ஜோஸ் ஹேசில்வுட், சீன் அப்பாட் மற்றும் ஆடம் ஸாம்பா தலா ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றினர்.

400 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்கை நோக்கி ஆஸ்திரேலிய அணி களமிறங்குகிறது.

இந்தப் போட்டியில் இந்திய அணி குவித்துள்ள 399 ரன்களே ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்திய அணி ஒருநாள் போட்டிகளில் குவித்துள்ள அதிகபட்ச ஸ்கோர் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

எஸ்.ஐ.ஆர். மூலம் குறுக்கு வழியில் வெல்ல முயற்சி: மு.க. ஸ்டாலின்

6 முன்னணி நிறுவனங்களின் சந்தை மதிப்பு ரூ.75,257 கோடியாக உயர்வு!

மீண்டும் ஆப்கானிஸ்தான் பிரீமியர் லீக் தொடக்கம்!

இம்ரான் கானுக்கு 17 ஆண்டுகள் சிறைத்தண்டனை: நாடு தழுவிய போராட்டத்துக்கு ஆதரவாளர்களுக்கு அழைப்பு!

கிறிஸ்துமஸ் விடுமுறை: 891 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்!

SCROLL FOR NEXT