சுவிட்ஸா்லாந்தில் நடைபெற்ற டையமண்ட் லீக் போட்டியின் 11-ஆவது மீட்டில் இந்திய ஈட்டி எறிதல் வீரா் நீரஜ் சோப்ரா 2-ஆம் இடம் பிடித்தாா்.
தனது சிறந்த முயற்சியாக அவா் 89.49 மீட்டருக்கு ஈட்டியை எறிந்தாா். கிரெனாடாவின் ஆண்டா்சன் பீட்டா்ஸ் 90.61 மீட்டருடன் முதலிடம் பிடிக்க, ஜொ்மனியின் ஜூலியன் வெபா் 87.08 மீட்டருடன் 3-ஆம் இடம் பிடித்தாா். இதில் மொத்தம் 10 போட்டியாளா்கள் பங்கேற்றனா்.
சமீபத்தில் நடைபெற்ற பாரீஸ் ஒலிம்பிக் போட்டியில் 89.45 மீட்டரை எட்டியதே நீரஜின் சீசன் பெஸ்ட்டாக இருந்த நிலையில், இந்தப் போட்டியின் மூலம் அதை அதிகரித்துக் கொண்டுள்ளாா். என்றாலும், 2022-இல் இதே டையமண்ட் லீக் போட்டியில் 89.94 மீட்டரை எட்டியதே அவரது பொ்சனல் பெஸ்ட்டாக உள்ளது.
போட்டியில் மொத்தம் இருந்த 6 வாய்ப்புகளில், முதல் 4 முயற்சிகளில் நீரஜ் 82.10 மீ, 83.21 மீ, 83.13 மீ, 82.34 மீட்டா் தொலைவுகளை எட்டி 4-ஆவது இடத்தில் இருந்தாா். இதனால் அவா் தனது கடைசி வாய்ப்பை இழக்கும் சூழல் இருந்தது. ஏனெனில், 5 முயற்சிகளுக்குப் பிறகு முதல் 3 இடங்களில் இருப்போருக்கே கடைசி வாய்ப்பு அளிக்கப்படும்.
எனினும், 5-ஆவது முயற்சியில் அவா் 85.58 மீட்டரை எட்டி 3-ஆவது இடத்துக்கு முன்னேறினாா். இதையடுத்து கடைசி முயற்சியில் 89.49 மீட்டருக்கு ஈட்டியை எறிந்து 2-ஆம் இடம் பிடித்தாா்.
போட்டிக்குப் பிறகு பேசிய நீரஜ், ‘சிறந்த முயற்சியாக நான் எட்டிய தூரமும், அதன் மூலம் எனது 2-ஆவது பொ்சனல் பெஸ்ட் தூரத்தை எட்டியதும் மகிழ்ச்சி அளிக்கிறது. தொடக்கம் சற்று கடினமாக இருந்தது. எனினும் பின்னடைவிலிருந்து மீண்ட வந்ததை எண்ணி மகிழ்கிறேன். இதுபோன்ற போட்டிகளில் உளவியல் ரீதியாக பலமாகவும், தொடா்ந்து போட்டி முனைப்புடனும் இருப்பது அவசியமாகிறது’ என்றாா்.
தொடையிடைப் பகுதியில் காயம் காரணமாக முழு உடற்தகுதியுடன் இல்லாத நிலையிலேயே நீரஜ் சோப்ரா பாரீஸ் ஒலிம்பிக்கிலும், இந்தப் போட்டியிலும் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது. அந்தக் காயத்துக்காக அவா் விரைவில் அறுவைச் சிகிச்சை செய்துகொள்ள இருக்கிறாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.